தாத்தா இரட்டமலை சீனிவாசன் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை
இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை ஓட்டேரியில் உள்ள அவரது நினைவிடத்தில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்து இருப்பதற்கு தமிழக அரசுக்கு எனது பாராட்டுதலையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். 2005-ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது இரட்டை மலை சீனிவாசனுக்கு சென்னையில் மணிமண்டபம் கட்டுவதாக அறிவித்து இருந்தார். அதன்படி சென்னையில் மணிமண்டபம் அமைக்க வேண்டும்.
பெரியாருக்கு முன்னதாக பகுத்தறிவு கருத்துக்களை பரப்பியவர் பண்டிதர் அயோத்திதாசன். அவருக்கு நினைவு மண்டபம் கட்டி பெருமை படுத்த வேண்டியது தமிழர்களின் கடமை. சமச்சீர் கல்வி பற்றிய நிபுணர் குழு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
இந்த திட்டத்தை கொண்டு வரக்கூடாது என்பதற்காக பல குறைகளை கூறி அரசு தள்ளி வைக்கிறது. சமச்சீர் கல்வியை முற்றிலும் புறக்கணிக்கிறது. பெருந்தன்மையுடன் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இலவச கல்வி, மதுக்கடைகளை மூடுதல், மணல் அள்ளுவது தடுத்தல் போன்ற பிரதான பிரச்சினைகளை மையமாக வைத்து மக்கள் இயக்கம் நடத்த உள்ளோம்.
தேர்தலில் விகிதாச்சார பிரதிநிதித்துவம் முறை கொண்டு வர வேண்டும். அதாவது ஒவ்வொரு கட்சியும் பெற்ற ஓட்டு விகித அடிப்படையில் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். கடந்த தேர்தலில் தி.மு.க. சுமார் 1 கோடி ஓட்டுகளை பெற்றும் கூட எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்தது.
தே.மு.தி.க. சுமார் 25 லட்சம் ஓட்டுகள் பெற்று எதிர்க்கட்சியாகி உள்ளது. இதற்கு காரணம் தேர்தல் நடைமுறையில் உள்ள குளறுபடிதான். விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை இருந்திருந்தால் தி.மு.க. தான் எதிர்க்கட்சி.
இரட்டைமலை சீனிவாசன் பிறந்த ஊரான காஞ்சீபுரம் மாவட்டம் கோழியாளம் கிராமத்தில் விடுதலை சிறுத்தை சார்பில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. அவருக்கு வெண்கல சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மணி மண்டபத்தை இன்று மாலை திறந்து வைக்கிறேன்.
இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பாவரசு, வெற்றிச்செல்வன், இரா.செல்வம், கபிலன், வக்கீல் வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாளையொட்டி கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் காங்கிரஸ் நிர்வாகிகள் தாமோதரன், வெங்கட், பிரதாப், பாபு, முரளி, வெங்கடேசன், ஜாய்சீலன், சுந்தரபாபு, தாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு காந்தி பேரவை தலைவர் குமரிஅனந்தனும் இரட்டைமலை சீனிவாசன் சிலைக்கு மாலை அணிவித்தார்.
1 கருத்துகள்:
Great!!!!!!!
கருத்துரையிடுக