இலங்கைத் தூதரகத்தை அப்புறப்படுத்தக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்
தமிழகத்திலிருந்து இலங்கைத் தூதரகத்தை அப்புறப்படுத்தக் கோரி
விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்
இலங்கையில் ஐ.நா. அலுவலகத்தை இழுத்துப் பூட்டிய சிங்கள இனவெறியர்களைக் கண்டித்தும், தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து கொலைவெறித் தாக்குதல்களையும், படுகொலைகளையும் நடத்திவரும் சிங்கள இனவெறிக் கடற்படையைக் கண்டித்தும், தமிழகத்திலிருந்து இலங்கைத் தூதரகத்தை அப்புறப்படுத்தக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் 12-07-2010 காலை 10 மணியளவில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை, மயிலாப்பூர், நாகேஸ்வர ராவ் பூங்கா அருகில் நடைபெற்ற இவ்வார்ப்பாட்டத்தில் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் தலைமையேற்றார். சிங்கள இனவெறி அரசைக் கண்டித்தும், அதற்குத் துணைபோகும் இந்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினார்.
பின்னர் தமது கண்டன உரையில்....
இந்திய அரசு, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதிக்காமல் கண்மூடித்தனமாக சிங்கள அரசை ஆதரிக்கிறது. சீனாவைக் காட்டி மிரட்டி, இந்திய அரசைப் பணிய வைத்துக் கொண்டிருக்கிறது சிங்கள அரசு. இப்படிப்பட்ட சிங்கள அரசின் அதிபர் இராசபட்சேவை தமிழீழ மக்களின் இரத்தத்தாலான சிவப்புக் கம்பளத்தால் வரவேற்கிறது இந்திய அரசு.
இராசபட்சேவிற்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்திருந்தால், கொழுப்பு இருந்திருந்தால், திமிர் இருந்திருந்தால், மனித உரிமை மீறல்களை விசாரிக்க அமைக்கப்பட்ட மூவர் குழுவை கொழும்பில் இறங்க விடமாட்டேன் என்று சொல்லி, சிங்கள இனவெறியர்களைக் கொண்டு ஐ.நா. பேரவையின் அலுவலகத்தைப் பூட்டியிருப்பார். இத்தகைய அநாகரிகப் போக்கை இந்திய அரசு கண்டிக்க வேண்டாமா ? சர்வதேசச் சமூகத்தை அவமதித்த இராசபட்சேவின் இந்தச் செயல் இந்தியாவையும் அவமதித்ததாகத்தானே ஆகும். இந்த அவமதிப்பைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது இந்திய அரசு.
இராசபட்சே புது தில்லி வந்தபோது 7 ஒப்பந்தங்கள் போடப்பட்டதாகத் தெரிகிறது. அந்த ஒப்பந்தங்கள் போடப்பட்டபோது தமிழீழ மக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டார்களா? அல்லது தமிழக முதல்வரோடு கலந்தாலோசித்தார்களா? இல்லையே.
எனவே, இனி வரும் காலங்களிலாவது இந்திய அரசு, இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பாக எந்த முடிவை எடுப்பதாக இருந்தாலும், ஒப்பந்தங்கள் போடுவதாக இருந்தாலும் தமிழக முதல்வரைக் கலந்தாலோசித்த பின்னர்தான் முடிவெடுக்க வேண்டும் என்றும், சென்னையில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் உள்ள இலங்கைத் தூதரக அலுவலகங்களை உடனடியாக இந்திய அரசு அப்புறப்படுத்த வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன். இல்லையேல் மக்களே இலங்கைத் தூதரகத்தை அப்புறப்படுத்தும் வேலையைச் செய்வார்கள்.
இவ்வாறு தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் பொதுச் செயலாளர் கா.கலைக்கோட்டுதயம், மாநில நிர்வாகிகள் வன்னிஅரசு, மடிப்பாக்கம் ச. வெற்றிச்செல்வன், எழில் கரோலின், யாழினி, ஆர்வலன், மாவட்டச் செயலாளர்கள் ந. இளஞ்செழியன், கபிலன், வீரமுத்து, சூ.க. விடுதலைச்செழியன் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக