கலைஞரின் துணிச்சலான முடிவை விடுதலைச் சிறுத்தைகள் வரவேற்கிறது!

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிலிருந்து விலகுவதென்ற கலைஞரின் துணிச்சலான முடிவை விடுதலைச் சிறுத்தைகள் வரவேற்கிறது!
 
தொல்.திருமாவளவன் பாராட்டு!


 திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலை செயல்திட்டக் குழு இன்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிலிருந்து விலகுவதென எடுத்த முடிவை விடுதலைச் சிறுத்தைகள் வரவேற்கிறது. இந்தத் துணிச்சலான முடிவால் அரசியல் அரங்கில் முதல்வர் கலைஞர் இமயமாய் உயர்ந்து நிற்கிறார். இந்த முடிவு தி.மு.க. கூட்டணிக்கு எந்த வகையிலும் நட்டத்தை ஏற்படுத்தாது. கூட்டணி கட்சியின் மனம் நோகாத வகையில் மிகுந்த பொறுமையோடும் சகிப்புத்தன்மையோடும் தாராளமாக விட்டுக்கொடுத்து அரவணைத்துச் செல்லும் நயத்தக்க நாகரிக அணுகுமுறைகளைக் கொண்டவர் கலைஞர். அந்த வகையில் தற்போதைய நெருக்கடி நிலையிலும்கூட பிரச்சினைகளின் அடிப்படையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு நல்குவோம் என கலைஞர் முடிவெடுத்திருப்பது அவரது அரசியல் நாகரிகத்தை உறுதிப்படுத்துகிறது. இந்த முடிவால் தி.மு.க. தொண்டர்கள் மட்டுமல்ல கூட்டணிக் கட்சியினரும் இரு மடங்கு வீரியத்தோடு தேர்தல் பணியாற்றுகின்ற உந்துதலைப் பெற்றுள்ளனர்.

  எனவே தி.மு.க. எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றிபெறும். கலைஞர் மீண்டும் முதல்வர் ஆவார். நாடாளுமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் தி.மு.கவோடு இணைந்து செயலாற்றும்..


இவண்
                                
(தொல். திருமாவளவன்)




****

கலைஞர் அறிக்கை  




மத்தியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இருந்து விலகுவதாக திமுக அறிவித்துள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக திமுக காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே ஏற்கனவே பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை ஏற்று 60 தொகுதிகளை ஒதுக்க திமுக முன் வந்தது. இருப்பினும் காங்கிரஸ் கூடுதல் தொகுதிகளை கேட்பதுடன், சில நிபந்தனைகளையும் விதித்துள்ளது.


இந்த நிலையில் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் வளாகத்தில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. திமுக பொதுச்செயலளார் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் ஆர்க்காடு வீராசாமி, துணைப் பொதுச்செயலாளர்கள் துரைமுருகன், பரிதி இளம்வழுதி, சற்குணபாண்டியன், தென்மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி, நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் தயாநிதி மாறன், கோ.சி.மணி, வீரபாண்டி ஆறுமுகம், பொன்முடி, எ.வ.வேலு உள்ளிட்ட மத்திய மாநில அமைச்சர்கள் உள்ளிட்ட திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


கூட்டம் முடிந்து எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

2011ஆம் ஆண்டில் ஏப்ல் திங்கள் 13ஆம் நாள் நடைபெறும் சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு திமுக - காங்கிரஸ் கட்சியும் நடத்திய தேர்தல் பேச்சுவார்த்தையில் உடன்பாடு காண முடியாமைக்கும் - கடந்த 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 48 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி இந்த முறை 60 இடங்கள் என்று கேட்டு, கழகமும் அதற்கு ஒப்புக்கொண்ட பிறகு - தற்போது 63 இடங்கள் வேண்டுமென்பதும், அந்த இடங்களையும் அவர்களே நிர்ணயிப்பார்கள் என்பதும் வேண்டுமென்றே இந்த அணியில் தொடர அவர்கள் விரும்பவில்லை அல்லது நம்மை அவர்கள் விரும்பவில்லை என்பதையே தெளிவாகக் காட்டுவதாக திமுக உணருவதால் - இத்தகைய சூழ்நிலையில் மத்தியிலே ஆட்சியிலே திமுக தொடர வேண்டுமா என்பதை எண்ணிப் பார்த்து - மத்திய அரசிலே ஆட்சிப் பொறுப்பிலே இடம் பெற விரும்பாமல் கழகம் தன்னை விடுவித்துக் கொண்டு, மத்திய அரசுக்கு பிரச்சினையின் அடிப்படையில் மட்டும் ஆதரவு அளிக்கலாம் என்ற முடிவினை எடுக்கலாமென இந்த உயர்நிலை செயல் திட்டக் குழு தீர்மானிக்கிறது. இவ்வாறு திமுக தலைவர் கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக