கிளிநொச்சி போர் எல்லை இல்லை

கிளிநொச்சியை விடுதலைப் புலிகள் இழந்துவிட்டதால் போர் முடிந்து விட்டதாக கருத முடியாது என்று விடுதலை சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன் கூறியுள்ளார்.

இலங்கை பிரச்சனையில் மத்திய அரசு தமிழர்களுக்கு துரோகம் இழைத்து விட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

தமிழீழத்தின் தலைநகராக இயங்கிய கிளிநொச்சியை சிங்களப்படை கைப்பற்றிவிட்டதென ராஜபக்சேவும், தமிழின துரோகக்கும்பலும் கும்மாளம் அடிக்கின்றனர்.

ஆறெழு நாடுகளின் படைத் துணையோடு ஆறெழு மாதங்களாக பெரும்பாடுபட்டு தற்போது புலிகள் பின்வாங்கிய நிலையில், ஆயிரக்கணக்கான சிங்கள வீரர்களை பலிக்கொடுத்தும் அப்பாவித் தமிழர்களை கொன்றுக்குவித்து கிளிநொச்சியை கைப்பற்றியுள்ளோம் என்று கொக்கரிக்கின்றனர். இந்த நிகழ்வால் புலிகள் வீழ்ந்துவிட்டதாகவும், போர் ஓய்ந்துவிட்டதாகவும் கருதிவிட முடியாது.

சிங்கள படையினரை விரட்டியடித்து பலப்பகுதிகளை கைப்பற்றுவதும், பின்னர் கைவிடுவதும் புலிகளின் வரலாற்றில் அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளே ஆகும். ஆகவே, பின்வாங்கல் என்பது பின்னடைவு ஆகாது. சிங்கள இனவெறியர்களின் இந்த கும்மாளத்திற்கும், கொண்டாட்டத்திற்கும் தமிழ் இனத்திற்கு எதிராக இந்திய அரசின் பச்சை துரோகமே முதன்மையானதாகும்.

விடுதலைப்புலிகளோடு தனியாக மோத வக்கில்லாத சிங்கள அரசு இந்திய அரசு உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் துணையோடு ஒற்றையாய் எதிர்த்து நிற்கும் விடுதலைப்புலிகளை பின்வாங்கச் செய்திருப்பது பெரிய வெற்றியாகாது: வெட்கக்கேடாகும்.

தாம் எதிர்பார்த்தது நடந்துவிட்டதெனவும், தமது கனவு பலித்துவிட்டதெனவும் இந்திய அரசும் மகிழ்ச்சியடையலாம். பத்து கோடி தமிழர்களின் உணர்வுகளை அவமதித்து விட்டு சிங்களர்களுக்கு முட்டுக்கொடுக்கும் இந்திய அரசின் துரோகப்போக்கை எந்தக்காலத்திலும் தமிழ்ச் சமூகத்தால் மன்னிக்க முடியாது.

தமிழ் இனத்தின் முதுபெரும் தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதி அவர்களின் தலைமையில் தமிழக அனைத்துக் கட்சித் தலைவர்கள் இந்திய தலைமை அமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து ஈழத்தில் நடக்கும் இனப்படுகொலையை தடுத்து நிறுத்த முறையிட்டு ஒருமாத காலம் உருண்டோடிவிட்டது.

வெளி விவகாரத்துறை அமைச்சர் விரைவில் கொழும்பு சென்று அதற்கான முயற்சிகளை மேற்கொள்வார் என உறுதியளித்தும் கூட இது வரையில் அதற்கான முனைப்பு ஏதுமில்லை என்பதில் இருந்து இந்திய அரசின் உள்நோக்கம் என்னவென்பது வெளிபட்டிருக்கிறது.

இந்திய ஆட்சியாளர்களின் இத்தகைய தமிழன துரோகத்தை ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் உணர்ந்துகொள்ள வேண்டும் என்பதை இந்தச் சூழலில் விடுதலைச் சிறுத்தைகள் சுட்டிக்காட்டுகிறது.

கடைசித் தமிழன் என்கிற கடைசி புலி உள்ளவரையில் அங்கே விடுதலைப்போர் தொடரும் என்பதில் அய்யமில்லை இனப்பகையும், துரோகமும் வீழ்த்தப்பட்டு ஈழம் வென்றெடுக்கப்படும் என்கிற நம்பிக்கை இனமான உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனுக்கும் உள்ளது.

"மரபு வழி போர்' முறையிலிருந்து "கெரில்லா போர்' முறைக்கு புலிகள் மாறும் நிலை ஏற்படுமேத்தவிர கிளிநொச்சியே போரின் எல்லையாக மாறிவிடாது என்பதை சிங்கள அரசை தாங்கிப்பிடிக்கும் இந்திய அரசுக்கு காலம் விரைவில் உணர்த்தும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக