விடுதலைச்சிறுத்தைகளுக்கெதிரான அடக்குமுறையை தமிழகஅரசு கைவிட வேண்டும்! வன்னிஅரசை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்! - தொல்.திருமாவளவன் அறிக்கை
கூடங்குளம் அணுமின் உலையை எதிர்த்து அப்பகுதியைச் சார்ந்த பொதுமக்கள் மட்டுமின்றி தமிழகம் தழுவிய அளவில் பல்வேறு அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் போராடி வருகின்றன. அந்த வகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் கூடங்களும் அணுஉலையைத் திறக்கக் கூடாதென வலியுறுத்தி வருகிறது. பல்வேறு அமைப்புகளோடு இணைந்து அவ்வப்போது போராடி வருகிறது. கூடங்குளத்தில் மட்டுமின்றி, இந்திய அளவில் எங்குமே அணுஉலைகள் கூடாது என்பதுதான் விடுதலைச் சிறுத்தைகளின் நிலைப்பாடாகும். அணுசக்திக்கெதிரான மக்கள் இயக்கமும் இதே கருத்தின் அடிப்படையில் நாடு தழுவிய அளவில் போராட்டங்களை நடத்தி வருகிறது.
தற்போதைய சூழலில் கூடங்குளத்தில் போராடிவரும் போராட்டக் குழுவினரை பொய் வழக்குகளில் கைது செய்வதும், அப்பகுதிவாழ் மக்களை அச்சுறுத்துவதும் போன்ற நடவடிக்கைகளில் தமிழகக் காவல்துறை ஈடுபட்டு வருகிறது. மேலும் அப்பகுதியில் 144 தடையாணையையும் பிறப்பித்திருக்கிறது.
இந்த அடக்குமுறை நடவடிக்கைகளை எதிர்த்து 23-3-2012 அன்று நெல்லையில் ஒருமித்த கருத்துள்ள அரசியல் கட்சிகளும், கட்சி சார்பற்ற அமைப்புகளும் ஒருங்கிணைந்து கண்டனப் பேரணி நடத்த முயற்சித்தனர். அந்நிகழ்வில் விடுதலைச் சிறுத்தைகளும் பங்கேற்றது. தென்மாவட்டப் பொறுப்பாளர்களும், மாநிலப் பொறுப்பாளர்களும் பெருவாரியாக இப்பேரணியில் கலந்துகொள்ள அணிதிரண்டனர். பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் பேரணியில் கலந்துகொள்வதற்காக அங்கே திரண்டிருந்தோரை காவல்துறை கைது செய்து திருமண மண்டபங்களில் அடைத்து வைத்தது. அவர்களில் விடுதலைச் சிறுத்தைகளும் அடங்குவர். பின்னர் மாலை அனைவரையும் காவல்துறை விடுதலை செய்தது.
விடுதலைச் சிறுத்தைகளின் செய்தித் தொடர்பாளர் வன்னிஅரசு அவர்களும் அவ்வாறு கைது செய்யப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டார். விடுவிக்கப்பட்ட அவர் சென்னைக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது இராஜபாளையம் அருகே நள்ளிரவில் 'க்யூ பிரிவு' காவல்துறையினரால் வழிமறிக்கப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார். காரணம் எதுவும் சொல்லப்படாமல், இராஜபாளையம் காவல்நிலையத்தில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்.
அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்ற நாளிலிருந்து தமிழகமெங்கும் விடுதலைச் சிறுத்தைகளின் முன்னணிப் பொறுப்பாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. சமூக விரோதிகளால் தாக்கப்படுவதும், படுகொலை செய்யப்படுவதும் ஆங்காங்கே நிகழ்ந்து வருகிறது. அத்துடன் பெரும்பாலான மாவட்டங்களில் காவல்துறையினர் பொய்வழக்குகளைப் புனைவதும், ரவுடி முத்திரை குத்துவதும் போன்ற அடக்குமுறைகளை விடுதலைச் சிறுத்தைகளுக்கெதிராக ஏவிவருகின்றனர்.
அந்த வரிசையில் தற்போது நெல்லை அணுஉலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுத் திரும்பிய வன்னிஅரசு மீதும் பொய்வழக்குப் போட காவல்துறை முயற்சிப்பதாகத் தெரிகிறது. இத்தகைய போக்கை தமிழக அரசு - குறிப்பாக தமிழகக் காவல்துறை - கைவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். சட்டவிரோதமாக நள்ளிரவிலிருந்து காவல்நிலையத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ள வன்னிஅரசு அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டுமென தமிழக அரசை விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது.
- இவண்
தொல்.திருமாவளவன்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக