மே தின வாழ்த்துக்கள்!

ழைக்கும் வர்க்கத்தைப் போற்றும் நாள் 'மே' நாள் ஆகும். மானுடம் இயங்குவதற்கு மூலாதார ஆற்றலாக விளங்கும் பாட்டாளி வர்கத்தின் மேன்மையை போற்றும் நாளாக இந்த 1 மே நாள் உலகெங்கிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. அத்தகைய உழைக்கும் வர்க்கத்தின் வாழ்நிலையை மேம்படுத்துவதே அவ்வர்க்கத்திற்கு செலுத்தும் உண்மையான நன்றிக் கடனாகும்.

ஆலைத் தொழிலாளர்கள் மற்றும் அமைப்புச்சாரா தொழிலாளர்கள், உழவுத் தொழில் செய்யும் உழைக்கும் வர்க்கத்தினர் என ஒட்டு மொத்த தொழிலாளர் வர்க்கமும் இன்னும் கொடுமையான சுரண்டலுக்கும் ஒடுக்கு முறைகளுக்கும் ஆளாகி வருவதை எவரும் மறந்துவிட இயலாது. இந்நிலையில், இத்தகைய உழைக்கும் வர்க்கம் தம்முடைய விடுதலைக்காக அவ்வப்போது ஆர்த்தெழுந்து போராடுவது தவிர்க்க முடியாத இயல்நிலை போக்காகும்; அத்தகைய விடுதலைப்போராட்டங்கள் வெவ்வேறு வடிவங்களில் சூழ்நிலைகளுக்குகேற்ப வெடித்து எழுகின்றன.

ஈழவிடுதலைப்போராட்டமும் ஒரு தேசிய இன பாட்டளிவர்க்க விடுதலைப்போராட்டமே ஆகும். இவ்வாறான விடுதலைப்போராட்டங்கள் பேராதிக்க சக்திகளால் நசுக்கப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. எனினும் அதனை முற்றிலுமாக அழித்தொழித்துவிட இயலாது. அந்த வகையில் ஈழத்தமிழ் மக்கள் அரைநூற்றாண்டு காலமாக நடத்தி வரும் பாட்டாளி வர்க்க இனவிடுதலைப்போர் தற்பொது சர்வதேசிய பேராதிக்க சக்திகளின் கூட்டுச்சதியால் நசுக்கப்படுவதாக தோன்றினாலும் மீண்டும் அது முழு வீரியத்தோடு வெகுண்டெழும்.

இந்த மே நன்நாளில் ஈழவிடுதலைக்காக போராடிவரும் தமிழத் தேசிய பாட்டாளிவர்க்கத்தினருக்கும் உலகெங்கிலும் இத்தகைய அறப்போராட்டங்களில் பங்கேற்றுவரும் அனைத்து உழைக்கும் வர்க்கத்தினருக்கும் எமது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.


இவண்
திருமாவளவன்


-

0 கருத்துகள்:

கருத்துரையிடுக