உயர்நீதிமன்றத் தீர்ப்பை மதித்து தமிழக அரசு செயல்பட வேண்டும்! தொல்.திருமாவளவன் அறிக்கை

தமிழக அரசு சமச்சீர்க்கல்வித் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டுமென உயர்நீதிமன்றம் இன்று (18-7-2011) தீர்ப்பளித்திருப்பது பெரும் மகிழ்ச்சியையும் நீதித்துறையின் மீது நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது. சமச்சீர்க் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் சாக்குப் போக்குச் சொல்லி முற்றிலும் முடக்குவதற்கு தமிழக அரசு மேற்கொண்ட முயற்சிகள் இத்தீர்ப்பின் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளன. இத்தீர்ப்பைப் பெறுவதற்காக நீதிமன்றத்தில் வழக்காடியவர்களுக்கும், களத்தில் போராடியவர்களுக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

பாடத்திட்டத்திலுள்ள குறைகளைப் போக்கவும், சரிசெய்யவும் வல்லுநர் குழு அமைத்துக்கொள்ளலாம் எனவும், 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சமச்சீர்க் கல்வித் திட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பாடப் புத்தகங்களை 22Š7Š2011ஆம் தேதிக்குள் வழங்க வேண்டுமெனவும், பழைய பாடத்திட்டத்தின்படி உருவாக்கப்பட்ட பாடப் புத்தகங்களை வழங்குவதற்குத் தடை விதித்தும் உயர்நீதிமன்றம் அளித்திருக்கிற தீர்ப்பு கடந்த 2 மாத காலமாக பள்ளிக் கல்வி நிர்வாகத்தில் நிலவிய பெரும் குழப்பத்தைப் போக்குவதாக அமைந்துள்ளது.

இந்நிலையில் தமிழக அரசு மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் மேற்முறையீடு செய்யப்போவதாக வெளியாகியுள்ள செய்தி, பள்ளி மாணவர்களின் கல்வியைப் பற்றிக் கவலைப்படாமல் செயல்படும் தமிழக அரசின் பிடிவாதப் போக்கை வெளிப்படுத்துகிறது. பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு உயர்நீதிமன்றத் தீர்ப்பை மதித்து தமிழக அரசு பெருந்தன்மையோடு இப்பிரச்சனையை அணுக வேண்டுமெனவும் மேல்முறையீடு செய்யும் நிலைப்பாட்டைத் தவிர்க்க வேண்டுமெனவும் விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது.

 (தொல். திருமாவளவன்)

0 கருத்துகள்:

கருத்துரையிடுக