தொல். திருமாவளவன் பிறந்த நாளில் கவியரஙகம், கருத்தரங்கம் நடைபெற்றது மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை பேராசிரியர் சுப.வீ. வழங்கினார்



     
விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்களின் பிறந்தநாளான ஆகத்து 17 புதன்கிழமை அன்று தமிழகம் முழுவதும் தமிழர் எழுச்சி நாளாக விடுதலைச் சிறுத்தைகள் கொண்டாடினர். சென்னை சாந்தோம் காது கேளார் பள்ளியில் காலை 7 மணியளவில் சுமார் 150 குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு ஒவ்வோர் ஆண்டும் தலைவரே இப்பள்ளியில் உணவு வழங்கும் நிகழ்வு நடைபெறுவது வழக்கமான ஒன்று. இவ்வாண்டு தலைவர் நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்து கொள்ள புதுதில்லியில் இருப்பதால் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் வன்னி அரசு, தமிழ்ச்செல்வன், மடிப்பாக்கம் வெற்றிச்செல்வன், சைதை பாலாஜி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் செந்தில்குமார், சாரநாத், குமரப்பா, பகலவன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை மாவட்டத் துணைச் செயலாளர் ஆ. விடுதலைச் செல்வன் ஒருங்கிணைத்தார்.

      மாலை 5 மணியளவில் தியாகராயர் நகரில் உள்ள சர் பிட்டி தியாகராயர் அரங்கத்தில் பிறந்த நாள் நிகழ்வு மிக்க எழுச்சியுடன் நடைபெற்றது. இசைப் பாலவர் தேனிசை செல்லப்பா இசை நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. மாவட்டச் செயலாளர் இளஞ்செழியன் நிகழ்ச்சிகளைத் தொகுத்தார். 7 மணியளவில் கவிஞர் ஈரோடு தமிழன்பன் தலைமையில் "தமிழ்நாட்டில் தமிழ்' என்னும் கருத்தரங்கம் நடைபெற்றது. "கலைப் படைப்புகளில் தமிழ்' என்னும் தலைப்பில் திரைப்படப் பாடலாசிரியர் கபிலன், "கடைத்தெருவில் தமிழ்' என்னும் தலைப்பில் கவிஞர் ரவிக்குமார், "நீதிமன்றங்களில் தமிழ்' என்னும் தலைப்பில் கவிஞர் ரசாத், "ஆலயங்களில் தமிழ்' என்னும் தலைப்பில் கவிஞர் தமிழமுதன் ஆகியோர் கவிதைகளை சிறப்பாகப் பாடினர். 8.30 மணியளவில் திராவிட இயக்கப் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீ தலைமையில் "தமிழர் உரிமைகளை உயர்த்திப் பிடிப்போம்' என்ற கருத்தரங்கம் நடைபெற்றது. "தொழில் வணிகத் துறையில்' என்னும் தலைப்பில் முனைவர் நாகநாதன், "நாம் எழுப்பிய ஆலயங்களில்' என்னும் தலைப்பில் கவிஞர் தணிகைச்செல்வன் "நாடாளுமன்ற அரசியலில்' என்னும் தலைப்பில் தி. வேல்முருகன் , "கலை வளர்க்கும் மேடைகளில்' என்னும் தலைப்பில் பேராசிரியர் கரு. அழ. குணசேகரன் ஆகியோர் உரையாற்றினர்.

      பேராசிரியர் சுப.வீ பேசும் போது, தமிழர் விடுதலைக்காக தம்மை அர்ப்பணித்து செயல்படும் எழுச்சித் தமிழர் பிறந்தநாளில் தூக்குத் தண்டனை கைதிகள் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை விடுதலை செய்யும் வரை போராடுவோம். அதற்காக கட்சி மறந்து, ஒரே களத்தில் செயல்படுவோம் என்று பேசினார். முன்னதாக மாற்றுத் திறனாளிகளுக்கும் ஆதரவற்றோர்களுக்கும் மூன்று சக்கர வண்டி, இஸ்திரி பெட்டி, வேட்டி சேலை ஆகியவற்றை பேராசிரியர் சுப.வீ, முனைவர் நாகநாதன் ஆகியோர் வழங்கி நலத்திட்ட உதவிகளைத் துவக்கி வைத்தனர். மாநில நிர்வாகிகள் வன்னிஅரசு, பாவரசு, உஜ்ஜைஅரசன், மடிப்பாக்கம் வெற்றிச்செல்வன், தகடுர் தமிழ்ச்செல்வன், எஸ்.எஸ். பாலாஜி, இளஞ்சேகுவேரா, பார்வேந்தன் ஆகியோர் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தனர். 

இப்படிக்கு

வன்னிஅரசு

மாநிலச் செய்தித் தொடர்பாளர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக