பேரறிவாளன், சாந்தன் முருகன் தண்டனையைக் குறைக்கக் கோரும் தமிழகச் சட்டப்பேரவைத் தீர்மானத்திற்கு நன்றி! தூக்குக் கயிற்றிலிருந்து நிரந்தரமாக மீட்டெடுக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! தொல்.திருமாவளவன் கோரிக்கை
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டுமென்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்வருக்கு விடுதலைச் சிறுத்தைகள் நன்றி தெரிவித்துக்கொள்கிறது.
இந்த மூவரின் மரண தண்டனையைக் குறைப்பதற்கான அதிகாரம், தமிழக முதல்வருக்கு உள்ளது என்பதை உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை மேற்கோள் காட்டி விடுதலைச் சிறுத்தைகள் எடுத்துக் கூறியிருந்தது. விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட தமிழ் மக்களின் வேண்டுகோளுக்கு மதிப்பளித்து தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்திருப்பதை மனதாரப் பாராட்டி வரவேற்கின்றோம்.
தமிழகச் சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது முக்கியமானதுதான் என்றாலும் இது மட்டுமே போதாது. இந்தத் தீர்மானத்தை தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்றி அதை ஆளுநருக்கு அனுப்பி வைக்க வேண்டும். அவ்வாறு செய்தால்தான் இந்த மரண தண்டனையை நிறுத்த முடியும். மாண்புமிகு முதல்வர் அவர்கள் மத்திய உள்துறை அமைச்சகத்தின் விளக்கக் கடிதத்தைச் சுட்டிக்காட்டியிருந்தார்கள். அதன் காரணமாகத்தான் இப்போது நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்திலும் குடியரசுத் தலைவருக்கு வேண்டுகோள் விடப்பட்டிருக்கிறது என்று கருதுகிறோம். உள்துறை அமைச்சகத்தின் கடிதம் சட்டரீதியாக பொருட்படுத்தத்தக்கது அல்ல. தமிழக ஆளுநர் இப்போதும் இந்த மரண தண்டனையைக் குறைப்பதற்கு அதிகாரம் உள்ளது. எனவே மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் ஆளுநர் மூலமாகவே இந்தத் தண்டனையைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்.
தமிழகத்திலிருந்து விடைபெற்றுச் செல்லும் மேதகு ஆளுநர் பர்னாலா அவர்கள், தான் செல்வதற்கு முன்பு இந்த மூவரின் மரண தண்டனையைக் குறைத்து உத்தரவிட்டு வரலாற்றில் இடம்பெறவேண்டுமாய் வேண்டுகிறோம்.
தமிழகச் சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தையயாட்டி இந்தியப் பாராளுமன்றத்திலும் இத்தகைய தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற முன்வருமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் வேண்டுகோள் விடுக்கிறது.
அமைச்சரவைத் தீர்மானமும், நீதிமன்றத்தில் கிடைத்துள்ள இடைக்காலத் தடையாணையும் தற்காலிகமாக மட்டுமே இந்த மூவரின் உயிர்களைக் காப்பாற்றும். அந்த மூன்று உயிர்களை தூக்குக் கயிற்றிலிருந்து நிரந்தரமாக மீட்டெடுக்க தொடர்ந்தும் தமிழக மக்கள் விழிப்போடு இருந்து போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது.
(தொல். திருமாவளவன்)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக