பொது அமைதியைச் சீர்குலைக்க நினைக்கும் சமூக விரோதிகளின் சதி முயற்சிகளுக்கு இடமளிக்க வேண்டாம்! தொல். திருமாவளவன் வேண்டுகோள்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பரவாக்கோட்டை என்னுமிடத்தில் நேற்று (29-04-2010) இரவு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடியேற்று விழா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, மன்னார்குடியிலிருந்து அக்கிராமத்திற்குச் சென்றபோது சற்றும் எதிர்பாராத நிலையில் ஒரு கும்பல் திடீரென கற்களை வீசி வன்முறையில் ஈடுபட்டது.



இந்தக் கல்வீச்சில் எனக்கு எந்தப் பாதிப்பும் இல்லையென்றாலும், என்னுடன் வந்த விடுதலைச்சிறுத்தைகளின் கார்கள் சேதமடைந்தன. 10க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். சிறுத்தை ஆனந்தன் என்பவர் தலையில் காயமுற்று கால் எலும்பு முறிந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்தக் கிராமத்தில் உள்ள தலித்துகள் மிகவும் சிறுபான்மையினராக உள்ள நிலையில் அவர்கள் முதன்முறையாக விடுதலைச்சிறுத்தைகள் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டதை பொறுத்துக்கொள்ள முடியாத சாதி இந்துக்கள் கொடி ஏற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அங்கு வைக்கப்பட்டிருந்த விளம்பரத் தட்டிகளைக் கிழித்துக் கொடிக் கம்பத்தை அகற்றியுள்ளனர் என்பது பின்னர் தெரிய வந்தது. சனநாயக நாட்டில் யாரும் எந்தக் கட்சியிலும் உறுப்பினர் ஆகலாம் என்கிறபோது, அங்குள்ள தலித்துகள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் சேருவதை அனுமதிக்காமல் கொடியேற்றுவதற்காகச் சென்ற என்னோடு வந்த தோழர்கள் மீது இத்தகைய தாக்குதலை நடத்தியிருப்பது மிகவும் வன்மையான கண்டனத்திற்குரியதாகும்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலித் மக்களை முன்னிறுத்திப் போராடுகிற கட்சி என்றாலும் ஒட்டுமொத்தத் தமிழர்களின் நலன்களுக்காகக் குரல் கொடுக்கும் தமிழ்த் தேசிய இயக்கமாகும். இத்தகைய அரசியல் புரிதல் இல்லாத ஒரு சிலர் விடுதலைச் சிறுத்தைகளைப் பகையாகக் கருதுவதும் தலித் மக்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடுவதும் வேதனைக்குரியதே ஆகும். அரசியல் புரிதல் உள்ள ஆய்வாளர்களின் பார்வையில் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் ஒரு சாதியவாத இயக்கமல்ல என்பது உணரப்பட்டுள்ளது. எனவே இத்தகைய புரிதல் இல்லாதவர்கள் செய்யும் வன்முறைகளுக்காக விடுதலைச் சிறுத்தைகள் துளியளவும் உணர்ச்சிவயப்பட வேண்டாமெனவும், சாலைமறியல், ஆர்ப்பாட்டம் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாமெனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். அதே கிராமத்தைச் சார்ந்த மற்றும் அப்பகுதிகளைச் சார்ந்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லக்கண்ணு அவர்களும் தொலைபேசியில் தொடர்புகொண்டு நடந்த சம்பவத்தை விசாரித்தபோது தத்தமது வருத்தத்தையும் வெளிப்படுத்தினர். அத்துடன் அத்தகைய வன்முறைப் போக்கையும் கண்டித்துள்ளனர். பொதுவான அரசியல் புரிதல் இல்லாத ஒரு சிலர் நடந்துகொண்ட வன்முறைப் போக்குக்காக சமூகத்தில் பொது அமைதியைச் சீர்குலைக்க நினைக்கும் சமூக விரோதிகளின் சதி முயற்சிகளுக்கு நாம் இடமளிக்கக் கூடாது. எனவே விடுதலைச் சிறுத்தைகள் அனைவரும் கட்டுப்பாடு காத்து கட்சிப் பணிகளில் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இது தொடர்பாக ஆங்காங்கே சாலைமறியலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ள விடுதலைச்சிறுத்தைகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டுமென தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்..




1 கருத்துகள்:

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

http://www.thalaivan.com

Hello

you can register in our website http://www.thalaivan.com and post your articles

install our voting button and get more visitors

Visit our website for more information http://www.thalaivan.com

3 மே, 2010 அன்று 3:51 AM comment-delete

கருத்துரையிடுக