தியாகத்தைப் போற்றவும், கொள்கைக்காக தியாகத்தைச் செய்யவும் பக்குவம் பெற உறுதியேற்போம்! தொல். திருமாவளவன் ஈகைத் திருநாள் வாழ்த்து!

உலகம் தழுவிய அளவில் இசுலாமியப் பெருங்குடி மக்களால் போற்றப்படும் பெருநாளான ஈகைத் திருநாளாம் பக்ரீத் நாளில் இசுலாமியர் அனைவருக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!

மானுடத்தை மேம்படுத்த அன்பையும், அமைதியையும், சமாதானத்தையும், சமத்துவத்தையும் உலகுக்குப் போதித்த புனிதப் பெருமான் முகமது நபி அவர்களின் வருகைக்கு முன்பே போற்றப்பட்ட பெருநாள்தான் பக்ரீத் பெருநாளாகும். தன் வாழ்வில் நேர்ந்த சோதனைகளை எல்லாம் நெஞ்சுரத்தோடு எதிர்கொண்ட இப்ராஹிம் நபி அவர்கள், ஏற்றுக்கொண்ட கொள்கைகளுக்காக தன் மகன் இஸ்மாயில் நபி அவர்களையே பலியிடத் துணிந்தபோது ஆண்டவன் அதனைத் தடுத்தாட்கொண்டு மகனுக்குப் பதிலாக ஆட்டுக்கடாவைப் பலியிட ஆணையிட்டதாகவும், அதுவே "குர்பானி' என்னும் பெயரில் இன்றும் இந்த பக்ரீத் நாளில் ஆட்டுக்கடாவைப் பலியிடும் பழக்கத்தை இஸ்லாமியர்கள் கடைப்பிடிப்பதாகவும் நம்பப்படுகிறது.

அல்லாஹ்வின் சோதனைகளைத் தாங்கும் நெஞ்சுறுதியும் தன் மகனையே தியாகம் செய்ய முன்வந்த தியாக உணர்வும் இப்ராகிம் நபி அவர்களிடத்தில் மேலோங்கியிருந்ததை முகமது நபி அவர்கள் உட்பட இஸ்லாமியப் பேரினம் நினைவுகூர்ந்து போற்றி வருகிறது என்பது பக்ரீத் நாளின் மகிமையும் பெருமையும் ஆகும். அத்தகைய போற்றுதலுக்குரிய தியாகத் திருநாளில் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான "ஹஜ்' என்னும் புனித மெக்கா பயணத்தை மேற்கொள்ளும் "ஹாஜி'கள் உள்ளிட்ட இஸ்லாமியர் யாவருக்கும் எமது ஈகைத் திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதுடன் அனைவரும் தியாகத்தைப் போற்றவும், கொள்கைக்காக தியாகத்தைச் செய்யவும் பக்குவம் பெற உறுதியேற்போம்.

இவண்

(தொல். திருமாவளவன்)

0 கருத்துகள்:

கருத்துரையிடுக