அய்.நா தீர்மானத்தில் திருத்தம் கோரி நாடாளுமன்ற வளாகத்தில் தொல்.திருமாவளவன் ஆர்ப்பாட்டம்


அய்.நா மனித உரிமைகள் பேரவையில் முன்மொழியப்பட்டுள்ள சிங்கள அரசுக்கு எதிரான தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்கும் என 19.03.2012 அன்று மக்களவையில் இந்திய தலைமை அமைச்சர் மன்மோகன்சிங் அவர்கள் அறிவித்தார். எனினும் அத்தீர்மானத்தில் போர்குற்றம் மற்றும் இனப்படுகொலை தொடர்பாக விசாரணை நடத்துவதற்குரிய வாய்ப்பில்லாத வகையில் வலுவற்றதாக அமைந்திருப்பதால் அதில் திருத்தம் கொண்டுவந்து போர்குற்றம் மற்றும் இனப்படுகொலை மீதான விசாரணைக்கு வழிவகுக்க இந்திய அரசு ஆவன செய்திட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் 22.03.2012 அன்று காலை நாடாளுமன்ற வளாகத்திற்குள் ஒரு மணி நேரம் ஆர்பாட்டம் செய்தார்.
நாடாளுமன்றத்தின் முதன்மை வாயிலின் எதிரே அமைந்துள்ள காந்தி சிலையின் முன்பு காலை 10 மணி முதல் 11 மணி வரையில் அவர் இந்த ஆர்பாட்டத்தில் ஈடுபட்டார். வேறு சில கோரிக்கைகளுக்காக திரினாமுல் காங்கிரசார் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியினர் அப்பகுதியில் தனித்தனியே திரளாக நின்று ஆர்பாட்டம் செய்தனர். அப்போது தொல்.திருமாவளவன் மட்டும் தனியே ஆங்கிலம் மற்றும் தமிழில் முழக்கங்களை எழுப்பியவாறு அப்போராட்டத்தை நடத்தினார். அதாவது "save tamils, save justice" , "save human rights, save tamil lands" என்று ஆங்கிலத்திலும் " இந்திய அரசே, இந்திய அரசே ! ஈழத்தமிழர்களை காப்பாற்று! மனித உரிமைகளை காப்பாற்று! திருத்தம் செய்! திருத்தும் செய்! அய்.நா மன்ற தீர்மானத்தில் போற்குற்றத்தை விசாரிக்க, இனப்படுகொலையை விசாரிக்க திருத்தம் செய்! திருத்தம் செய்!" என்று தமிழிலும் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினார். அத்துடன் "implement a permanent political settlement for eelam tamils, pressurize U N sponsored independent investigation", "amend the resolution to investigate war crimes and genocide" ஆகிய கோரிக்கைகளை கொண்ட முழக்க அட்டைகளை கையில் ஏந்தியவாறும் அம்முழக்கங்களை உரத்து முழங்கியவாறும் அறப்போராட்டத்தில் தொல்.திருமாவளவன் ஈடுப்பட்டார். அப்போது தமிழகத்தைச் சார்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பி.லிங்கம் அவர்களும், திரு.காந்திசெல்வன் அவர்களும் அவ்விடத்திற்கு வந்து தொல்.திருமாவளவன் அவர்களை வாழ்த்திவிட்டு சென்றனர்.சரியாக 11 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்துகொண்டு மக்களவைக்கு சென்றார்.
இந்திய அரசு இத்தீர்மானத்தை ஆதரிப்பதாக உறுதியளித்த பிறகு தொல்.திருமாவளவன் அவர்களின் இப்போராட்டம் தேவையற்றது என்பது சிலரின் கருத்தாக இருந்தாலும் அத்தீர்மானத்தை வலுவாக்கும் வகையில் திருத்தம் கொண்டுவருவது இந்திய அரசின் கடமை என்று சுட்டிக்காட்டுவதற்காகவே இப்போராட்டத்தை தாம் மேற்கொண்டிருப்பதாக செய்தியாளர் சந்திப்பில் தொல்.திருமாவளவன் குறிப்பிட்டார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக