மரண தண்டனையைக் குறைக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது! தொல்.திருமாவளவன் அறிக்கை
பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன் ஆகியோரது மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்களும், வழக்கறிஞர்களும், சமூகத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த சாதாரண மக்களும் இதற்காகத் தன்னெழுச்சியாகப் போராடி வருகின்றனர். நேற்றைய தினம் செங்கொடி என்ற இளம்பெண் இதற்காகத் தனது இன்னுயிரை ஈகம் செய்திருக்கிறார்.
குடியரசுத் தலைவரால் இந்த மூவரின் கருணை மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கும் நிலையில் தமிழக அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த மூன்று பேரின் மரண தண்டனையைக் குறைக்க வேண்டும் என்றும், தாயுள்ளத்தோடு இதை தமிழக முதல்வர் அவர்கள் பரிசீலிக்க வேண்டும் என்றும் அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி தமிழக மக்கள் அனைவரும் இப்போது கோரிக்கை வைத்து வருகின்றனர். அந்தக் கோரிக்கைகளுக்கெல்லாம் பதிலளிக்கும்விதமாக இன்று மாண்புமிகு தமிழக முதல்வர் ஓர் அறிக்கையை சட்டப் பேரவையில் அளித்திருக்கிறார். அதில் 1991ஆம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகம் எழுதிய விளக்கக் கடிதம் ஒன்றின் வரிகளை மாண்புமிகு முதல்வர் அவர்கள் மேற்கோள் காட்டியிருக்கிறார். அது உள்துறை அமைச்சகம் எழுதிய கடிதம்தானே தவிர நீதிமன்றத் தீர்ப்பு அல்ல.
அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு எண்கள் 72 மற்றும் 161 ஆகியவற்றின்கீழ் மரண தண்டனையை ரத்து செய்வதற்காக வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்தை அரசாங்க ஆணைகளோ, அரசுகள் இயற்றும் சட்டங்களோ கட்டுப்படுத்த முடியாது என உச்சநீதிமன்றம் 2003ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பு ஒன்றில் தெளிவுபடுத்தியிருக்கிறது. (Supreme Court in `State (Govt. of NCT Delhi) v Premraj (2003(7) SCC 121)) 1990 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பில் (State of Punjab v Joginder Singh, 1990 (2) SCC 661 ) சட்டத்தினால்கூட இந்த அதிகாரத்தைத் தடுக்க முடியாது எனக் கூறப்பட்டிருக்கிறது.
உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புகள் மட்டுமின்றி இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 54 மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 433 ஆகியவை கூட மரண தண்டனையைக் குறைக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கியுள்ளன. இதையெல்லாம் சட்ட வல்லுனர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் தமிழக அரசின் கவனத்துக்கு ஏற்கனவே கொண்டு வந்திருக்கின்றனர். கடந்த 19.08.2011 அன்று மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் (பி.யு.சி.எல்) சார்பில் மாண்புமிகு தமிழக முதல்வருக்கு சமர்ப்பித்த மனுவிலும் இந்த உண்மைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
எனவே, சட்டரீதியான மதிப்பு எதுவுமில்லாத மத்திய உள்துறை அமைச்சகத்தின் விளக்கக் கடிதத்தை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் பொருட்படுத்த வேண்டாமென்றும், அரசியல் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் ஆகியவை தமிழக அரசுக்கு வழங்கியிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த மூன்று தமிழ் இளைஞர்களின் மரண தண்டனையைக் குறைத்து தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுமாறும் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்.
அத்துடன், பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் உயிரைக் காப்பாற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்து, 28-8-2011 அன்று மாலை 5 மணியளவில் காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்னால் தீக்குளித்து தன் உயிரை ஈகம் செய்திருக்கிற வீரமங்கை செங்கொடி அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம். அதேவேளையில் இவ்வாறான செயல்களில் யாரும் தயவுகூர்ந்து ஈடுபட வேண்டாம் எனவும், ஈழத் தமிழர்களுக்காக இன்னுயிர் ஈந்த முத்துக்குமாரைத் தொடர்ந்து பல பேர் உயிர் ஈகம் செய்த செயல்களைப் போலத் தற்போதும் தொடர வேண்டாம் எனவும் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் இறைஞ்சிக் கேட்டுக்கொள்கிறோம்.
இவண்
தொல்.திருமாவளவன்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக