என்னை கைது செய்தாலும் உண்ணாநிலை போராட்டத்தினை கைவிட மாட்டேன்: திருமாவளவன்



தமிழ்நாடு காவல்துறை என்னை கைது செய்தாலும் உண்ணாநிலை போராட்டத்தினை கைவிட மாட்டேன் என்று இன்று இரண்டாவது நாளாக உண்ணாநிலை போராட்டத்தினை தொடர்ந்து மேற்கொண்டு வரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சாகும் வரை உண்ணாநிலை போராட்டத்தினை இன்று வெள்ளிக்கிழமை இரண்டாவது நாளாக மேற்கொண்டு வரும் திருமாவளவன் தண்ணீரை மட்டுமே அருந்துகின்றார். இதனால் அவர் மிகவும் சோர்வுடன் காணப்பட்டார்.

திருமாவளவனின் உடல்நிலையை இன்று பரிசோதித்த மருத்துவர்கள் குழு இன்சுலின் அளவு சற்று குறைந்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இரவு மேடையிலேயே உறங்கினார். அவரது கட்சியின் தொண்டர்கள் விடிய, விடிய விழித்து இருந்தனர்.



தொண்டர்களிடம் அவர், "நீங்கள் யாரும் உண்ணாநிலை இருக்க வேண்டாம். நான் மட்டும் இருக்கிறேன்." என்று கேட்டுக்கொண்டார்.

"இந்த போராட்டம் தி.மு.க.வுக்கு எதிராகவோ, தமிழக அரசுக்கு எதிராகவோ கிடையாது. இந்த கோரிக்கைகளை நிறைவேற்றும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை. மத்திய அரசுக்குத்தான் இருக்கிறது.

பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது. சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதல்வர் தலைமையில் அனைத்து கட்சி தலைவர்களும் டெல்லி சென்று பிரதமரிடம் வலியுறுத்தினோம். ஆனாலும் போர் நிறுத்தம் செய்ய எந்த நடவடிக்கையும் மத்திய அரசு எடுக்கவில்லை. வெளியுறவுத்துறை செயலாளர் சிவ்சங்கர் மேனன் போர் நிறுத்தம் பற்றி பேசமாட்டார். சார்க் மாநாடு பற்றி பேசவே சிறிலங்கா வருகிறார் என்று அந்நாட்டின் அமைச்சர் சொல்கிறார். இதனை மத்திய அரசாங்கமும் மறுக்கவில்லை.

இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்பதே நமது நோக்கம். அதனால் என்னை கைது செய்ய நடவடிக்கை எடுத்தாலும் உண்ணாநிலைப் போராட்டத்தினை கைவிட மாட்டேன். அப்படி ஒரு வாய்ப்பு ஏற்பட்டாலோ, வேறு நெருக்கடி உண்டானாலோ தொண்டர்கள் அமைதியுடன் கட்டுப்பாடு காக்க வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு கட்டுப்பாட்டை இழந்து விடக்கூடாது என்றும் கூறினார்.



பின்னர் ஊடகவியலாளர்களிடம் திருமாவளவன் பேசியதாவது:

நாளை தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், இலங்கை போர் நிறுத்தத்தை வற்புறுத்தி விடுதலை சிறுத்தைகள் சார்பில் போராட்டம் நடத்தப்படும். மகளிர் விடுதலை சிறுத்தைகளும் இதில் ஒருங்கிணைந்து பங்கேற்க வேண்டும்.

காவல்துறையினர் ஒருவேளை என்னை கைது செய்தாலும், இலங்கை போர் நிறுத்தத்தை கைவிட கோரி போராட்டம் நடத்த வேண்டும் என்றும் கூறி இருக்கிறேன்.

நேற்று என்னை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி சந்தித்தார். அப்போது உண்ணாநிலைப் போராட்டத்தினை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராதாஸ் இன்று தொலைபேசி என்னிடம் பேசினார்.

அப்போது, "இலங்கையில் போர் நிறுத்தத்துக்கு வேறு முறையில் முயற்சி செய்வோம். எனவே சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டம் என்பதை கைவிட வேண்டும்'' என்று கூறினார். இது குறித்து எங்கள் அமைப்புடன் கலந்து பேசி முடிவு செய்வேன் என்றார் அவர்.

திரையுலகத்தைச் சேர்ந்த விஜய டி.இராஜேந்தர், இயக்குநர்களான பாரதிராஜா, செல்வமணி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களான ஆறுமுகம், மூர்த்தி உள்பட பலர் வாழ்த்தி பேசினர்.

உண்ணாநிலைப் போராட்ட மேடையில் நடிகர் மன்சூர் அலிகான், நிர்வாகிகள் கலைக் கோட்டுதயம், சிந்தனை செல்வன், திருமாறன், வன்னியரசு, பாவரசு, பாவலன், ஆர்வலன், உஞ்சை அரசன், சேகுவேரா, பார்வேந்தன் உள்பட பலர் அமர்ந்திருந்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக