இந்திய அரசின் நிதிநிலையறிக்கை: அடித்தட்டு மக்களுக்கு எதிரானது மேல்தட்டு வர்க்கத்தினருக்குப் பாதுகாப்பானது தொல்.திருமாவளவன்


16-3-2012 இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்திய அரசின் நிதிநிலை அறிக்கையானது மிகுந்த ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் அளித்துள்ளது.  ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் குறிப்பான எந்த அறிவிப்புமே இல்லை.  

வரி விலக்கு அளிப்பதற்கான வருமான வரம்பு ரூ. 1,80,000லிருந்து ரூ. 2 இலட்சமாகத் தளர்த்தப்பட்டுள்ளது.  இதனால் கடைநிலை ஊழியர்கள்கூடப் பயன்பெற இயலாது.  அடுத்து, எளிய மக்களை வெகுவாகப் பாதிக்கச் செய்யும் வகையில் சேவை வரி மற்றும் கலால் வரியை தலா 2 சதவிகிதம் உயர்த்தியுள்ள இந்திய அரசு, கார்ப்பரேட் என்கிற பெரும் தொழில் நிறுவனங்களுக்கு தொழில் வரியை உயர்த்தவில்லை என்பதும், திரைப்படத் துறையினருக்கு முற்றிலுமாக சேவை வரியிலிருந்து விலக்களித்திருப்பது என்பதும் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.  

உலக அளவில் போர்ச் சூழலோ அல்லது அண்டை நாடுகளிலிருந்து அச்சுறுத்தலோ ஏதுமில்லாத நிலையில் இராணுவத்திற்கென்று ரூ. 2 லட்சம் கோடி ஒதுக்கியிருப்பது மக்களின் வரிப்பணம் விரயம் செய்யப்படுவதை உறுதிப்படுத்துகிறது.  இவ்வறிக்கையில் கல்வித் துறைக்கென சிறப்பான திட்டம் ஏதும் இல்லை.  ஏற்கனவே நாடு தழுவிய அளவில் 6,000 சிறப்புப் பள்ளிகளை உருவாக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தனியார் மற்றும் அரசு கூட்டு முயற்சியில் 2,500 பள்ளிகள் உருவாக்கப்படும் என்று அறிவித்திருப்பது கல்வித் துறையை தனியார்மயப்படுத்தும் அரசின் முயற்சியை வெளிப்படுத்துகிறது.  அதேவேளையில், அனைவரும் கல்வி பெறும் உரிமையை நடைமுறைப்படுத்துவதற்கான எந்த அறிவிப்பும் இந்த அறிக்கையில் கூறப்படவில்லை. 

தாழ்த்தப்பட்டோர் - பழங்குடியினரின் மேம்பாட்டுக்கென இந்த அரசு துளியும் அக்கறை காட்டவில்லை என்பது இந்த நிதிநிலை அறிக்கையிலிருந்து புலப்படுகிறது. குறிப்பாக, தமது தேர்தல் அறிக்கையில் கூறியபடி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தனியார் துறைகளில் தலித் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது பற்றியோ பின்னடைவுக் காலிப் பணியிடங்களை நிரப்புவது பற்றியோ ஏதும் அறிவிக்கவில்லை என்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது.

ஈழத் தமிழர்களுக்கான மறுவாழ்வுத் திட்டங்கள் பற்றி இந்த அறிக்கையில் ஒருவரி செய்திகூட இல்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது.  குறிப்பாக, மீள்குடியமர்வு மற்றும் மறுவாழ்வுப் பணிகளுக்கு இந்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்தோ, தற்போது அங்கு நிகழ்ந்துவரும் ஆக்கிரமிப்பு மற்றும் கலாச்சாரச் சீரழிவுகளைத் தடுப்பது பற்றியோ அவற்றுக்கான இந்திய அரசின் முயற்சிகள் பற்றியோ ஏதும் குறிப்பிடப்படவில்லை.  இது ஒட்டுமொத்தத்தில் தமிழ்ச் சமூகத்தை இந்திய அரசு தொடர்ந்து புறக்கணித்துவருவதை மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது.

விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டுள்ள இந்திய தேசத்தில் விவசாயத்தை மேம்படுத்துவதற்கோ, விவசாயிகள் பயன்படுவதற்கோ உரிய அறிவிப்புகளை இவ்வறிக்கையில் காண இயலவில்லை.  இதுவும் ஏமாற்றத்தை அளிப்பதாக உள்ளது.  நாடு தழுவிய அளவில் கடுமையான மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் அதனை எதிர்கொள்வதற்கு ஏற்ற வகையில் மாற்று எரிசக்தித் திட்டங்களைப் பற்றியோ மின் உற்பத்தியைப் பெருக்குவதற்கான செயல்திட்டங்களோ இவ்வறிக்கையில் ஏதுமில்லை.

ஆறுதல் அளிக்கக்கூடியதாகவும் வரவேற்கக்கூடியதாகவும் அமைந்திருப்பது திறன்மேம்பாட்டுப் பயிற்சிக்கென ரூ. 1000 கோடி ஒதுக்கீடு செய்திருப்பது மட்டுமே.  ஆனால், இப்பயிற்சிகள் சர்வதேச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் வழங்குவதற்குரிய அளவில் அமைந்திட வேண்டும்.  இல்லையேல் இந்த முயற்சியும், ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிற நிதியும் விரயமாகும்.  பெண்கள், சிறுபான்மையினர் உள்ளிட்ட இதர நலிவடைந்த பிரிவினரின் மேம்பாடு குறித்தும் நிதிநிலை அறிக்கையில் ஏதும் சொல்லப்படவில்லை.

ஒட்டுமொத்தத்தில் இந்திய அரசின் இந்த நிதிநிலை அறிக்கை தொழிலதிபர்களுக்கும், மேல்தட்டு வர்க்கத்தினருக்கும் பயன்படுவதாக அமைந்துள்ளதே தவிர, ஏழை எளிய மக்களுக்கு, நலிவடைந்த பிரிவினருக்கு பயன்தருவதாக அமையவில்லை.  பெரும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் அளிப்பதாக அமைந்துள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக