தலித்- இஸ்லாமியர்கள் அரசியல் யுக்திகளை கையாள வேண்டும்: திருமாவளவன் பேச்சு

சென்னை, டிச. 7-
 
பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6-ந்தேதியையொட்டி தலித்-இஸ்லாமியர் எழுச்சிநாள் கருத்தரங்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இஸ்லாமிய ஜனநாயக பேரவை சார்பில் நடந்தது.

தி.நகர் சர்பிட்டி தியாகராயர் கலையரங்கத்தில் நடந்த கூட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாவளவன் தலைமை தாங்கி பேசினார்.

அவர் கூறியதாவது:-
 
வருகிற 2011-ம் ஆண்டு விடுதலை சிறுத்தைகள் ஆண்டாக இருக்க வேண்டும். 2011 ஜனவரி 1-ந்தேதி முதல் டிசம்பர் 31-ந்தேதி வரை நமக்கு ஏராளமான பணிகள் இருக்கிறது. இடையே தேர்தல் வருகிறது.
 
தேர்தல் மட்டும் பணி அல்ல. கிராமங்கள் தோறும் மக்களிடம் நமது கொள்கைகளை எடுத்து செல்ல வேண்டும்.
 
அமெரிக்காவில் இரட்டை கோபுரத்தை இடித்தவர்கள் பயங்கரவாதிகள் என்றால் பாபர் மசூதியை இடித்தவர்களும் பயங்கரவாதிகள்தான். இடிக்கப்பட்ட இடத்தில் பாபர் மசூதி கட்டுவதுதான் தீர்வு.
 
சிதறி கிடக்கும் சிறுபான்மையினர் மற்றும் தலித்துகளை கருத்தியியல் மூலம் ஒற்றுமைப்படுத்த வேண்டும். தேர்தல் வருவதால் அரசியல் ஆசை, பதவி மோகம், பேராசையால் நாம் அணிமாறி கொள்கைகளை விட்டு கொடுத்து விடக்கூடாது. பாபர் மசூதி திட்டமிட்டு இடிக்கப்பட்டது. தலித்துகளும், இஸ்லாமி யர்களும் அரசியல் யுக்தியை கையாள வேண்டும். அப் போதுதான் அரசியலில் வெற்றி பெற முடியும்.

 
இவ்வாறு அவர் பேசினார்.
 
நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் முகமது யூசுப் வரவேற்றார். சிந்தனை செல்வன், கலைக்கோட்டு தயம், காஜா முகைதீன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.
 
நிகழ்ச்சியில் வன்னி அரசு,  இலியாஸ், ரியாஜி, சானலாசு, எழில் கரோலின், பாலரசு, வெற்றிச்செல்வன், வீரமுத்து, கபிலன், இளஞ்செழியன், அப்துல் ரகுமான், ஜலால் முகமது, சர்தார் பாசா, முன்னாகான், விருகை அமீது, முத்து முகமது, ஹஜ்ஜி முகமது, ஜெ. முபாரக், நசீர் அகமது, அகமது, ஏ.ஆர். சேக், இரா. செல்வம், வியாசை ரவி, சங்கத்தமிழன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக