நாடாளுமன்றத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் அறிக்கையை கிழித்தெறிந்து தொல். திருமாவளவன் ஆவேச முழக்கம் - வெளிநடப்பு
நாடாளுமன்றத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் அறிக்கையை கிழித்தெறிந்து தொல். திருமாவளவன் ஆவேச முழக்கம் - வெளிநடப்பு
ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மார்ச் 13, 14 ஆகிய இரு நாள்களிலும் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை எழுப்பினர்.
அதனடிப்படையில் நேற்று (14-3-2012) பிற்பகல் 4 மணியளவில் மக்களவையில் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களுக்கான மீள்குடியமர்வு மற்றும் மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்கு இந்திய அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளைப் பற்றியும், இந்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான உறவு நிலைகள் பற்றியும் விரிவாகச் சொல்லப்பட்டிருந்தது. அதேவேளையில், ஜெனிவா தீர்மானம் தொடர்பாக இந்திய அரசின் நிலைப்பாடு என்ன என்பது பற்றி வெளிப்படையாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. அண்டை நாட்டுடன் இந்திய நாட்டுக்கான நல்லுறவு பாதிக்கப்படாத வகையில்தான் எந்த ஒரு முடிவும் எடுக்கப்படும் என்றும், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், சிங்கள அரசுக்கு எதிரான தீர்மானம் பற்றிய விவாதம் நடைபெறும்போது இந்திய அரசு உரிய முடிவு எடுக்கும் என்றும் அவ்வறிக்கையில் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்திருந்தார்.
இந்த அறிக்கை முற்றிலும் தமிழினத்திற்கு எதிரானது என்று எதிர்ப்புத் தெரிவித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பேரவைத் தலைவரின் இருக்கைக்கு எதிரே சென்று அறிக்கையைக் கிழித்தெறிந்தார். 'இந்திய அரசே போர்க் குற்றவாளிகளை ஆதரிக்காதே!', 'தமிழினத்துக்குத் துரோகம் செய்யாதே!' என்று ஆவேசமாக முழக்கங்களை எழுப்பினார். பின்னர் இந்திய அரசின் போக்கைக் கண்டித்து அவையிலிருந்து வெளிநடப்புச் செய்தார்.
அப்போது தி.மு.க. உறுப்பினர்களும் இந்த அறிக்கை தங்களுக்கு உடன்பாடு இல்லை என்று கண்டனம் தெரிவித்து வெளிநடப்புச் செய்தனர். அதிமுக மற்றும் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் உறுப்பினர்கள் எஸ்.எம். கிருஷ்ணா அறிக்கைக்கு எதிராகத் தொடர்ந்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
வெளிநடப்பு செய்த தொல்.திருமாவளவன் மீண்டும் அவைக்குள்ளே வந்து அதிமுக உறுப்பினர்களோடு இணைந்து தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர். சுமார் 5 நிமிடங்கள் நீடித்த கண்டன முழக்கங்களையடுத்து பேரவைத் தலைவர் 4.30 மணி வரையில் அவையை ஒத்திவைத்தார்.
ஜெனிவா தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்காத நிலை எடுத்தால்
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் தொடர்வது பற்றி மறுபரிசீலனை!
பின்னர் மக்களவை கூடியதும் இரவு 7 மணியளவில் குடியரசுத் தலைவரின் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் தொல்.திருமாவளவன் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதன் சுருக்கம் பின்வருமாறு:
பேரவைத் தலைவர் அவர்களே, வணக்கம்.
குடியரசுத் தலைவரின் உரை மீதான இந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரை யாற்றுவதற்கு வாய்ப்பு வழங்கியமைக்காக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். குடியரசுத் தலைவரின் உரையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் கடந்த இரண்டரை ஆண்டு காலச் சாதனைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், அரசின் கொள்கை முடிவுகள் மற்றும் செயல்திட்டங்கள் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. ஆனால், தலித் உள்ளிட்ட விளிம்பு நிலை மக்களின் மேம்பாடு தொடர்பாக குறிப்பிடும்படியான கருத்துக்கள் ஏதும் இடம்பெறவில்லை என்பது வேதனையளிக்கிறது. குறிப்பாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் தனியார் துறைகளில் இடஒதுக்கீடு வழங்குவதற்கு ஆவன செய்யப்படும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் கடந்த இரண்டரை ஆண்டுகளில் அதுபற்றி எந்த அறிவிப்பும் செய்யப்படவில்லை. தனியார் துறைகளில் இடஒதுக்கீடு இல்லாமல் தலித்துகள், சிறுபான்மையினர் மற்றும் இதர விளிம்புநிலை மக்கள் வாழ்வில் மேம்பாடு அடைய முடியாது. ஆகவே, தனியார் துறைகளில் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக தனிச் சட்டம் ஒன்றை இந்த அரசு இயற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
அடுத்து, குடியரசுத் தலைவரின் உரையில் ஈழத் தமிழர்கள் குறித்து ஒரே ஒரு வரிச் செய்தி மட்டுமே இடம்பெற்றுள்ளது. அதுவும் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான மீள்குடியமர்வு மற்றும் மறுவாழ்வுப் பணிகள் பற்றி மட்டுமே சொல்லப்பட்டுள்ளது. அங்கே ஒவ்வொரு நாளும் தமிழ் மக்கள் மீது சிங்களப் படையினர் அடக்குமுறைகளை ஏவி வருகின்றனர். தமிழர்களின் தாயகத்தை சிங்கள இராணுவம் முழுமையாக ஆக்கிரமிப்புச் செய்து வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவிகள் பல்லாயிரக் கணக்கில் பாலியல் வல்லுறவுக்காளாக்கப்பட்டு கர்ப்பமடைந்துள்ளனர் என்கிற தகவல்கள் நெஞ்சைப் பதற வைக்கின்றன. கணவரை இழந்த தாய்மார்கள் கட்டாயப் பாலியல் தொழிலுக்கு ஆட்படுத்தப்படுவதாகவும், வடக்கு மாகாணத்தில் மட்டும் 180க்கு மேற்பட்ட பாலியல் தொழிலுக்கான விடுதிகளை உருவாக்கியிருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. போதைப் பொருட்களின் மூலம் இளைய தலைமுறையைப் பாழ்படுத்துவதாகவும் தெரியவருகிறது. இத்தகைய அரச பயங்கரவாதத்திலிருந்தும், கலாச்சாரச் சீரழிவிலிருந்தும் தமிழ் மக்களை இந்திய அரச பாதுகாத்திட வேண்டும்.
இன்னொரு நாட்டின் விவகாரத்தில் இந்தியா தலையிடுவதில்லை என்று இந்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால், தென்னாப்பிரிக்க நிறவெறி அரசுக்கு எதிராக இந்திய அரசு ஏற்கனவே உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து பங்களாதேசை உருவாக்கியுள்ளது. சீனாவுக்கு எதிராக தலாய்லாமாவுக்கு இந்தியாவில் அடைக்கலம் கொடுத்துள்ளது. பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக இந்திய அரசு செயல்பட்டுள்ளது. ஆனால் ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் மட்டும் இன்னொரு நாட்டின் விவகாரத்தில் தலையிட முடியாது என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. தமிழர்கள் என்றாலே இந்திய அரசு தொடர்ந்து அலட்சியம் செய்து வருகிறது. முல்லைப் பெரியாறு அணைச் சிக்கல், காவிரி நீர்ச் சிக்கல், பாலாற்று அணை சிக்கல், தமிழக மீனவர்கள் பிரச்சனை போன்ற அனைத்திலும் தமிழர்களுக்கு எதிராகவே இந்திய அரசு செயல்பட்டு வருகிறது. தமிழக மீனவர்கள், சிங்களக் கடற்படையினரால் ஒவ்வொரு நாளும் தாக்கப்படுகிறார்கள், கொலை செய்யப்படுகிறார்கள். இதனை இந்திய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையளிக்கிறது. தமிழினத்துக்கு எதிரான இந்திய அரசின் இத்தகைய போக்கை விடுதலைச் சிறுத்தைகளின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இந்நிலையில், ஜெனிவா தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்காத நிலை எடுத்தாலோ அல்லது நடுநிலை வகித்தாலோ ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் தொடர்வது பற்றி மறுபரிசீலனை செய்ய நேரிடும் என்பதைத் தெரிவித்துக்கொண்டு நிறைவுசெய்கிறேன்.
நன்றி வணக்கம்.
இவ்வாறு தமது உரையில் தொல்.திருமாவளவன் குறிப்பிட்டார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக