இலங்கை தமிழர்களுக்கு அமைதியான வாழ்வு கிடைக்க உலக நாடுகள் தமிழீழ விடுதலைக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும்



இலங்கை தமிழர்களுக்கு அமைதியான வாழ்வு கிடைக்க உலக நாடுகள் தமிழீழ விடுதலைக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் விடுதலை சிறுத்தைகள் மாநாட்டில் தீர்மானம்
-
சென்னை, டிச.27- இலங்கை தமிழர்களுக்கு அமைதியான வாழ்வு கிடைக்க இந்திய அரசு மற்றும் உலக நாடுகள் தமிழீழ விடுதலைக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழீழ அங்கீகார மாநாடு

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை தொடக்க விழாவும், தமிழீழ அங்கீகார மாநாடும் சென்னையில் நேற்று நடைபெற்றது. அமைந்தகரை புல்லா அவென்வில் நடந்த இந்த மாநாட்டுக்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கினார். பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, கவிஞர் காசி ஆனந்தன், திராவிட இயக்க தமிழக பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன், நடிகர் மன்சூர்அலிகான் உள்பட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.

கொடி வணக்கம்
கட்சி கொடியை ஏற்றி இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறையை திருமாவளவன் தொடங்கிவைத்தார். அப்போது, இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாநில பொறுப்பாளர்கள் கொடி வணக்கம் செலுத்தி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பின்னர், மாநாட்டு மேடையில், `எகிறிப்பாய்', `கட்டறுந்த புயல்' ஆகிய 2 இசை டி.வி.டி.க்கள் வெளியிடப்பட்டன. ஜி.கே.மணி, சுப.வீரபாண்டியன் ஆகியோர் வெளியிட, கவிஞர் காசி ஆனந்தன், ரவிக்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் பெற்றுக்கொண்டனர். பின்னர், மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ஒற்றை தீர்மானத்தை திருமாவளவன் வாசித்தார். அந்த தீர்மானம் விவரம் வருமாறு:-

விடுதலைக்கு அங்கீகாரம்

1948-ம் ஆண்டு பிரிட்டிஷ்காரர்கள் தமிழீழத்தை விட்டு வெறியேறுகிறபோது தமிழீழத்தின் இறையாண்மை தமிழீழ மக்கள் கையில் ஒப்படைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இந்த இறையாண்மை இலங்கை தீவில் பெரும்பான்மையினராக இருந்த சிங்களர் கையில் ஒப்படைக்கப்பட்டது. தமிழீழத்தின் இறையாண்மை சிங்களவரிடம் இருந்து தமிழர் கையில் ஒப்படைக்க வேண்டும். தமிழீழ தேசிய இனத்தின் இறையாண்மையை தமிழர் மீண்டும் பெற தமிழீழ மக்களுக்கு அதன்வழி நிலையான, உறுதியான அமைதி வாழ்வு கிடைக்க, இந்திய அரசு உலக நாடுகளின் அரசுகளும் தமிழீழ விடுதலைக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும். மேற்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நன்றி : தினத்தந்தி
--------------------------------------------------------------------------------------------------------------------------------

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சென்னையில் நேற்று நடத்திய தமிழீழ அங்கீகார மாநாட்டில் தமிழ் ஈழத்துக்கு ஆதரவான தீர்மானத்தை முன்மொழிந்த திருமாவளவன் பேசுகையில், "தனி தமிழ் ஈழத்தை இந்தியாவும் மற்ற உலக நாடுகளும் அங்கீகரிக்க வேண்டும். தனி தமிழீழம் வேண்டும் என்ற கோரிக்கையை தமிழர்கள் எடுத்த எடுப்பிலேயே வைக்கவில்லை.

இலங்கை மண்ணுக்குச் சொந்தக்காரர்களான ஈழத் தமிழர்களைப் புறக்கணித்துவிட்டு 1948-ல் சிங்களர்களிடம் ஆட்சியை ஒப்படைத்தது பிரிட்டிஷ் அரசு. ஈழத்தந்தை செல்வநாயகம் தலைமையில், கூட்டாட்சி வேண்டும் என்று 28 ஆண்டுகள் அமைதி வழியில் தமிழர்கள் போராடினார்கள்.

தமிழர்களின் அமைதிப் போராட்டத்துக்கு இலங்கை அரசு செவிசாய்க்கவில்லை. 1956, 1958, 1961-ம் ஆண்டுகளில் நடைபெற்ற கலவரங்களில் தமிழர்கள் அடக்கி ஒடுக்கப்பட்டார்கள்.

28 ஆண்டுகள் அமைதி வழியில் போராடியும் வெற்றி கிடைக்காததால் 1976-ல் மட்டுக்கோட்டையில் நடைபெற்ற மாநாட்டில், "தனித் தமிழ் ஈழமே தீர்வு, அதுவே எங்கள் கோரிக்கை" என்று ஈழத் தந்தை செல்வநாயகம் தீர்மானம் நிறைவேற்றினார். அதன் பிறகுதான் அமைதிப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக மாறியது.

திருமாவளவனைக் கைது செய் என்று குரல் எழுப்புபவர்கள் இந்த வரலாற்றைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

நாங்கள் ஈழத் தந்தை செல்வநாயகத்தின் தனித் தமிழ் ஈழ கோரிக்கையைத்தான் ஆதரிக்கிறோம். 28 ஆண்டுகள் அமைதி வழியிலும், 32 ஆண்டுகள் ஆயுதம் ஏந்தியும் போராடி எந்தப் பலனும் இல்லை.

இதுவரை ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 10 லட்சம் தமிழர்கள் அகதிகளாக விரட்டப்பட்டுள்ளனர். 2 லட்சம் வீடுகள், கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. ஆனால், இங்கு சிலர் ஒருவருக்காக அழுது கொண்டிருக்கிறார்கள். நாங்கள் ஒன்றரை லட்சம் மக்கள் கொல்லப்பட்டதுபற்றிப் பேசுகிறோம்.

இலங்கைப் பிரச்சனை தீர செய்து கொள்ளப்பட்ட பண்டாரநாயகா- செல்வநாயகம் ஒப்பந்தம், டட்லி -செல்வா ஒப்பந்தம், ராஜீவ் -ஜெயவர்த்தனா ஒப்பந்தம் என்று எந்த ஒப்பந்தத்தையும் இலங்கை அரசு நிறைவேற்றவில்லை. எனவே தனித் தமிழ் ஈழம்தான் பிரச்னைக்குத் தீர்வு.

திமுக - காங்கிரஸை பிரிக்க அவதூறு பரப்புகிறார்கள். நான் காங்கிரசை மதிக்கிறேன். சோனியா காந்தியை, ராஜீவ் காந்தியை மதிக்கிறேன். ஆனால், இளங்கோவனும், தங்கபாலுவும் தடை செய்ய வேண்டும் என்கிறார்களே, அவர்களை இயக்குவது அம்மாவா? அன்னையா?

இந்தப் பிரச்சனையை அவர்கள் மீண்டும் மீண்டும் கிளப்புவதில் இருந்தே, அவர்கள் கூட்டணியை விட்டு வெளியேற விரும்புகிறார்கள் என்று அர்த்தம். அது அம்மாவா? அட்டைக் கத்தி வீரரா?

நாங்கள் யாருக்கும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்த மாட்டோம். கூட்டணியில் இருந்தாலும் இல்லையென்றாலும் நாடாளுமன்றத்தில் போட்டியிடுவோம். முதல்வருக்கு நெருக்கடி தர வேண்டும் என்பதல்ல எங்களது நோக்கம். தமிழ் ஈழம் என்ற சொல் திராவிட இயக்க மாநாடுகளில் இருந்து கேட்ட வார்த்தைதான். பூச்சாண்டிகளுக்கும் சிறைச்சாலைகளுக்கும் அஞ்ச மாட்டோம்," என்றார் திருமாவளவன்.

பாமக தலைவர் ஜி.கே.மணி, கவிஞர் காசி. ஆனந்தன், சுப. வீரபாண்டியன், நடிகர் மன்சூர்அலிகான், கவிஞர் அறிவுமதி உள்ளிட்டோர் மாநாட்டில் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக