விசிக விருதுகள் வழங்கும் விழா : தீர்மானங்கள்

விடுதலைச் சிறுத்தைகளின் விருதுகள் வழங்கும் விழா

28-06-2011 ; பெரியார் திடல், சென்னை

தீர்மானங்கள்

வீரவணக்கம்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள ஊஞ்சனை கிராமத்தில் வழிபாட்டுரிமைக்காகப் போராடிய உழைக்கும் மக்கள் 5 பேர் 28Š06Š1972 அன்று

சாதி வெறியர்களால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களின் நினைவு நாளான இன்று விடுதலைச் சிறுத்தைகள் அப்போராளிகளுக்கு தமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறது. அத்துடன் ஈழத்திலும் தமிழகத்திலும் இனவெறியர்கள் மற்றும் சாதிவெறியர்களால் படுகொலையான தமிழ்ச்சொந்தங்களுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் வீரவணக்கத்தைச் செலுத்துகிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு - இந்திய அரசு திரும்பப் பெற வேண்டும்

பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதால் மளிகைப் பொருட்கள், காய்கறிகள் மற்றும் மருந்துப் பொருட்கள் போன்ற இன்றியமையாதப் பொருட்களின் விலை திடீரெனப் பன்மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் ஏழை எளிய அடித்தட்டு மக்களும் நடுத்தர வகுப்பைச் சார்ந்தவர்களும் வெகுவாகப் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. வழக்கம்போல அனைத்துலகச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்ததால் விலைவாசியைக் கட்டுப்படுத்த இயலவில்லையயன்று இந்திய அரசு விளக்கம் சொல்கிறது. குடிமக்களின் வாங்கும் திறனுக்கு ஏற்ப விலைவாசியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியதும் அதே வேளையில் மக்களின் வாங்கும் திறனை மேம்படுத்த வேண்டியதும் அரசின் கடமை என்பதை இந்திய அரசும் தமிழக அரசும் உணர வேண்டும். அதனடிப்படையில் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டுமென இந்திய அரசை விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்துகிறது.

மின்வெட்டு - போர்க்கால நடவடிக்கை தேவை

தமிழகமெங்கும் மின்வெட்டுச் சிக்கல் மிகவும் தீவிரமாகியுள்ளது. அரசின் அறிவிப்புகளுக்கு மாறாக எத்தகைய வரையறையுமின்றி மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றது. ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் மின்வெட்டு நீடிக்கும், எப்போது, எத்தனை முறை மின் வெட்டு ஏற்படும் என்ற வரையறைகளின்றி, மின் விநியோகம் வெகுமக்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. எனவே தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மின்வெட்டுச் சிக்கலுக்குத் தீர்வு காண வேண்டும் எனவும், அதே வேளையில் இந்திய அரசு மையத் தொகுப்பிலிருந்து தமிழகத்திற்குக் கூடுதல் மின்சாரம் வழங்க வேண்டும் எனவும் விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது.

சமச்சீர்க் கல்வி - உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்

புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் போன்ற சமத்துவச் சிந்தனையாளர்களின் கனவை நனவாக்கும் வகையில் அனைத்துத் தரப்புச் சமூகங்களைச் சார்ந்த குழந்தைகள் யாவரும் சமமான, போதிய வசதியுடன் கூடிய கல்விக்கூடங்களில் சமமான கல்வியைப் பெறுவதற்குரிய சமச்சீர்க் கல்வித்திட்டத்தை, பெருந்தன்மையோடு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் தமிழக அரசை வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

சிறப்பு முகாம் - ஈழத் தமிழர்கள் விடுதலை

செங்கல்பட்டு, பூவிருந்தவல்லி ஆகிய சிறப்பு முகாம்களில் நீண்ட காலமாக விசாரணைகள் ஏதுமின்றி சிறைப்படுத்தப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனவும், அவர்கள் மீதான அனைத்து வழக்குகளையும் திரும்பப்பெற வேண்டுமெனவும் தமிழக அரசை விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது.

இனப்படுகொலைக் குற்றவாளி இராஜபக்சேவுக்குத் தண்டனை

இனப்படுகொலைக் குற்றவாளி சிங்கள இனவெறியன் இராஜபக்சேவை அனைத்துலக நீதிமன்றத்தின் முன் நிறுத்தி கடும் தண்டனை வழங்குவதற்கு அனைத்துலகச் சமூகமும் ஐ.நா. பேரவையும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும், அதற்கு தமிழக அரசும் இந்திய அரசும் அனைத்துலக நாடுகளுக்கு உரிய அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும் எனவும் விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது. குறிப்பாக இதற்கான பெருமுயற்சியில் ஈடுபட்டு வருகிற நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு தமிழக மற்றும் இந்திய அரசுகள் ஆதரவு நல்கிட வேண்டுமெனவும் விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது.

நாடுகடந்த தமிழீழ அரசு - கையழுத்து இயக்கம்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னெடுப்பு முயற்சிகளுக்கு ஒத்துழைக்கும் வகையில் தமிழகமெங்கும் 10 லட்சம் பேரிடம் கையயழுத்துப் பெறுகிற மாபெரும் கையயழுத்து இயக்கத்தை எதிர்வரும் 02-07-2011 முதல் விடுதலைச் சிறுத்தைகள் தொடங்குகிறது. இதற்கு பொதுமக்கள் அனைவரும் தமது பேராதரவை நல்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் வேண்டுகோள் விடுக்கிறது.

பஞ்சமி நில ஆணையம் - இயங்கிடச் செய்திட வேண்டும்

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு உழவுக்கென வழங்கப்பட்ட இலட்சக்கணக்கான ஏக்கர் பரப்பளவுள்ள பஞ்சமி நிலங்கள் யாவும், தமிழகமெங்கிலும் தாழ்த்தப்பட்டோரல்லாதோரின் ஆக்கிரமிப்புகளில் உள்ளன. நிலமில்லா ஏழைக் கூலிகளாய் வறுமைக் கொடுமைகளுக்கும், சாதிய வன்கொடுமைகளுக்கும் இலக்காகி அல்லலுறும் தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் நெடுங்கால அடிமைத்தளைகளிலிருந்து மீட்சி பெற பறிபோன பஞ்சமி நிலங்கள் அனைத்தையும் மீட்டு தாழ்த்தப்பட்டோரிடம் ஒப்படைக்க வேண்டுமென கடந்த தி.மு.க. ஆட்சியில் நியமிக்கப்பட்ட பஞ்சமி நில ஆணையத்தை, தற்போதைய அ.தி.மு.க. அரசு பெருந்தன்மையோடும், தொலைநோக்குப் பார்வையோடும் இயங்கச் செய்திட வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக