தலித் - இசுலாமியர் அரசியல் கூட்டணியை உருவாக்கிட ரமலான் மாதத்தில் உறுதியேற்போம்!
தலித் - இசுலாமியர் அரசியல் கூட்டணியை உருவாக்கிட
ரமலான் மாதத்தில் உறுதியேற்போம்!
தொல்.திருமாவளவன் அறிக்கை
“இறைவனை வணங்குவோம்; இல்லாதோருக்கு வழங்குவோம்” என்னும் உயரிய கருத்தை உலகுக்கு உயர்த்தும் வகையிலான திருநாளாக ஈகைத்திருநாள் இசுலாமிய பெருங்குடி மக்களால் உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. ரமலான் மாதம் முழுவதும் நோன்பு இருந்து இறைவனைத் தொழுது ஏழை-எளிய மக்களுக்கு உதவிகள் செய்து மாந்த நேயத்தை செழுமைப்படுத்தும் வகையில் ‘ரமலான்’ மாதத்தின் நிறைவிலும் ‘ஷவ்வால்’ மாதத்தின் துவக்கத்திலும் மூன்றாம் பிறை காணும் நாளில் ஈத் திருநாள் முன் இந்த ஈகைத்திருநாள் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவை ‘மனித நேயத்திருவிழா’ என்றே அழைக்கலாம். இவ்விழாவின் உள்ளீடான கருத்தானது இசுலாமியர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் பொருந்துவதாகும். அத்தகைய சிறப்புக்குரிய ஈகைத்திருநாளில் இசுலாமியச் சொந்தங்கள் யாவருக்கும் விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
அத்துடன், இந்த மண்ணில் குறிப்பாக தமிழகத்தில் இசுலாமியர்களும் தலித்துகளும் சமூகத்தளத்திலும் அரசியல் தளத்திலும் இணைந்து ஒரு மாபெரும் அரசியல் சக்தியாக வளரவேண்டும் என்றும் 2016ல் தலித் மற்றும் இசுலாமியர் அரசியல் கூட்டணியை உருவாக்கிட இந்நன்நாளில் உறுதியேற்போம் எனவும் விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் அறைகூவல் விடுகிக்கிறோம்.
‘உனக்கு’ ‘எனக்கு’ என்கிற இடைவெளியைத் தவிர்ப்போம்;
‘நமக்கு’ ‘நமக்கு’ என்னும் நல்லுணர்வை வளர்ப்போம்!
இவண்,
(தொல்.திருமாவளவன்)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக