சு.சுவாமியை குண்டர் சட்டத்தில் கைது செய்யனும்-திருமா


குண்டர்களுடன் நீதிமன்ற வளாகத்துக்குள் வந்த சுப்பிரமணிய சாமியை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் அவரை கைது செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கோரினார்.

நிருபர்களிடம் அவர் கூறுகையில்,

இலங்கை தமிழர்களை பாதுகாக்கக் கோரி வரும் 4, 5ம் தேதிகளில் தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறோம். 'நாம் தமிழர் நடைபயணம்' என்ற பெயரில் நடத்தப்படும் இந்த நடை பயணம் ஒன்றியம், நகரம், குக்கிராமங்கள் தோறும் நடைபெறும்.

இந்த நடை பயணத்தில் ஒவ்வொரு குழுவிலும் சுமார் 500 முதல் 1000 பேர் வரை பங்கேற்பார்கள். ஒவ்வொரு குழுவும் அந்த 2 நாட்களிலும் சுமார் 50 கி.மீ. தூரம் நடப்பார்கள். இந்த நடைபயணம் மூலம் 2 கோடி மக்களை சந்திக்க வேண்டும் என்பதுதான் நோக்கம்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் திட்டமிட்ட தாக்குதலாகும். சுப்பிரமணிய சாமி மீது நடந்த முட்டை வீச்சு தாக்குதலுக்காக காவல்துறை அத்துமீறி நடந்து கொண்டது கண்டித்தக்கது.

ஆனால் குண்டர்களுடன் நீதிமன்ற வளாகத்துக்குள் வந்த சுப்பிரமணிய சாமி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் அவரை கைது செய்ய வேண்டும்.

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு விரைவில் முதல்வராக வேண்டும் என்ற பேராசை. திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று வழக்கு தொடர்ந்திருப்பதின் மூலம் இது அம்பலமாகியுள்ளது. ஒரு அரசு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டால் அந்த அரசை ஆள விடவேண்டும். அதுதான் எதிர்க்கட்சி தலைவருக்கு அழகு என்றார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக