ஜெனிவா தீர்மானம்: தமிழ் மக்கள் விழிப்போடு இருக்க வேண்டிய நேரம் இது - தொல்.திருமாவளவன் அறிக்கை


பிரதமர் மன்மோகன் சிங் இன்று நாடாளுமன்றத்தில் குடியரசுத்தலைவரின் உரை மீதான விவாதத்துக்குப் பதிலளித்துப் பேசும்போது இலங்கை அரசைப் பற்றியும், தமிழர்களுக்கான அரசியல் உரிமைகள் வழங்கப்படவேண்டியதன் தேவை பற்றியும் கருத்துத் தெரிவித்திருக்கிறார். 'தமிழர்களுக்கு சமத்துவம், கௌரவம், நீதி மற்றும் சுய மரியாதையை உறுதிசெய்யும் விதமாக அமெரிக்கத் தீர்மானத்தின் இறுதி வடிவம் இருந்தால் அதை இந்தியா ஆதரிக்கும்’ என்ற பொருளில் அவரது உரை அமைந்திருக்கிறது. 

ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்காவால் முன்மொழியப் பட்டிருக்கும் வரைவுத் தீர்மானம் உறுப்பு நாடுகளுக்கு சுற்றுக்கு விடப்பட்டிருப்பது மட்டுமல்லாமல் ஊடகங்களிலும் வெளியாகியிருக்கிறது. அது தற்போது பிரதமர் சொல்லியிருக்கும் கருத்துகளை உள்ளடக்கியதாக இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. ’இலங்கை அரசு சர்வதேச சட்டங்களை மீறியிருக்கிறது’ என்று கூறப்பட்டிருப்பது  தவிர வேறு நம்பிக்கை தரும் அம்சங்கள் அதில் இல்லை.  ஐ.நா. பொதுச்செயலாளர் திரு. பான் கி மூன் அமைத்த குழு இலங்கை அரசு போர்க் குற்றங்களை இழைத்திருக்கிறது எனத் தனது அறிக்கையில் உறுதிப்படுத்திய பிறகும்கூட அமெரிக்கா முன்மொழிந்திருக்கும்  தீர்மானத்தில் 'போர்க்குற்றம்' என்ற சொல்லே இல்லாதது ஏமாற்றம்தான். 

எனினும் இப்போதுதான் சர்வதேசச் சமூகம் தமிழர் பிரச்சனை குறித்து அக்கறை காட்ட ஆரம்பித்திருக்கிறது. சர்வதேசச் சட்டங்கள் மீறப்பட்டிருக்கிறது என்ற ஒரு வாக்கியமாவது தீர்மானத்தில் இருக்கிறதே என்ற வகையில்தான் இந்தத் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என நாம் வலியுறுத்தினோம். பிரதமர் மன்மோகன் சிங் தற்போது தெரிவித்திருக்கும் பதிலுரையில் இலங்கைப் பிரச்சனை குறித்து நான்கு பத்திகள் இருக்கின்றன. அதில் முதல் மூன்று பத்திகளில்  இலங்கை அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளைப் பட்டியலிட்டு அந்த அரசின் மீது நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் பிரதமர்.  ஒரு சிறு குற்றச்சாட்டுகூட இலங்கை அரசு மீது சாட்டப்படவில்லை.  அதுமட்டுமின்றி தீர்மானத்தை ஆதரிப்போம் என்று உறுதியாக அவர் தெரிவிக்கவும் இல்லை.  பிரதமரின் பேச்சையும் இதுவரை வெளியுறவு அமைச்சர், நிதி அமைச்சர் ஆகியோர் பேசிவந்ததையும் ஒட்டுமொத்தமாக வைத்துப் பார்க்கும்போது இந்திய அரசு தமிழ் மக்களின் போராட்டங்களை திசைதிருப்புவதற்காக இப்படி நாடகம் ஆடுகிறதோ என்ற ஐயமே நமக்கு எழுகிறது.

தமிழர்கள் சமத்துவம், கௌரவம், நீதி மற்றும் சுய மரியாதையோடு வாழ்வதுதான் இந்தியாவின் நோக்கம் என்றால் அதற்கான திருத்தங்களைச் செய்யவேண்டும். அப்படிச் செய்தால் இந்தத் தீர்மானத்தை ஆதரிப்போம் என்றல்லவா முதலில் இந்திய அரசு கூறியிருக்க வேண்டும்? அதை விடுத்து எந்த நாட்டுக்கு எதிரான எந்தவொரு தீர்மானத்தையும் இந்தியா ஆதரிக்காது என ஏன் கூறவேண்டும்? ஐ.நா மனித உரிமைக் கவுன்சிலில் நடைபெறவிருக்கும் வாக்கெடுப்பில் இந்தியா என்ன நிலை எடுக்கப் போகிறது என்பது இன்னும் கேள்விக் குறியாகவே இருக்கிறது. எனவே இந்திய அரசின் அணுகுமுறை குறித்துத்  தமிழர்கள் விழிப்போடு இருக்கவேண்டிய நேரம் இது என்பதை மட்டும் எச்சரிக்கையோடு கூற விரும்புகிறோம். 

இருந்தபோதிலும், பிரதமர் மன்மோகன் சிங் கூற்றில் நல்லெண்ண அடிப்படையில், விடுதலைச் சிறுத்தைகள் நாளை (20-03-2012) நாடாளுமன்ற வளாகத்தில் நடத்தவிருந்த உண்ணாநிலை அறப்போராட்டத்தையும், நாளை மறுநாள் (21-03-2012) மாநிலம் முழுவதும் நடத்தவிருந்த உண்ணாநிலை அறப்போராட்டத்தையும் தற்காலிகமாகத் தள்ளிவைக்கிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
 
இவண்
தொல்.திருமாவளவன்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக