கூடங்குளம் எதிர்ப்பு : மாணவர் ஆர்பாட்டத்தில் தொல்.திருமாவளவன்

கூடங்குளம் அணுமின் உலையை திறப்பதற்கு ஆதரவாக தமிழக அரசு முடிவு எடுத்ததை கண்டித்தும் கூடங்குளம் இடிந்தகரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான காவல்துறையினரை இறக்கி பொதுமக்களிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்துவதுடன் 50 பெண்கள் உட்பட போராட்டக்குழுவினர் பலரையும் பொய் வழக்குகளில் கைது செய்து அடக்குமுறைகளை ஏவுவதை கண்டித்தும் புதுதில்லியில் உள்ள புதிய தமிழ்நாடு விடுதியின் வாசலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஜவஹர்லால் பல்கலைகழக மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள், அணுசக்திக்கு எதிரான இயக்கத்தை சார்ந்தவர்கள் என பல்வேறுதரப்பை சார்ந்தவர்கள் அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டனர்.

மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்த தொல்.திருமாவளவன் நேரடியாக மாணவர்களின் ஆர்பாட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்று தமது ஆதரவை வெளிப்படுத்தினார். மாணவர்களோடு தரையில் அமர்ந்து சுமார் ஒரு மணி நேரம் கூடங்குளம் அணு உலைக்கு எதிராகவும், அணுசக்திக்கு எதிராகவும் தொல்.திருமாவளவன் அவர்கள் முழக்கங்களை எழுப்பியவாறு கலந்துக்கொண்டார். பின்னர் அவர்களிடையே ஒரு சில நிமிடங்கள் உரையாற்றினார். அவர் பேசும்போது "கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது என்றும் அணுசக்திக்கு எதிராக இந்த போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதில் விடுதலைச் சிறுத்தைகள் உறுதியாக இருக்கும்" என்றும் தொல்.திருமாவளவன் கூறினார். அத்துடன் போராட்டக்குழுவினருக்கு எதிராக தற்போது தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை கண்டித்தும் பேசினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக