தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடு!
தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடு!
இந்திய அரசை வலியுறுத்தி
விடுதலைச் சிறுத்தைகள் கண்டன ஆர்ப்பாட்டம்!
தொல். திருமாவளவன் அறிவிப்பு
தமிழக மீனவர்களுக்கு எதிரான சிங்கள இனவெறியர்களின் போக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பாண்டியன், ஜெயக்குமார் படுகொலைகளைத் தொடர்ந்து தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. ஆங்காங்கே கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன. இந்திய அரசும் உரிய நடவடிக்கை எடுப்பதாக வழக்கம்போல வாக்குறுதி அளித்தது. இந்நிலையில் மீண்டும் திடீரென கடந்த 15-02-2011 அன்று 18 இழுவைப் படகுகளுடன் 112 தமிழக மீனவர்களை சிங்கள வெறியர்கள் கடத்திச் சென்றுள்ளனர். அத்துடன், மறுநாளே (16-02-2011) 27 மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் கடத்தப்பட்டு, அனைவரும் பொய் வழக்குகளில் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் ஆளும் கட்சியான தி.மு.க. நாடு தழுவிய அளவில் உடனடிப் போராட்டத்தில் குதித்த நிலையிலும், இந்தியத் தலைமை அமைச்சர் திரு. மன்மோகன் சிங், கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று சொன்ன நிலையிலும், இவற்றையயல்லாம் ஒருபொருட்டாக மதிக்காமல் அனைவரையும் சிறைப்படுத்தியுள்ளது சிங்கள இனவெறி அரசு. தமிழ்நாட்டு மீனவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் உறுதிமிக்க நடவடிக்கை எடுக்க இந்திய அரசு எத்தகைய முனைப்பும் காட்டவில்லை என்கிற நிலையே இதற்குக் காரணமாக உள்ளது.
கடந்த 1983லிருந்து இதுநாள் வரையில் தமிழ்நாட்டு மீனவர்கள் கடத்தப்படுவதும், சுட்டுக் கொல்லப்படுவதும் தொடர்கதையாகவே நீடித்து வருகிறது. இந்திய அரசின் மெத்தனப் போக்கும், தமிழின விரோத நிலைப்பாடுமே சிங்கள இனவெறியர்கள் இத்தகைய செயல்களில் தொடர்ந்து ஈடுபட ஊக்கப்படுத்துவதாக அமைந்துள்ளன. எனவே இந்திய அரசு தமது தமிழின விரோதப் போக்கைக் கைவிட்டு சிறைப்படுத்தப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்பதற்கும் இத்தகைய போக்குகள் தொடராமல் தடுப்பதற்கும் உரியநடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வற்புறுத்துகிறோம்.
தமிழர்களுக்கு எதிராகத் தமிழர்களைத் திருப்பிவிடும் சதி முயற்சியில் சிங்கள இனவெறியர்கள் ஈடுபடுவதற்கான செயல்திட்டங்களை வகுத்து வருகின்றனர் என்கிற தகவல்களை உறுதிப்படுத்துவதாகவும் தற்போதைய நிகழ்வுகள் அமைந்துள்ளன என்பது மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது. சிங்கள இனவெறியர்களின் இத்தகைய முயற்சிகளுக்கு இடங்கொடுக்காமல் தமிழினம் ஒன்றுபட்டுப் போராட வேண்டும் என்பதை தமிழக மற்றும் ஈழத் தமிழர்கள் உணர்ந்திட வேண்டும் என இந்த நேரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் சுட்டிக்காட்டுகிறது.
சிறைப்படுத்தப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும் உடனடியாக விடுவிப்பதற்கு இந்திய அரசு அதிதீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி நாளை (18-02-2011) காலை 10 மணியளவில் சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். எனது தலைமையில் நடைபெறும் இப்போராட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகளும் இன உணர்வாளர்களும் திரளாகப் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கிறேன்.
இவண்













0 கருத்துகள்:
கருத்துரையிடுக