மனித உரிமைப் போராளி டாக்டர் பாலகோபாலன் மறைவு! விடுதலைச்சிறுத்தைகள் இரங்கல்

இந்திய அளவில் பாடுபட்ட மனித உரிமைப் போராளி டாக்டர் பாலகோபாலன் அவர்களின் மறைவுக்கு விடுதலைச்சிறுத்தைகள் வீரவணக்கம் செலுத்துகிறது.



திரு பாலகோபாலன் அவர்கள் ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் இருந்தபோதிலும் இந்தியா முழுவதிலும் மனித உரிமைகள் மீறல்கள் குறித்து அக்கரை செலுத்திவந்தார். ஆந்திரப் பிரதேசத்தில் ‘சிவில் உரிமை கமிட்டி’யின் பொதுச்செயலாளராக பணியாற்றிவந்த அவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மனித உரிமை போரம் (
Human Right Forum) என்னும் அமைப்பை நிறுவி அதில் செயல்பட்டு வந்தார். ‘சாகித்யப் பல்கலைக்கழக’த்தில் பேராசிரியராக இருந்த அவர் மனித உரிமைப் பணிகளுக்கு அந்த வேலை தடையாக இருந்ததால் அதை ராஜினாமா செய்துவிட்டு அய்தராபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். போலி என்கவுண்டர்களில் மக்கள் போராளிகள் கொல்லப்படுவதைத் தொடர்ந்து அம்பலப்படுத்திவந்தார். ஏழை - எளிய மக்களின் போராட்டக் களங்களில் எப்போதும் உறுதுணையாக இருந்தார். அண்மையில்கூட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சுற்றிப்பார்த்து மக்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கக் குரல் கொடுத்தார்.



ராஜீவ் கொலை வழக்கில் 26 பேருக்கு ஒரேயடியாக மரண தண்டனை கொடுத்தபோது அத்தண்டனையை எதிர்த்து நாடு தழுவிய பிரச்சாரத்தை மேற்கொண்டதில் அவர் முக்கியப் பங்காற்றினார். அதன் தொடர்ச்சியாகவே நளினிக்கு மரண தண்டனை ரத்து செய்யப்பட்ட சூழல் உருவானது. மரண தண்டனை கைதிகள் தூக்கிலிடப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.



தமிழகத்தில் மனித உரிமைப் போராட்டங்கள் குறிப்பாக, தலித் மக்கள் போராட்டங்கள் பரவலாக எழுவதற்கு அவர் பங்களிப்பு மகத்தானது. டாக்டர் பாலகோபாலன் அவர்களின் இழப்பு இந்திய மனித உரிமை இயக்கத்திற்கு மட்டுமின்றி தலித் இயக்கங்களுக்கும் பெரும் பேரிழப்பாகும். அவருக்கு விடுதலைச்சிறுத்தைகளின் செம்மாந்த வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறோம். அவரைப் பிரிந்து வாடும் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு எமது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.



இவண்,













(தொல்.திருமாவளவன்)

-

0 கருத்துகள்:

கருத்துரையிடுக