அம்பேத்கர், பெரியார் ஆகியோருக்கு புதிய சட்டப்பேரவை மண்டபத்தில் சிலை வைக்க வேண்டும்

வீரன் சுந்தரலிங்கம், அயோத்திதாசர் ஆகியோருக்கு அரசு மணி மண்டபம் அமைக்க வேண்டும்; காயிதே மில்லத் பெயரில் விருது வழங்க வேண்டும். அபகரிக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும்.
 
அம்பேத்கர், பெரியார் ஆகியோருக்கு புதிய சட்டப்பேரவை 
மண்டபத்தில் சிலை வைக்க வேண்டும்.
புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் 2007-ம் முதல் ஆண்டுதோரும் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இவ்வாண்டு இச்சிறப்புமிகு விழா சென்னையை அடுத்த மறைமலை நகரில் நடைப்பெற்றது.



தமிழக முதல்வர் திரு.கலைஞர் அவ்ர்களுக்கு அம்பேத்கர் சுடர் விருதும், திராவிடர் கழகத்தலைவர் கீ.வீரமணிக்கு பெரியார் ஒளி விருதும்,தலித் மக்களுக்காக பாடுபட்ட கிருட்டிணம்மாள் ஜெகன்னாதனுக்கு காமராஜர் கதிர் விருதும்,கவிஞர் அப்துல்ரகுமானுக்கு காயிதே மில்லத் பிறை விருதும்,ஞான அலாய்சியசுக்கு அயோத்திதாசர் ஆதவன் விருதும்,மறைந்த தேவநேயப்பாவாணருக்கு (வாரிசு தேவமணி) செம்மொழி ஞாயிறு விருதும்,பாராட்டுப்பட்டயமும்,ரூ.50 ஆயிரம் பொற்கிழியும் வழங்கப்பட்டது.

விருது பெற்றவர்களை வரவேற்று பேசிய விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் விருது பெறுபவர்களின் வாழ்நாள் சாதனைகளையும், விருதுகள் வழங்கப்படுவதின் அவசியத்தையும் எடுத்துக்கூறினார்.
முதல்வர் கருணாநிதிக்கு அம்பேத்கர் சுடர் வழங்குவதன் காரணத்தை திருமா கூறுகையில், தலித் அல்லாத தலித் மக்களின் நலனுக்காக சேவை புரிந்தமைக்காக வழங்கப்படுவதை, விடுதலைச்சிறுத்தைகள் கட்சி கொள்கையாக கொண்டுள்ளது என்றார். அருந்ததிய மக்களுக்கு 3 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கியமைக்காவும், புதிரை வண்ணார் வாரியம் உருவாக்கி அருந்ததியின மக்களின் வாழ்க்கை வளம் பெற வித்திட்டமைக்கு முதல்வர் அவ்ர்களுக்கு அம்பேத்கர் சுடர் விருதை காணிக்கையாக்குவதாகவும் கூறினார்.

இந்த விருது ஜொலிக்கும் விருது அல்ல உழைப்பவர்களின் வியர்வைத்துளிகளிலிருந்து உருவாக்கப்பட்டு வழங்கப்பட்ட விருது. இந்த விருது வழங்கும் நன்னாள் விடுதலைச்சிறுத்தைகளின் வரலாற்றில் பொண்னெழுத்துக்களால் பொறிக்கப்படும் நாள் என எழுச்சித்தமிழர் பேசினார்.

முதல்வரிடம் எழுச்சித்தமிழர் அவர்கள் சில முக்கிய கோரிக்கைகள் வைத்தார் அவை கீழ வருமாறு
  • தேவேந்திர குலத்தைச்சேர்ந்த வீரன் சுந்தரலிங்கத்துக்கு நினைவு மண்டபம் அமைக்க வேண்டும்.
  • இம்மானுவேல் சேகர் தபால்தலை வெளியிட வேண்டும்,
  • காயிதேமில்லத் பெயரில் தமிழக அர்சு விருது வழங்க வேண்டும்,
  • பஞ்சமி நிலங்களை மீட்பதற்கு தனி ஆணையம் அமைக்க வேண்டும்,
  • புதிய சட்ட பேரவை வளாகத்தில் அம்பேத்கருக்கும் பெரியாருக்கும் சிலை நிறுவவேண்டும், என்ற கோரிக்கைகளை முதல்வர் முன் வைத்தார்.
கலைஞர் கருணாநிதி பேசும் போது....

இன்று நம்முடைய அருமைத் தம்பி திருமாவளவன் அவர்களுடைய பெரும் முயற்சியால் எங்களுக்கெல்லாம் விருதுகள் வழங்கப்பட்டு பல்லாயிரக்கணக்கிலே குழுமியிருக்கின்ற உங்களையெல்லாம் காண்பதற்கான வாய்ப்பும் உருவாக்கப்பட்டு; தம்பி திருமாவளவனுடைய போர்முரசத்தை ஒத்த சொற்பொழிவைக் கேட்கின்ற அளவிற்கு இந்த மாபெரும் பொதுக்கூட்டம் ஏறத்தாழ ஒரு மாநாடு போல நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மறைமலை நகர், தமிழர்களின் சமூக ஒற்றுமையை, இன எழுச்சியை, மொழிப்பற்றை எடுத்து விளக்கும் பெயராகும். இந்த பெயரால், தி.மு.க. ஆட்சி தொடங்கியவுடனே சென்னை சைதாப்பேட்டையில் மறைமலை அடிகள் பாலம் உருவாக்கப்பட்டது. அதையடுத்து சென்னை மக்களின் நெருக்கடியை குறைப்பதற்காக புறநகரில் அமைக்கப்படும் துணை நகரத்துக்கு என்ன பெயர் சூட்டலாம் என்று யோசித்தபோது நாங்கள் தெரிவித்த பெயர்தான் மறைமலைநகர்.

தனித்தமிழுக்கு பெருமை சேர்த்த மறைமலை அடிகளார் பெயருக்கு புகழ் சேர்க்கும் வகையில் மக்கள் கடலைக் கூட்டி மாநாடு போல் நடக்கும் இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்த தம்பி திருமாவளவனுக்கும், அவருடன் இணைந்து பணியாற்றிய ரவிக்குமார் போன்ற அருமை தோழர்களுக்கும், நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். விருதினை நாங்கள் பெற்றுக் கொண்டதற்காக நன்றி தெரிவிப்பதாக திருமாவளவன் சொன்னார். நாங்களும் அவருக்கும், இந்த அமைப்புக்கும், நன்றி தெரிவித்துகொள்கிறோம்.

இங்கு வழங்கப்பட்ட அனைத்து விருதுகளும் ஒளிமயமான விருதுகள்தான். எனக்கு அம்பேத்கார் சுடர் விருது வழங்கப்பட்டது. சுடர் என்றாலும் ஒளி என்றாலும் ஒன்றுதான். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு பெரியார் ஒளி விருது வழங்கப்பட்டது. சுடருக்கு ஒளி என்ற பெயரும் உண்டு. கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதனுக்கு காமராஜர் கதிர் விருது வழங்கியுள்ளனர். கதிர் என்றாலும் ஒளிதான். கவிஞர் அப்துல் ரகுமானுக்கு காயிதே மில்லத் பிறை விருது வழங்கப்பட்டுள்ளது. பிறைக்கு ஒளி உண்டு. ஞான.அலாய்சியசுக்கு அயோத்திதாசர் ஆதவன் விருது வழங்கியிருக்கிறார்கள். ஆதவனும் ஒளி வழங்கக்கூடியது. தேவநேய பாவாணருக்கு, செம்மொழி ஞாயிறு விருது வழங்கியிருக்கிறார்கள். ஞாயிறு என்றால் சூரியன்தான். அதுவும் ஒளிதான். எனவே இங்கு எல்லோருக்கும் ஒளிமயமான விருதுகளை திருமாவளவன் வழங்கியிருக்கிறார். இந்த விழாவில் அவர் பேசும்போது சில கோரிக்கைகளை முன்வைத்தார். தற்போது, சட்டமன்றம் நடந்து கொண்டிருப்பதால், கோரிக்கைகளை நிறைவேற்றுவதை பற்றி அறிவிக்க முடியாது.அவற்றை தேர்தல் வாக்குறுதிகளாக மாற்ற விரும்புகிறேன். 6-வது முறையும் நான்தான் முதல்வராவேன் என்று தம்பி திருமாவளவன் உறுதிபட கூறியுள்ளார். அப்படி வரும்போது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேறும். உங்களது கோரிக்கைகள் அனைத்தையும் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கத் தயாராக இருக்கிறேன்.

பஞ்சமர், பறையர், பள்ளர் என்று சொல்லப்படுகின்ற எனது அருமை ஆதி திராவிட மக்கள் வாழ்வதற்காக ஒதுக்கப்பட்ட நிலம்; உரிமையாக்கப்பட்ட நிலம். இவைகளை யார் அபகரித்தாலும், அவர் நீதிபதியாக இருந்தாலும் சரி, அல்லது முன்னாள் முதலமைச்சராக இருந்தாலும் சரி இப்பொழுது எங்கே வாழ்ந்தாலும் சரி அவை-களையெல்லாம் மீட்டுக்கொடுக்க வேண்டிய கடமை எனக்கும் இருக்கிறது, தம்பி திருமாவளவனுக்கும் இருக்கிறது, அம்மையார் கிருஷ்ணம்மாள் ஜெகநாதனுக்கும் இருக்கிறது. அதை மீட்டுக் கொடுப்போம், நம்முடைய உரிமைகளையெல்லாம் மீட்போம், நாம் ஒரு காலத்திலே வாழ்ந்து செழித்து, வாரி வழங்கி எப்படியெல்லாமோ உலக மெச்ச வாழ்ந்தவர்கள் இன்றைக்கு பட்டினி கிடக்கின்றோம். பாயில் படுத்து உறங்குவதற்குகூட வழியில்லை, தரையில் படுத்து உறங்குகிறோம் என்றெல்லாம் நெஞ்சு நெக்குருக நம்முடைய திருமாவளவன் அவர்கள் இங்கே பேசினார். அந்தக் காலம் மாறுவதற்குத்தான் கழகம் பாடுபடுகிறது. அந்தக் கழகத்தை நம்பித்தான் நம்முடைய தம்பி திருமாவளவன் அவர்கள் என்னோடு கை கோத்து நிற்கின்றார். அந்த நம்பிக்கை வீண் போகாமல்; நிச்சயமாக நாம் விடுதலை பெறுவோம், நாம் பெற்றிருக்கின்ற விடுதலையை வெள்ளைக்காரனிடம் இருந்து பெற்றிருக்கின்ற விடுதலையில் நாம் இனி பெற வேண்டிய விடுதலை சமுதாயத்திலே இருக்கின்ற கொள்ளைக்காரர்களிடமிருந்து பெறவேண்டிய விடுதலை. அந்த விடுதலையைப் பெற என்றென்றும் உங்களுடைய கரம் கோத்து தி.மு.கழகம் நிற்கும், திராவிடர் கழகம் நிற்கும், இன்றைக்கு விருதுகள் பெற்றவர்கள் அத்தனைபேரும் நிற்போம் என்று உறுதி அளித்து, பரிசை வழங்கிய உங்களையெல்லாம் மீண்டும் மீண்டும் நன்றியுணர்வோடு பாராட்டுகின்றேன்.

எங்களிடம் பெற்ற பரிசு சாதாரண விருது என்று அவரே சொன்னார். நான் இதை சாதாரண விருது என்று கருதவில்லை. என்னுடைய சகோதரர் அளித்த விருதை நான் சாதாரண விருது என்று கருதமாட்டேன். என்னுடைய தாய் வீட்டில் கிடைத்த அன்பளிப்பைப் போல இதை நான் கருதுகிறேன் என்று கூறி விடைபெறுகிறேன். இவ்வாறு முதல்வர் கலைஞர் அவர்கள் உரையாற்றினார்.

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பேசும் போது....

தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் முதல்வர் கலைஞர் அவர்களுக்கு இன்னும் என்ன விருது கொடுக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த அளவுக்கு அவர் அயராமல் பணியாற்றிக் கொண்டிருக்கின்-றார்கள். அவர் திராவிடர் இயக்கத்தின் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தலைவர்.

இவ்வளவு சிறப்பு மிக்க இந்த மறைமலை நகரிலே மலையில் கொண்டு வந்து கடலை சங்கமித்திருக்கிறார், இளைய சமுதாயத்தினருக்காகப் பாடுபட்டுக் கொண்டு வருகின்ற லட்சிய வீரர் தொல்.திருமாவளவன் அவர்கள்.

நம்முடைய முதல்வர் அவர்கள் இந்த 87 வயதிலும் சுறுசுறுப்பாக இளைஞரைப் போல் உழைத்துக் கொண்டு வருகின்றார். இவர் எப்படி இப்படி உழைக்கிறார்? எப்பொழுது உறங்குகிறார்? எப்பொழுது விழிக்கிறார்? எப்பொழுது எழுதுகிறார்? என்பதே வியப்புக்கும் ஆய்வுக்கும் உரிய செய்தியாகும். அவருக்கு விடுதலை சிறுத்தைகள் சார்பில் அம்பேத்கர் சுடர் விருது வழங்கி சிறப்பித்திருக்கிறார்கள்.

இங்கு விருது வழங்கி சிறப்பிக்கப்பட்ட அனைவரும் எத்தகைய பெருமைக்குரியவர்கள் என்பதை சகோதரர் தொல். திருமாவளவன் விளக்கினார். விழுதுகள் வேர்களுக்கு விருதுகளை வழங்கி சிறப்பு செய்திருக்கிறது. அதற்குக் காரணம் அந்த அளவுக்கு வேர்கள் மிகச் சரியாக இருக்கின்றன.

திராவிடர் இயக்கத்தைப் பற்றி இன எதிரிகளுக்குத் தெரியும். திராவிடர் இயக்கம் யார் என்பது அவர்களுக்குத் தெரியும். இன்றைக்கு அந்த திராவிடர் இயக்கத்தோடு இப்பொழுது விடுதலைசிறுத்தைகளும் இணைந்திருக்கின்றன என்பதை எதிரிகள் புரிந்துகொள்ள வேண்டும்.

திரிசூலத்தைக் காட்டி மிரட்டிய கூட்டம் அந்தக் கூட்டம். நாங்கள் ஒரே இயக்கம் போல இருந்து ஒரே இலக்கை நோக்கிச் செல்லக் கூடிய சமுதாய விடுதலைக்காகப் பாடுபடக் கூடியவர்கள்.

அரசியலிலே போடப்பட்ட விலங்கு கைகளிலே உள்ள விலங்கு பளிச்சென்று தெரியும். அதே போல பொருளாதார அடித்தளத்தைக் கொண்டு போடப்பட்ட விலங்கு. அது கால்களிலே போடப்பட்ட விலங்கு. கண்ணுக்குப் பளிச்சென்று தெரியும். ஆனால் மூளையிலே போடப்பட்டிருக்கின்ற விலங்கு இருக்கிறதே அது அவ்வளவு சுலபமாக கண்ணுக்குத் தெரியாது. அது பண்பாட்டுப் படையெடுப்பினாலே வர்ணாசிரம தர்ம அடிப்படையிலே போடப்பட்ட விலங்கு. அது மூளையில் போடப்பட்ட விலங்கு. அவ்வளவு சுலபமாக கண்ணுக்குத் தெரியாது.

அப்படிப்பட்ட சமுதாயக் கொடுமைகளைக் கொண்ட அந்த விலங்கை மனிதனுடைய மூளையிலே போடப்பட்ட விலங்கை சம்மட்டியால் அடித்து உடைத்தெறிந்தவர்தான் தந்தை பெரியார் அவர்களும் அண்ணல் அம்பேத்கர் அவர்களும் ஆவார்கள். தந்தை பெரியார் அவர்களும், அண்ணல் அம்பேத்கர் அவர்களும் அந்த வகையில் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்றால் மிகையாகாது.

இருவருடைய கொள்கை லட்சியத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் ஒரு செய்தியை எழுதி கீழே தந்தை பெரியார் என்று போடலாம். அதே வரிச் செய்திகளை எழுதி கீழே அண்ணல் அம்பேத்கர் என்று போடலாம். இருவருடைய லட்சியமும், குறிக்கோளும் ஒன்றுதான். அந்தக் கொள்கைகளை நீங்கள் முன்னெடுத்துச் செல்லக் கூடியவர்கள். தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் ஜாதி ஒழிந்த சமத்துவ சமுதாயம் மலரவேண்டும் என்பதற்காக பாடுபட்ட தலைவர்கள்.

அண்ணல் அம்பேத்கர் அவர்கள் ஜாதிக் கொடுமையைப் பற்றிச் சொல்லும்பொழுது ஒன்றைச் சொன்னார். Graded In equality ஜாதிக் கொடுமை எப்படியிருக்கிறது என்று சொன்னால், ஏணிப்படி அடுக்குமுறையாக இருக்கிறது என்று சொன்னார்கள்.

எனக்கு மேலே ஒரு ஜாதி இருக்கிறது என்பதைப் பற்றி மனிதர்களுக்குக் கவலை இல்லை. எனக்குக் கீழே இன்னொரு ஜாதி இருக்கிறது என்பதிலே இவர்களுக்கு மகிழ்ச்சி. அந்த ஜாதி வர்ணாஸ்ரம அடுக்கு முறை ஒழியவேண்டும் என்பதற்காக பாடுபட்டவர்கள் தான் தந்தை பெரியார் அவர்களும், அண்ணல் அம்பேத்கர் அவர்களும்.

மேடையிலே அமர்ந்திருக்கிறவர்களுக்கு விருதுகளை வழங்கினார்கள். இது தகதகவென்று ஜொலிக்கின்ற விருதுகள் அல்ல. ஏழை, எளிய, பாட்டாளி, உழைப்பாளி மக்கள் சிந்திய வியர்வைத் துளிகளை வழங்கப்பட்ட விருதுகளிலே காண முடிகிறது.

இந்தக் கூட்டம் உழைக்கின்ற கூட்டம். பிழைக்கக் கூடிய கூட்டமல்ல.

நாம் கலைஞர் அவர்களுடைய ஆட்சிக்கு கவசமாக என்றைக்கும் இருப்போம். இந்த ஆட்சியை யாராலும் எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது.

இதே மறைமலைநகரிலே அருமைச் சகோதரர் தொல்.திருமாவளவன் அவர்கள் ஈழத் தமிழர் பிரச்சினைக்காக சாகும் வரை உண்ணாவிரதம் என்று அறிவித்து உண்ணாவிரதம் இருந்தார். முதல்வர் கலைஞர் இந்தச் செய்தியைப் பார்த்து துடிதுடித்துப் போய் என்னிடம் பேசினார். இவர்கள் இருவருக்கிடையிலே ஒரு வகையிலே பாலமாகப் பயன்படக் கூடியவன்.

உடனே மறைமலைநகருக்கு வந்தோம். திருமாவளவன் அவர்களை சந்தித்து நீங்கள் செய்ய வேண்-டிய காரியங்கள் இன்னும் ஏராளமாக இருக்கின்றன. இந்த உண்ணாவிரதத்தால் நமக்கு உரிமை வந்துவிடாது. எனவே உண்ணாவிரதத்தைக் கைவிடுங்கள் என்று அன்றைக்கு வலியுறுத்தினோம். அதனால்தான் பல அருமையான காரியங்களை அவரால் ஆற்ற முடிகிறது. இன்றைக்கு இவ்வளவு பெரிய மாநாட்டையும் நடத்திக் கொண்டிருக்கின்றார்.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட நம்மின மக்களிடையே ஒரு கோடு போட்டு பிரிக்கலாம் என்று சிலர் நப்பாசைப்படுகிறார்கள். அது நடக்காது. நம் மக்களிடையே சமத்துவம் ஏற்படத்தான் கலைஞர் பாடுபட்டு வருகின்றார்.
அருந்ததியினர் மீது கலைஞரின் பார்வை பட்டது. அவர்-களுக்கு இன்றைக்கு உள் ஒதுக்கீடு வழங்கி மாபெரும் சமுதாய மாறுதலை செய்திருக்கின்றார். ஒரு துளி ரத்தம் சிந்தாப் புரட்சி அது.

அது போலவே, புதிரை வண்ணாருக்குத் தனி வாரியம் அமைத்தார் கலைஞர். புதிரை வண்ணார் யார் தெரியுமா? இந்த செய்தி மண்டல் கமிஷன் குழு கொடுத்த அறிக்கையிலே இருக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்களை விட மிக மோசமான நிலை.

திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆறு ஓடுகிறது. உயர் ஜாதிக்காரர்களுடைய துணிகளை வெளுக்க அழுக்குத் துணிகளை வாங்கிக் கொண்டு நள்ளிரவு 12 மணிக்கு மேல் யாருடைய கண்களுக்கும் புலப்படாமல் பொழுது விடிவதற்குள் விடியற்காலை 2 மணிக்குள்ளாக தாமிர பரணி ஆற்றிலே அந்த அழுக்குத் துணிகளை எல்லாம் துவைத்து எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து யாருடைய கண்களிலும் படாமல் அதை உலர்த்திவிட வேண்டும். இதுதான் அவர்களுடைய அன்றாட வேலை.

இவர்கள் Untouchability என்று சொல்லக்கூடிய-வர்கள் அல்ல. Unseeability என்று சொல்லக்கூடிய, கண்-களிலே பார்க்கக்கூட அருகதை அற்ற சமுதாயத்-தைச் சார்ந்தவர்கள் என்று கருதிய காலம். அத்தகைய சமுதாயத்தைச் சார்ந்த புதிரை வண்ணார் சமுதாயத்திற்கு நலவாரியம் அமைத்தவர் முதல்வர் கலைஞர் அவர்கள்.

எனவே நமக்குள்ளே என்றைக்கும் பேதமிருக்கக்கூடாது. ஜாதி அற்ற, மதம் அற்ற, மத மாச்சர்யங்கள் அற்ற மனித குலம் ஒன்று என்று எண்ணுகிற எண்ணம் நம்மிடையே தழைக்கவேண்டும். திராவிடர் இயக்கமும் அதற்காகத்தான் பாடுபட்டு வருகிறது. கலைஞர் அவர்களும் அதற்காகத்தான் பாடுபட்டு வரு-கிறார்கள். பெரியார் ஒளி விருது வழங்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமா-வளவன் அவர்களுக்கும், விடுதலைச் சிறுத்தை-களுக்-கும் எங்களுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி உரையாற்றினார்.

இச்சிறப்புமிகு விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர்கள் சிந்தனை செல்வன், ரவிக்குமார், கலைக்கோட்டு உதயம் , தலைமை நிலையச் செயலாளர் வன்னியரசு மற்றும் அமைச்சர்கள் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டார்கள். முன்னதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் காஞ்சீபுரம் மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலை செழியன் வரவேற்புரையாற்றினார். மாவட்ட துணை செயலாளர் தென்னவன் நன்றி கூறினார்.

1 கருத்துகள்:

1.அம்பேத்கர் -படம் தமிழில் வெளிவர -பல தடைகள் உள்ளது .அது பற்றிய கோரிக்கையை எதிர்பார்தோம் !!!

படம் வெளிவர -பாராளுமன்றத்தில் குரல்கொடுக்க வேண்டுகிறோம் !!!


2.தாழ்த்தப்பட்டோருக்கான துணைத் திட்டத்தின்கீழ் 3,828 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.எனவே -நல்ல -நேர்மையான - ஆதிதிராவிடர் மக்கள் மீது -உண்மையான -அக்கறை கொண்ட தொலைநோக்கு திட்டங்களை செயல் படுதுக்கின்ற அதிகாரிகளை நியமிக்க கோரிக்கையை எதிர்பார்தோம் - !!

-த சேகர்

மருதிபட்டி -அஞ்சல்

அரூர் -வட்டம்

15 ஏப்ரல், 2010 அன்று 11:17 PM comment-delete

கருத்துரையிடுக