"தமிழர் இறையாண்மை மாநாடு " - தொல்.திருமாவளவன் அறிவிப்பு

அக்டோபர் 10
தமிழர் இறையாண்மை மாநாடு
தொல்.திருமாவளவன் அறிவிப்பு

கடந்த சில ஆண்டுகளாக ஆகத்து 17 தமிழர் எழுச்சிநாளில் தமிழ் இனம், தமிழ் மொழிகுறித்து விழிப்புணர்வூட்டும் வகையிலான மாநாடுகள் விடுதலைச்சிறுத்தைகள் சார்பில்நடத்தப்பட்டு வந்தன. கடந்த ஆண்டு ‘எழும் தமிழ் ஈழம்’ என்னும் மாநாடு மிகச் சிறப்பாக சென்னையில் நடைபெற்றது. அதைப்போல இந்த ஆண்டு ஆகத்து 17 அன்று ‘தமிழர் இறையாண்மை’ மாநாடு நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், தந்தை தொல்காப்பியன் அவர்கள் காலமானதையொட்டி அம்மாநாடு திட்டமிட்டபடி நடத்தவியலாமல் போய்விட்டநிலையில், எதிர்வரும் செப்டம்பர் 26 அன்று சென்னையில் நடத்துவதென அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இம்மாநாட்டையொட்டி தமிழகம் தழுவிய அளவில் மாவட்ட, ஒன்றியசெயற்குழுக்களை முறையாக நடத்துவதற்கும் விரிவான தயாரிப்புப் பணிகளைசெய்வதற்கும் ஏற்ற வகையில், மேலும் இருவாரங்கள் தள்ளிப்பபோடுவதென முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் அக்டோபர் 10 ‘மண்ணுரிமை’ நாளன்று ‘தமிழர் இறையாண்மை’ மாநாட்டை சென்னையில் நடத்திடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பஞ்சமி நிலமீட்புப் போரில் அரசப் பயங்கரவாதத்திற்குப் பலியான தோழர்கள் ஜான்தாமசு, ஏழுமலை நினைவு நாளான அக்டோபர் 10 அன்று கட்சியின் துணைநிலை அமைப்பான ‘கொத்தடிமை ஒழிப்பு முன்னணி’ தொடக்கவிழா செங்கல்பட்டு மாநகரத்தில்நடத்துவதாக ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அதே நாளில் ‘தமிழர் இறையாண்மை’ மாநாட்டை சென்னையில் நடத்துவதென முடிவெடுக்கப்பட்டநிலையில், ‘கொத்தடிமை ஒழிப்பு முன்னணி’ தொடக்கவிழாவை முன்கூட்டியே - அக்டோபர் 1, 2010 - செங்கல்பட்டில் நடத்துவதென முடிவெடுக்கப்பட்டுள்ளது. மண்ணுரிமை போராளிகள் ஜான் தாமசு - ஏழுமலை நினைவுநாளான அக்டோபர் 10ஆம் நாள் இனி ஆண்டுதோறும் ‘மண்ணுரிமை’ நாளாக நினைவுகூரப்படும் என அறிவிக்கப்படுகிறது.

‘தமிழர் இறையாண்மை’ மாநாட்டையொட்டி மாவட்ட, ஒன்றிய மற்றும் நகர செயற்குழுக் கூட்டங்களைத் திட்டமிட்டவாறு பொறுப்பாளர்கள் விரைந்து நடத்த கேட்டுக்கொள்கிறோம். தாயகம், தேசியம், தன்னாட்சி என்னும் தமிழ் இனத்தின் தனித்துவமான அரசியல் கோரிக்கைகளை முன்னிறுத்தி உலகத் தமிழர்களிடையே விழிப்புணர்வையும் அரசியல் எழுச்சியையும் உருவாக்கும் நோக்கில் இம்மாநாடு ஒருங்கிணைக்கப்படும். ஆகவே, விடுதலைச்சிறுத்தைகள் இம்மாநாட்டுக்கான களப்பணியாற்றி தமிழின உணர்வாளர்களையும் பொதுமக்களையும் ஒருங்கிணைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவண்

தொல். திருமாவளவன்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக