தமிழர்களை இந்திய குடிமக்களாக இந்திய அரசு கருதுகிறதா? இல்லையா?
தமிழர்களுக்கு எதிராக இந்தியா செயல்படக்கூடாது!
தமிழர்களை இந்திய குடிமக்களாக இந்திய அரசு கருதுகிறதா? இல்லையா?
மக்களவையில் தொல். திருமாவளவன் கேள்வி !
தமிழர்களை இந்திய குடிமக்களாக இந்திய அரசு கருதுகிறதா? இல்லையா?
மக்களவையில் தொல். திருமாவளவன் கேள்வி !
மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே, அமைச்சர்களே, சக உறுப்பினர்களே! உலகின் தொன்மையான மொழியும் எனது தாய்மொழியுமான தமிழ் மொழியில் பொது வரவு செலவு திட்டத்தின் மீதான எனது கருத்துகளை வரலாற்று சிறப்புமிக்க இந்த மக்களவையில் எடுத்து வைப்பதில் நான் மிகுந்த பெருமையடைகிறேன். இந்தியத் துணைக்கண்டத்தின் மிகப்பெரிய மொழியும் எனது தாய்மொழியுமான தமிழுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் செம்மொழியாக அறிவிப்பு செய்த இந்திய அரசுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அத்துடன் தமிழை இந்திய ஆட்சி மொழிகளுள் ஒன்றாக அறிவிக்க வேண்டுமெனவும் இந்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்.
இந்த ஆண்டின் வரவு செலவு திட்ட அறிக்கை மீதான விவாதத்தில் பங்குகொண்டு எனது கருத்துகளை எடுத்து வைக்க வாய்ப்பளித்தமைக்காக அவைத்தலைவர் (திருமதி. மீராகுமார்) அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். வரவு செலவு திட்ட அறிக்கை என்பது பல்வேறு வரவுகள் மற்றும் செலவினங்கள் குறித்த தொகுப்பல்ல. மக்களுக்கு வழங்கும் உறுதிமொழிகள், அரசின் பொருளாதாரக் கொள்கை மற்றும் நலத்திட்டங்கள், தொலைநோக்குடன் உருவாக்கப்படும் திட்டங்களைப் பிரதிபலிக்கக் கூடிய ஒரு ஆவணமாகும்.
நமது பொருளாதார நிர்வாகம் வளர்ச்சி ஆகியவற்றை மேம்படுத்தும் போது உள்ளார்ந்த வளர்ச்சியை மிகவும் இன்றியமையாதது என்று நமது பிரதமர் வலியுறுத்தி உள்ளதை நிதி அமைச்சர் மேற்கோள்காட்டினார். உள்ளார்ந்த வளர்ச்சியும் சீரான மேம்பாட்டும் இந்த வரவு செலவு திட்டத்தின் அடி நாதமாக விளங்குகிறது. மாண்புமிகு நிதி அமைச்சர் தமது உரையில் "இந்த வரவு செலவு திட்ட அறிக்கை ஒவ்வொரு தனி மனிதனையும், அனைத்து சமூகத்தின் நலங்களையும் மிகுந்த அக்கறையுடன் பரிசீலித்து உருவாக்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டார். அதைப் போலவே இந்த வரவு செலவு திட்ட அறிக்கை ஏழை எளிய மக்களையும் கிராமப்பகுதிகளையும் கருத்தில் கொண்டு அம்மக்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார். அதனால் இந்த வரவு செலவு திட்ட அறிக்கையை ஏழைகளின் வரவு செலவு திட்ட அறிக்கை என்றும் நிதி அமைச்சர் குறிப்பிட்டார். இந்த வரவு செலவு திட்ட அறிக்கை நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த ஏழை எளிய, ஒடுக்கப்பட்ட வஞ்சிக்கப்பட்ட மக்களுக்கான வரவு செலவு திட்ட அறிக்கை என்பதால் இதனை நான் மனதாரப் பாராட்டுகிறேன்.
அதே நேரத்தில் இன்னும் கவனம் செலுத்தப்படாமல் இருக்கும் பல சிக்கல்கள் குறித்து எனது வேதனையையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்த விரும்புகிறேன். உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு இணையான வளர்ச்சியை அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படும் இந்திய அரசு ஒடுக்கப்பட்ட வஞ்சிக்கப்பட்ட மக்கள் வளர்ச்சிப் பாதையில் பின் தங்கிவிட விடக்கூடாது.. சாதிய வன்கொடுமைகளையும் பெண்களுக்கு எதிரான அநீதிகளையும் நாம் கண்டும் காணாமல் இருந்துவிடக்கூடாது.
அதைப் போலவே இன்னும் மின்சாரத்தையே காணாத கிராமங்கள் இந்தியாவில் உள்ளன. இத்தகைய மக்களின் இன்னல்களைக் களைய, மாண்புமிகு நிதி அமைச்சர் எடுத்துள்ள முயற்சிகளை நான் பாராட்டுகிறேன். பிரதமரின் கிராம வளர்ச்சி திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கென நம் நாட்டில் உள்ள ஆறு இலட்சம் கிராமங்களிலிருந்து நாற்பத்தி நாலாயிரம் கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இக்கிராமங்களில் வாழும் மக்கள் தொகையில் 50%ட்டிற்கும் மேல் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள். இப்படிப்பட்ட ஆயிரம் கிராமங்களுக்கு வளர்ச்சிப்பாதையை நோக்கிய மாற்றத்தை கொண்டுவர பிரதமரின் கிராம வளர்ச்சி திட்டத்தின் கீழ் நூறுகோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தலித்துகளின் நலங்களுக்கான அமைச்சர்களின் குழுவின் பரிந்துரையினால் நடந்தது என்பதை நான் அறிவேன். இக்குழு தலித் மக்களின் முன்னேற்றத்துக்காக முன்வைத்துள்ள அனைத்து பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்த வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். மேலும் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் உயர்தர கல்வி வழங்கக்கூடிய உண்டிஉறைவிடப் பள்ளிகள் தொடங்கப்படவேண்டும். இதுவும் இக்குழுவின் பரிந்துரைகளுள் ஒன்றாகும். தாழ்த்தப்பட்ட வகுப்பைச்சார்ந்த குழந்தைகள் நல்ல கல்வியை பெறுவதற்கான இந்த முயற்சி பலன் தருவதற்கு நீண்ட காலமாகலாம் என்பதனால் இந்திய அரசு உரிய வகையில் பரிசீலனை செய்து இதனை விரைவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் நிலமற்ற தலித்துகளுக்கு விவசாயம் செய்வதற்கு நிலமும் நிலம் வைத்துள்ள தலித்துகளுக்கு அரசு செலவில் பாசன வசதியும் செய்து தர வேண்டும் என்றும் இக்குழு பரிந்துரை செய்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்த பரிந்துரைகளெல்லாம் செயல் வடிவம் பெரும் போதுதான் ஒடுக்கப்பட்ட மக்கள் தலை நிமிர்ந்து நடக்க முடியும்.
என்னால் இந்த அவைக்குள் எளிதாக நுழைய முடிகிறது. அதே நேரத்தில் ஒரு தலித் சில கிராமங்களில் உள்ள பொது இடங்களில் நுழைய முடிவதில்லை. கிராமங்களில் உள்ள கோவில்களுக்குள் நுழைய முடிவதில்லை.. தலித் ஒருவர் ஊராட்சி மன்றத் தலைவராக சுதந்தரமாக நடமாட முடிவதில்லை. உள்ளார்ந்த வளர்ச்சிக்கும் சமமான முன்னேற்றத்திற்குமான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்று நாம் கடுமையாக போராட வேண்டியுள்ளது. எனவே தொடர்வண்டித்துறைக்கு ஒரு தனி வரவு செலவு திட்ட அறிக்கையை இந்த அவையில் வழங்குவதைப் போல தாழ்த்டதப்பட்ட வகுப்பினருக்கான தனி வரவு செலவு திட்ட அறிக்கையை வழங்க இந்திய அரசு வழி வகை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இந்த வரவு செலவு திட்ட அறிக்கையில் இலங்கைக்கு உள்ளேயே புலம்பெயர்ந்துள்ள தமிழர்களுக்காக ரூ. 500/- கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி கடுமையான பாதிப்புக்குள்ளான தமிழ் மக்களை நேரடியாக சென்றடைய உரிய முயற்சிகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும். இந்த நிதி உதவியை இலங்கை அரசின் கைகளில் ஒப்படைக்கக் கூடாது. சிங்கள ஆட்சியாளர்களிடம் இந்த நிதி ஒப்படைக்கப்பட்டால் அது அப்பாவி தமிழர்கள் மீது மேலும் வன்முறையையும் அடக்குமுறையையும் கட்டவிழ்த்துவிடுவதற்கு பயன்படுத்தப்படும். இந்திய அரசின் மீது நாங்கள் வைத்துள்ள நம்பிக்கையை பொய்யாக்கிவிடக்கூடாது. தமிழர்கள் வாழும் பகுதியிலிருந்து சிங்கள இராணுத்தை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். இன வேற்றுமையின் அடிப்படையில் இலங்கை அரசு தன் சொந்த குடிமக்களையே கொன்று குவிப்பதைக் கண்டு உலகமே அதிர்ந்து போய் கிடக்கிறது. வதை முகாம்களில் அடைக்கப்பட்டு சித்ரவதைகளுக்கு ஆளாகிவரும் 3 இலட்சம் தமிழர்களை அவர்களுடைய சொந்த இடத்துக்கு திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய அரசு வற்புறுத்த வேண்டும்.
இன விடுதலைப் போர் முடிந்து விட்ட பிறகு, போராளிகளுக்கெதிரான தாக்குதல்கள் நின்றுவிட்ட பின்பு தமிழர்க பகுதிகளில் சிங்கள இராணுவம் தொடர்ந்து முகாமிட்டு தமிழர்களை அடக்கி ஒடுக்கி அவர்களுடைய நடமாட்டத்தை கட்டுப்படுத்துவது எந்த வகையிலும் ஞாயமாகாது. இந்த கோணத்திலும் இதனை இந்திய அரசு பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். எந்த ஒரு நாட்டிலும் அந்த அரசு தன் சொந்த குடிமக்களையே அகதிகள் முகாம்களில் கைதிகளைப் போல் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியதாக கேள்விப்பட்டதும் இல்லை. எனவே இந்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டு ஈழத்தமிழர்கள் ஏற்கெனவே வசித்து வந்த இடங்களில் அவர்கள் மீண்டும் குடியேறவும் அமைதியான முறையில் வாழவும் வழிவகுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். அகதிகள் தொடர்பான அய். நா பேரவையின் உடன்படிக்கையில் இந்தியா கையெழுத்திடாத ஒரே காரணத்திற்காக தமிழ் நாட்டிலும் இந்தியாவின் எனைய பகுதிகளிலும் உள்ள அகதிகள் முகாம்கள் மனிதன் வாழ்வதற்கே தகுதியற்ற வகையில் உள்ளன. அந்த கொடுமைகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஒவ்வொரு தமிழ் அகதியின் குடும்பத்திற்கும் ஒவ்வொரு மாதமும் ரூ. 220/- வழங்கப்படுகிறது.. அதில் தமிழக அரசின் பங்கு ரூ. 110/- எனவே அகதிகளுக்கான அய். நா. உடன்படிக்கையில் இந்தியா கையெழுத்திட வேண்டும் என்று வலியுறுத்துக் கேட்டுக்கொள்கிறேன்.
அதைப்போலவே தமிழர் பகுதிகளில் சிங்கள குடியேற்றம் ஓய்வின்றி தொடர்ந்து நடபெற்று வருகிறது. இந்திய அரசு இதனை தடுத்து நிறுத்த வேண்டும். ராஜீவ்-ஜெயவ்ர்தனா ஆகியோரிடையே கையெழுத்தான இந்திய இலங்கை ஒப்பந்தத்தின்படி இலங்கையின் வட-கிழக்கு மாகாணங்களை இணைத்து தமிழர்களின் தாயகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. தற்போதைய சிங்கள ஆட்சியாளர்களுக்கு இந்தியாவின் மீது மதிப்பு இருக்குமேயானால் வட-கிழக்கு மாகாணங்களை தமிழர்களின் தாயகமான ஒரே நிலபரப்பாக ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும். தமிழ் நாட்டிலும் இந்தியாவின் ஏனைய பகுதிகளில் வாழும் ஈழத்தமிழ் அகதிகள் எந்த நேரத்திலும் நாம் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவோமோ? என்ற அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். இது தான் தற்போதைய நிலை.
இந்தியாவின் குடிமக்களாக இருக்கும் தமிழர்கள் மீதாவது இந்திய அரசுக்கு அக்கறை உள்ளதா? என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன். தமிழக மீனவர்கள் கடந்த 25 ஆண்டுகளில் சிங்கள இராணுவத்தாலும், கடற்படையாலும் தாக்கப்பட்டும், துப்பாக்கியால் சுடப்பட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது வரை 300 பேர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர். ஆனால் ஒரே ஒரு முறை கூட இந்திய அரசு இலங்கையை கண்டித்தது கிடையாது. எச்சரிக்கை கூட செய்ததில்லை.
தமிழ் பேசும் இந்தியர்களை இந்திய குடிமக்களாக இந்திய அரசு கருதுகிறதா இல்லையா? இது தமிழர்களுக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது. எமது உணர்வுகளுக்கு இந்திய அரசு செவிமடுக்கும் என்று நம்புகிறோம். தமிழர்களை இந்திய குடிமக்களாக நீங்கள் கருதுவது உண்மையானால் எமது கோரிக்கைகளை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு அமைதியான வாழ்க்கையை அமைத்துக்கொடுக்க இந்தியா முன்வர வேண்டும். எங்கள் உணர்வுகளை காயப்படுத்திவிட்டு தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரசு கட்டவிழ்த்துவிடும் கொடுமைகளுக்கு இந்தியா துணைபோகக்கூடாது.
இலங்கையில் போர் உச்சகட்டத்தில் இருந்த போது தமிழக முதல்வர் தொடர்ந்து போர் நிறுத்தத்திற்காக குரல் கொடுத்தார். சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். டில்லிக்கே வந்து பிரதமிரிடம் முறையிட்டார். அனைத்துக்கட்சித் தலைவர்களும் பிரதமரை சந்தித்து இலங்கயில் நடைபெறும் இனப்படுகொலையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். ஆனால் இந்திய அரசு இவற்றை கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. இதுதான், இந்தியா இங்குள்ள தமிழர்களை இந்திய குடிமக்களாக கருதுகிறதா? இல்லையா? என்ற கேள்வியை எழுப்புகிறது..
இந்தியாவின் எல்லைக்குள், இந்தியா என்ற கட்டமைப்புக்குள் ஒரு குடிமகனாக, இந்தியாவின் நலங்களில் அக்கறை உள்ளவனாக நான் கேட்டுக்கொள்வதெல்லாம் இலங்கை அரசுக்கு இந்திய அரசு கொடுக்கும் உதவிகளை நிறுத்திக்கொள்ள வேண்டும். இலங்கையின் தமிழர் விரோத போக்கிற்கு இந்தியா ஆதரவளிக்கக் கூடாது என்று கூறி மீண்டும் அவைத்தலைவர் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொண்டு எனது உரையை நிறைவு செய்கிறேன்.
--
0 கருத்துகள்:
கருத்துரையிடுக