கூடங்குளம் போராட்டக் குழுவினருடன் தமிழக அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் - தொல்.திருமாவளவன் அறிக்கை


கூடங்குளம் அணுஉலையை எதிர்த்து காலவரையற்ற உண்ணாநிலை அறப்போம் 
போராட்டக் குழுவினருடன் தமிழக அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்
கைது செய்யப்பட்ட வன்னிஅரசு உள்ளிட்டோரை உடனடியாக விடுவிக்க வேண்டும் தொல், திருமாவளவன் அறிக்கை

கூடங்குளம் அணுஉலையை எதிர்த்து கடந்த ஓராண்டு காலமாகத் தொடர்ந்து போராடிவரும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் தற்போது தமிழகக் காவல்துறை கடுமையான அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  இதனால் அப்பகுதி பெரும் பதற்றத்திற்குள்ளாகி யிருப்பதுடன், அன்றாடத் தேவைக்கான உணவுப் பொருட்கள், பால், மண்ணெண்ணெய் மற்றும் மருந்துகள் உள்ளிட்ட இன்றியமையாத தேவைகள் அப்பகுதிக்குள் செல்லவிடாமல் திட்டமிட்டே காவல்துறையினரால் தடுக்கப்படுகிறன்றன.  தமிழக அரசின் மனிதநேயமற்ற இப்போக்கை விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாகக் கண்டிக்கிறது. இந்நிலையில், போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் திரு. உதயகுமார் தலைமையில் கடந்த  8 நாட்களாக காலவரையற்ற உண்ணாநிலை அறப்போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  போராட்டக் குழுவினர் மற்றும் பொதுமக்கள் மீது புனையப்பட்டுள்ள பொய் வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்.  பொய் வழக்குகளில் சிறைப்படுத்தப்பட்டுள்ள 50 பெண்கள் உள்ளிட்ட சுமார் 200 பேரையும் நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.  அணுஉலையிலிருந்து 30 கிலோ மீட்டர் சுற்றளவிலுள்ள பொதுமக்களுக்கு இடப்பெயர்ச்சி மற்றும் பேரிடர் பாதுகாப்புப் பயிற்சி போன்றவற்றை உடனடியாக வழங்க வேண்டும்.  பாதிப்பு நேரும் நிலையில், இழப்பீடு வழங்குவது தொடர்பாக இந்திய - ரஷ்ய நாடுகளுக்கிடையில் கையெழுத்திடப்பட்டுள்ள ஒப்பந்தம் தொடர்பான விவரங்களை பொதுமக்களுக்கு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். போராட்டக் குழுவினர் மீது தீவிரவாத முத்திரை குத்தும் முயற்சியைக் கைவிட வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தற்போது தொடர் உண்ணாநிலை அறப்போராட்டத்தில் ஈடுபட்டுவரும் திரு. உதயகுமார் தலைமையிலான போராட்டக் குழுவினரோடு, தமிழக முதல்வரோ அல்லது தமிழக முதல்வரால் நியமிக்கப்படும் பிரதிநிதிகளோ உடனடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் தமிழக அரசை வற்புறுத்துகிறது.

23-3-2012 அன்று நெல்லையில் நடைபெற்ற அணுஉலையை எதிர்க்கும் அரசியல் கட்சிகள் மற்றும் கட்சி சார்பற்ற அமைப்புகளின் பேரணியில் கலந்துகொண்ட விடுதலைச் சிறுத்தைகளின் பொறுப்பாளர் வன்னிஅரசு மற்றும் ஒரு சிலர் மீது பொய்வழக்குப் புனைந்து சிறைப்படுத்தியிருப்பதும், அவர்கள் மீது தீவிரவாத முத்திரை குத்தி பொதுமக்களையும் அணுஉலை எதிர்ப்பாளர்களையும் அச்சுறுத்துவதும் போன்ற நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் தமிழக அரசின் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறது.  அவர்கள் மீதான பொய் வழக்குகளைத் திரும்பப் பெற்று சிறைப்படுத்தப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் வேண்டுகோள் விடுக்கிறது.
 
இவண்
தொல்.திருமாவளவன்
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக