ஈழத் தமிழர் படுகொலையை கண்டித்து தீக்குளித்த சிறீதரின் இறுதி நிகழ்வு: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு






இலங்கை இனப்படுகொலையைக் கண்டித்து தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகி சிறீதர் என்கிற எழில்வளவனின் உடலத்துக்குப் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் மலர் வளையம் வைத்து வணக்கம் செலுத்தினர்.

சென்னைப் புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் சிறீதர் என்கிற எழில்வளவன்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் 99 ஆவது வட்ட அமைப்பாளராகப் பொறுப்பில் இருந்த சிறீதர் என்கின்ற எழில்வளவன், இலங்கை இனப்படுகொலையைக் கண்டித்து கடந்த 4 ஆம் நாள் தன் உடலம் மீது மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைத்துக்கொண்டார். அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், எந்தப் பயனும் இன்றி அவர் உயிரிழந்தார்.

இவருக்கு லக்ஸ்மி என்ற மனைவியும், ஈழச்செல்வன், தமிழ்ச்செல்வன் என்ற இரு குழந்தைகளும் உள்ளனர். இவரது உடலம் புளியந்தோப்பில் உள்ள அவரது வீட்டில் வணக்கத்துக்காக வைக்கப்பட்டிருந்தது.

அவரது உடலத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் கோ..மணி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வைகோ, உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து வணக்கம் செலுத்தினர். அவர் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினர்.

பின்னர், இன்று வெள்ளிக்கிழமை எழில்வளவனின் உடலம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ஓட்டேரி மயானத்தில் எரியூட்டப்பட்டது. இறுதி நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்

1 கருத்துகள்:

சென்னைப் புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் சிறீதர் என்கிற எழில்வளவனுக்கு கண்ணீர் அஞ்சலி!

மேலும் இதுபோன்ற இழப்புகளை ஏற்க முடியாத தமிழனின் வேண்டுகோள், தீக்குளிப்பை ஏற்காதீர்கள் உங்களின் வீரம் இன்னும் இந்த மண்ணுக்கு தேவை..

7 மார்ச், 2009 அன்று 5:15 AM comment-delete

கருத்துரையிடுக