தாயார் பார்வதி அம்மாவிற்கு சிகிச்சை மறுப்பு: மத்திய அரசை கண்டித்து திருமாவளவன் ஆர்ப்பாட்டம்
தமிழ் ஈழ விடுதலை இயக்க தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் சிகிச்சை பெற சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்திற்கு வந்த அவரை அதே விமானத்தில் மலேசியாவுக்கு திருப்பி அனுப்பி விட்டனர். பிரபாகரனின் குடும்பத்தினர் தமிழகத்தில் தங்குவதற்கு அனுமதி இல்லை என்று கூறி திருப்பி விட்டதாக கூறப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக மத்திய அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் இன்று நடந்தது. கட்சித்தலைவர் தொல். திருமாவளவன் தலைமை தாங்கினார். மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை அவர் எழுப்பினார். தொண்டர்கள் மத்தியில் பேசினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ் ஈழ தேசிய தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மையார் கடந்த 16-ந்தேதி மருத்துவ சிகிச்சைக்காக சென்னை வந்தார். பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதற்காக விமானம் மூலம் சென்னை வந்தார். அவரை இந்திய குடியுரிமை அதிகாரிகள் விமானத்தை விட்டு கீழே இறங்க விடாமல் திருப்பி அனுப்பி விட்டனர். அவர் திருப்பி அனுப்பப்படுவதற்கு 2003-ம் ஆண்டு விதிக்கப்பட்ட தடை ஆணைதான் காரணம்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பிரபாகரனின் பெற்றோர் வேலுப்பிள்ளை, பார்வதி அம்மாள் திருச்சியில் தங்கி இருந்தார்கள். 2002-ம் ஆண்டு இலங்கையில் போர் நிறுத்தம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஏ-9 நெடுஞ்சாலை திறக்கப்பட்டது. அப்போது உலகம் முழுவதும் உள்ள புலம் பெயர்ந்த தமிழர்கள் தாயகம் திரும்பினார்கள். அது போல திருச்சியில் தங்கி இருந்த பிரபாகரனின் பெற்றோர்களும் யாழ்ப்பாணம் சென்றார்கள்.
அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்தவர்கள் பிரபாகரனின் பெற்றோர் திரும்பி வராமல் இருக்க மத்திய அரசிடம் விண்ணப்பித்தனர். வார்னிங் சர்க்குலர் என்ற அடிப்படையில் அவர்கள் தமிழகத்திற்கு திரும்ப வராமல் இருக்க தடை ஆணை பிறப்பிக்கப்பட்டது.
கணவனை இழந்து நோயில் அவதிப்பட்டு வரும் பார்வதி அம்மையாருக்கு மருத்துவ சிகிச்சை பெற வழிவகை செய்ய வேண்டும்.
இந்த பிரச்சினை சட்ட மன்றத்தில் எழுப்பப்பட்ட போது முதல்-அமைச்சர் கலைஞர், பார்வதி அம்மாள் மீண்டும் தமிழகம் வந்து சிகிச்சை பெற விரும்பினால் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் சிகிச்சை பெற இந்திய அரசு பிறப்பித்த தடை உத்தரவை திரும்ப பெற வேண்டும். தடை ஆணையை திரும்ப பெற முதல்-அமைச்சர் கடிதம் எழுத வேண்டும்.
தமிழ்தேசிய தலைவர் மேதகு பிரபாகரனை பற்றி பேசுவதற்கு சுப்பிரமணிய சுவாமிக்கு எந்த தகுதியும் இல்லை. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் வன்னி அரசு, மாநில பொருளாளர் முகம்மது யூசுப், மடிப்பாக்கம் வெற்றிச் செல்வன், இரா. செல்வம், மத்திய சென்னை மாவட்ட தலைவர் வீரமுத்து, வக்கீல் எழில் கரோலின், ஆர்வலன், வணிகர் அணி இளங்கோ உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
-











0 கருத்துகள்:
கருத்துரையிடுக