8ம் தேதி வேலூர் சிறை முன்பு போராட்டம் நடத்தப்படும்


‘‘முருகன், சாந்தன், பேரறிவாளனின் தூக்கு தண்டனையை ரத்து செய்யாவிட்டால், வரும் 8ம் தேதி வேலூர் சிறை முன்பு போராட்டம் நடத்தப்படும்’’ என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். ‘தமிழர் பாதுகாப்பு இயக்கம்’ சார்பில் மரண தண்டனை ஒழிப்பு மாநாடு மறைமலை நகரில் நேற்று மாலை நடந்தது. பாமக தலைவர் மணி தலைமை வகித்தார். 


விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசுகையில், ராஜிவ் காந்தி கொலையில் பேரறிவாளன் உட்பட 3 பேருக்கும் தொடர்பில்லை. புலிகள் மீது தடை விதிக்க வேண்டும் என முதலில் குரல் கொடுத்தவர் ஜெயலலிதா. இப்போது எந்த நோக்கத்துக்காக இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுகிறார்? எல்லாம் அழிந்து விட்ட நிலையில், அங்கு எந்த பயனும் இல்லை என்பதை தெரிந்துதான் தீர்மானம் நிறைவேற்றுகிறார் என்றார்.
மாநாட்டில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:


முருகன், சாந்தன், பேரறிவாளன் உயிரை பாதுகாக்க 2 நாளில் முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம். தமிழக ஆளுநரை சந்தித்து, இந்த தூக்கு தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்த வேண்டும். தமிழக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், வரும் 6ம் தேதி தமிழ் பாதுகாப்பு இயக்கம் சார்பில் 8 திசைகளில் இருந்து வேலூரை நோக்கி பயணம் மேற்கொண்டு, 8ம் தேதி 10 லட்சம் பேர் வேலூர் சிறை முன்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.


மாநாட்டில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், பாவலர் அறிவுமதி, தோழர் வே.ஆணைமுத்து, விடுதலை ராசேந்திரன்,  பாமக முன்னாள் எம்எல்ஏ மூர்த்தி, விடுதலை சிறுத்தை கட்சி செய்தி தொடர்பாளர் வன்னியரசு, தகடூர் தமிழ்செல்வன். மடிப்பாக்கம் வெற்றிச் செல்வன், மாவட்ட துணை செயலாளர் தென்னவன், பொருளாளர் இளைவளவன், பாமக மறைமலை நகராட்சி தலைவர் சசிகலா ஆறுமுகம், கவுன்சிலர் ரகுபதி உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

-
மரண தண்டனை ஒழிப்பு மாநாட்டின் தீர்மானங்கள்


தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரும் தங்களுது தண்டனையைக் குறைக்கக் கோரி குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய கருணை மனு 11 ஆண்டுகளுக்கு பிறகு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு குடியரசு தலைவர்களாக இருந்த, மறைந்த கே.ஆர்.நாராயணன் அவர்களும், திருமிகு.அப்துல்கலாம் அவர்களும் இவர்களின் கருணை மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பிய பரிந்துரையை ஏற்காத நிலையில், தற்போதைய குடியரசுத் தலைவர், கருணை மனுக்களைத் தள்ளுபடி செய்துள்ளார். இதனையடுத்து பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் செப்டம்பர் 9 ஆம் தேதி தூக்கிலிடப்படுவர் என்று அவர்கள் அடைக்கப்பட்டுள்ள வேலூர் நடுவண் சிறை நிருவாகம் அறிவித்துள்ளது.

20 ஆண்டுகளுக்கும் மேல்லாகச் சிறைத் தண்டனை அனுபவித்துவிட்ட பேரறிவாளன், சாந்தன் , முருகன் ஆகியிரைத் தூக்கிலிடுவது, அவர்களுக்கு வழங்கப்படும் இரண்டாவது தண்டனையாக அமைந்துவிடும். இது இயற்கை நீதிக்கு எதிரானது. இராஜீவ்காந்தி படுகொலையின் பின்னணி சதி குறித்த விசாரணை இன்னும் முடிவடையாத நிலையில் , இவர்களைத் தூக்கிலிடுவது சரியான நீதியாக இருக்காது. எனவே தான் இவர்களைத் தூக்கிலிடக்கூடாது என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், மாணவர்கள், வழக்குரைஞர்கள், கலைத்துறையினர், தமிழ் அமைப்புகள், தமிழ்அறிஞர்கள், வணிகர் சங்கத்தினர் என அனைத்து தரப்பினரும் தன்னெழுச்சியாக பல்வேறு போராட்டங்களைத் தொடர்ந்து நடத்திவருகிறார்கள்.

மக்களின் இந்த உணர்வுகளை மதித்தும், மனிதநேயத்துடனும் மூவரின் தூக்குத் தண்டனையை இரத்து செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பேரறிவாளன் உள்ளிட்ட மூவரையும் தூக்கிலிடுவதற்கான நாள் குறிக்கப்பட்டு விட்டதால், அவர்களின் தண்டனையை நிறுத்தி வைப்பதற்கான நிருவாகத் தடையாணையை தமிழக அரசு உடனே பிறப்பிக்க வேண்டும். கேரளத்தில் பாலன் என்பவரின் கருணை மனு தள்ளுபடி செய்யப்பட்ட போது, அம்மாநில முதலமைச்சர் நம்பூதிரிபாட், சட்ட அமைச்சர் கிருட்டிணையர் ஆகியோர் விடுத்த எச்சரிக்கைக்கு பணிந்து, பாலனின் தூக்குத் தண்டனையை மத்திய அரசு இரத்து செய்தது. அதே போன்று பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் தூக்குத் தண்டனையை இரத்து செய்யும்படி மத்திய அரசை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் வலியுறுத்த வேண்டும் என்று இந்த மாநாடு கேட்டுக்கொள்கிறது.

நாகரிகம் வளர்ந்து விட்ட காலத்தில் தூக்குத் தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலித்து வருகிறது. உலகில் 139 நாடுகளில் தற்போது தூக்குத் தண்டனை நடைமுறையில் இல்லை. தண்டனைகள் குற்றம் செய்தவர்களைத் திருத்தும் வகையில் இருக்க வேண்டுமே தவிர, உயிரை பறிக்கும் வகையில் இருக்கக்கூடாது. ‘உயிரைப் பறிக்கும் அதிகாரம் எந்த அஸ்ர்சுக்கும் கிடையாது!’ என்று அண்ணல் காந்தியடிகள் கூறியுள்ளார். இதைக் கருத்தில் கொண்டு காந்தியும் புத்தரும் பிறந்த இந்த மண்ணில் மரண தண்டனையை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ளவேண்டும். மரண தண்டனையை ஒழிப்பதில் இந்தியாவிற்கே தமிழகம் வழிகாட்ட வேண்டும். அமெரிக்காவில் தூக்குத் தண்டனை இன்னும் நடைமுறையில் இருக்கும் போதிலும், அந்த நாட்டிலுள்ள 13 மாநிலங்களில் தூக்குத் தண்டனை இரத்து செய்யப்பட்டிருகிறது. அதேபோல் இந்தியாவில் தூக்குத் தண்டனையை இரத்து செய்த முதல் மாநிலம் என்ற பெருமையை தமிழகம் பெற வேண்டும். தூக்குத் தண்டனை வழங்கக்கூடிய சட்டப்பிரிவுகளை இந்திய தண்டனைச் சட்டத்திலிருந்து நீக்குவதற்கான சட்டத் திருத்த முன்வடிவை சட்டப் பேரவையில் கொண்டுவந்து நிறைவேற்றுவதன் மூலம் தமிழ்நாட்டில் தூக்குத் தண்டனையை ஒழிக்க முடியும். இதற்கான முன்முயற்சிகளை தமிழக அரசு உடனடியாக தொடங்க வேண்டும் என்று இந்த மரண தண்டனை ஒழிப்பு மாநாடு கேட்டுக்கொள்கிறது.

பேரறிவாளன், முருகன் , சாந்தன் ஆகிய மூவரின் தூக்குத் தண்டனையும் இரத்து செய்யப்பட வேண்டும் என்று தமிழகம் முழுவதும் நடைபெறும் போராட்டங்களின் மூலம் முன்வைக்கப்படும் கோரிக்கையை ஏற்று, 09-09.2011 அன்று தூக்கிலிடும் நாள் நெருங்கி வருவதால், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் போர்கால அடிப்படையில் நடவடிக்கையை மேற்கொண்டு, மூவரின் தூக்குத் தண்டனையையும் இரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த மரண தண்டனை ஒழிப்பு மாநாடு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக