தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் சார்பில் மரண தண்டனை ஒழிப்பு மாநாடு! ஆகஸ்டு 28இல் மறைமலைநகரில் நடைபெறுகிறது!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கடந்த 20 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருடைய கருணை மனுக்கள் குடியரசுத் தலைவரால் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கும் நிலையில் அவர்களைத் தூக்கிலேற்ற இந்திய அரசு தயாராகி வருகிறது. இது தமிழினத்துக்கு வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதாக இருக்கிறது.
உலகமெங்கும் மரண தண்டனையை முற்றாக ஒழிக்க வேண்டும் என்ற குரல் வலுப்பெற்று வருகிறது. 139 நாடுகளில் மரண தண்டனை இப்போது நடைமுறையில் இல்லை. அடுத்த ஆண்டுக்குள் உலகிலுள்ள அனைத்து நாடுகளும் மரண தண்டனையை முற்றாகக் கைவிட்டுவிட வேண்டும் என்று அய்.நா. மன்றம் வலியுறுத்திவரும் நிலையில் இந்திய அரசு தமிழ் இளைஞர்கள் மூவரைத் தூக்கிலேற்ற முற்படுவது வேதனையளிக்கிறது.
கடந்த 20 ஆண்டுகளாகச் சிறையில் இருந்து ஆயுள் தண்டனையைவிட நீண்டகாலத் தண்டனையை இந்த மூன்று இளைஞர்களும் அனுபவித்துவிட்டனர். அவர்களை இப்போது தூக்கிலிட முயற்சிப்பது ஒரு குற்றத்திற்கு இரண்டு தண்டனை வழங்குவதுபோல் உள்ளது. இது இயற்கை நீதிக்கு முரணானதாகும்.
கடந்த 11 ஆண்டுகளாக இவர்களின் கருணை மனுக்கள் குடியரசுத் தலைவரிடம் கிடப்பிலிருந்தன. இப்படி காலதாமதம் நேர்ந்தால் அதையே காரணமாகக் கொண்டு மரண தண்டனையை ஆயுள் சிறைவாசமாக மாற்றலாம் என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இத்தகைய காரணங்களையும் இந்த மூன்று இளைஞர்களுக்கு ஆதரவாக தமிழ் மக்களிடையே ஏற்பட்டுள்ள மனக் குமுறலையும் கவனத்தில் கொண்டு இந்திய அரசு இவர்களது மரண தண்டனையை ரத்து செய்திட வேண்டும்.
தமிழக அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த மூவருடைய மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும். அது மட்டுமின்றி, மரண தண்டனையை வழங்கக்கூடிய பிரிவுகளை இந்திய தண்டனைச் சட்டங்களிலிருந்து நீக்குவதற்கு தமிழக அரசுக்கே அதிகாரம் உள்ளது. அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி மரண தண்டனையை முற்றாக ஒழிப்பதற்கு தமிழக முதல்வர் முன்வர வேண்டும். தற்போது நடைபெற்றுவரும் சட்டமன்றக் கூட்டத் தொடரில் இதற்கான தீர்மானத்தையும் தமிழக அரசு கொண்டு வரவேண்டும்.
பேரறிவாளன் உள்ளிட்ட மூவரது கருணை மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நாளிலிருந்தே தமிழ்நாட்டில் தன்னெழுச்சியாக மக்கள் கிளர்ந்தெழுந்து தமது எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறார்கள். பல்வேறு இயக்கங்களும் அரசியல் கட்சிகளும் தம்மால் இயன்ற வகையில் இதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தமிழ் மக்களின் மன உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாகவும் மரண தண்டனையை இரத்து செய்யக் கோரி மத்திய அரசையும் தமிழக அரசையும் வலியுறுத்துவதற்காகவும் பாட்டாளி மக்கள் கட்சியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் ஒன்றிணைந்து தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் எதிர்வரும் 2882011 ஞாயிறு மாலை 3 மணியளவில் சென்னை, மறைமலை நகரில் "மரண தண்டனை ஒழிப்பு மாநாடு' ஒன்றை நடத்துவது என தீர்மானித்துள்ளோம். இந்த மாநாட்டில் தமிழக இளைஞர்களும், தமிழ்த் தேசிய இயக்கத்தினைச் சேர்ந்தவர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.
மறைமலை நகரில் வெளிப்படும் தமிழ் உணர்வைக் கண்டு தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் உயிரைக் காக்க தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு நிற்கிறோம் என்று உலகுக்கு எடுத்துக்காட்ட இந்த மாநாட்டில் தமிழுணர்வு கொண்டோர் அனைவரும் திரளாகக் கலந்துகொள்ளுமாறு தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் சார்பில் வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்.
இவண்
(தொல். திருமாவளவன்)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக