பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து திருமா தலைமையில் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல்- டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை மெமோரியல் ஹால் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் உழைக்கும் மக்கள் வயிற்றில் அடிக்காதே பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை திரும்ப பெறு போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தின் போது எழுச்சித்தமிழர் திருமாவளவன் பேசியதாவது:-
கடந்த ஓராண்டில் மட்டும் மத்திய அரசு 10 முறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி உள்ளது. சராசரியாக மாதத்திற்கு ஒருமுறை என்ற அளவில் இந்த விலையை உயர்த்தினார்கள். ஏழை-எளிய மக்களை இது கடுமையாக பாதித்துள்ளது.
சமையல் கியாஸ் ரூ.50, டீசல் ரூ.3 மண்எண்ணை ரூ.2 என சமீபத்தில் விலையை உயர்த்தி உள்ளனர். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை உயர்த்திருப்பதாக மத்திய அரசு காரணம் காட்டி இருக்கிறது. இதனால் இந்த விலை உயர்வை வாபஸ் பெற இயலாது என்றும், மாநில அரசு விற்பனை வரியை குறைத்து கொள்ளலாம் என்றும் யோசனை கூறியுள்ளது.
மத்திய அரசின் இந்த போக்கை வன்மையாக கண்டிக்கிறோம். மேலும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்ததான் அரசு தேவைப்படுகிறது. எனவே இந்த விலை உயர்வை திரும்ப பெற வேண்டும். ஊழல் ஒழிப்பு தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் டெல்லியில் நாளை நடக்கிறது. இதில் பங்கேற்க விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அழைப்பு வந்துள்ளது. ஊழல்- வறுமையை லோக்பால் அமைப்பால் மட்டுமே ஒழிக்க முடியாது. அடிப்படையில் மாற்றம் கொண்டு வரவேண்டும்.
புரட்சிகரமான சமச்சீர் கல்வி திட்டத்தில் சில குறைபாடுகள் இருப்பதாக கூறி இந்த அரசு முட்டுக்கட்டை போட்டுள்ளது. இதுபற்றி ஆராய வல்லுனர் குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது. ஆனால் அந்த குழுவில் சிறந்த கல்வியாளர்கள் இடம் பெறவில்லை. எனவே சிறந்த கல்வியாளரை நியமித்து இந்த ஆண்டு முதலே சமச்சீர் கல்வி திட்டத்தில் காலம் தாழ்த்தாமல் பெருந்தன்மையுடன் தொடர வேண்டும்.
இலவச திட்டங்கள் என்ற பெயரில் லேப்-டாப், ஆடு, மாடு வழங்குவதாக அறிவித்துள்ளனர். இந்த திட்டங்கள் ஊழலுக்கு வழிவகுக்கும். இலவச லேப்-டாப்பிற்கு இன்டர்நெட் இணைப்பு கொடுக்க வேண்டும். அதற்கு செலவாகும். இதனால் இதுபோன்ற திட்டத்தை கைவிட வேண்டும். இதற்கு பதிலாக கல்வியை மட்டும் இலவசமாக வழங்க வேண்டும். டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடவேண்டும். அங்கு பணியாற்றும் ஊழியர்கள் வேறு பணியில் அமர்த்த வேண்டும்.
இவ்வாறு அவர் எழுச்சித்தமிழர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் கபிலன், விடுதலை செழியன், பாவரசு, இரா.செல்வம், இளஞ்சேகுவாரா, வீர பொன்னிவளவன், எஸ்.எஸ்.பாலாஜி பார்வேந்தன், எழில் கரோலின், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக