தொடர்வண்டித்துறை (ரயில்வே) அமைச்சரின் பதிலுரை! மக்களவையிலிருந்து தொல்.திருமாவளவன் வெளிநடப்பு !

இந்திய தொடர்வண்டித்துறையில் புதிதாக பொறுப்பேற்ற மாண்புமிகு அமைச்சர் முகுல்ராய் அவர்கள் 22.03.2012 அன்று 12 மணியளவில் தொடர்வண்டித்துறைக்கான நிதிநிலை அறிக்கையின் மீது நடந்த விவாதங்களை அடுத்து பதிலுரை வழங்கினார். சுமார் அரைமணி நேரம் நீடித்த அவரது பதிலுரையில் "safai karamchari" எனப்படும் துப்புரவு பணியாளர்கள் தொடர்பாக அமைச்சரின் பதிலுரையில் ஏதும் குறிப்பிடபடவில்லை. குறிப்பாக தொடர்வண்டி நிலையங்களில் நாடுதழுவிய அளவில் பல்லாயிரக்கணக்கானோர் கைகளில் மலம் அல்லும் தொழிலை செய்து வருகின்றனர்.

இது தொடர்பாக மக்களவையில் தொல்.திருமாவளவன் கடந்த 19.03.2012 அன்று நடந்த விவாதத்தில் கலந்துக்கொண்டு பேசினார். குடியரசு தலைவரின் உரையில் குறிப்பிட்டுடிருப்பதை அடுத்து கைகளால் மலம் அல்லும் தொழிலை முற்றிலுமாக ஒழிப்பதற்கு இந்த நிதிநிலை அறிக்கையில் இந்திய அரசு நிதி ஒதுக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். அமைச்சரின் பதிலுரையின் போது இதற்கென நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பாக குறிப்பிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆகவே அது தொடர்பான அறிவிப்புக்காக காத்திருந்த தொல்.திருமாவளவன் அவர்களுக்கு அமைச்சரின் பதிலுரையில் அதுபற்றிக் குறிப்பிடாதது அதிர்ச்சியளித்தது. அதனால் மக்களவையில் எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பினார். 'அமைச்சரின் பதிலுரையில் எனக்கு மனநிறைவு இல்லை' என்றும் 'மலம் அல்லும் தொழிலை ஒழிப்பது தொடர்பாக அமைச்சர் ஏதும் குறிப்பிடாதது ஏன்?' என்றும் 'மனிதன் மலத்தை மனிதன் கைகளால் அள்ளுவது இந்த தேசத்திற்கே அவமானம்' என்றும் தொல்.திருமாவளவன் ஆவேசமாக அவை தலைவரை நோக்கி முழக்கங்களை எழுப்பினார்.


மேலும் இந்திய அரசின் போக்கை கண்டித்து வெளிநடப்பு செய்தார். கட்டண உயர்வை ஓரளவு திரும்ப பெறுவதாக அமைச்சர் அறிவித்தார் என்பதில் அனைத்து கட்சியினரும் மனநிறைவு அடைந்து அமைதியாய் அவையில் அமர்ந்து இருந்த நிலையில் தொல்.திருமாவளவன் அவர்கள் மட்டும் கைகளால் மலம் அல்லும் இழிவை கண்டித்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக