சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் திருமா சூறாவளி சுற்றுப்பயணம்
தி.மு.க. தலைமையிலான சனநாயக முற்போக்குக் கூட்டணியின் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியின் வேட்பாளர் விடுதலைச்சிறுத்தைகள்; கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் நேற்று (28-04-2009) அரியலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருமானுர் ஒன்றியத்தில் கீழப்பழூர், திடீர்குப்பம், பெரியார் நினைவு சமத்துவபுரம், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாக்குகள் கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவருடன் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் பாளை. அமர மூர்த்தி, விடுதலைச்சிறுத்தைகள் அரியலூர் மாவட்டச்செயலாளர் கென்னடி ஆகியோர் இருந்தனர்.
தொல். திருமாவளவன் பேசுகையில் “ஈழத்தமிழர்களுக்காக உண்மையாக போராடும் அணிதான் எங்கள் அணி என்று சொல்லி மருத்துவர் ராமதாஸ் என்னை அ.தி.மு.க. அணிக்கு அழைத்த போது ஈழத்தமிழர்களுக்கு முற்றிலும் எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவர்தான் ஜெயலலிதா. எனவே ஒரு போதும் அ.தி.மு.க. அணி ஈழத்தமிழர்களுக்கு ஆதரவானது என்பதை ஒத்துக் கொள்ளவே முடியாது. எனவே நான் அ.தி.மு.க. அணிக்கு வரமாட்டேன்” என்று சொன்னேன். “காங்கிரஸ் மத்திய ஆட்சியில் இருக்கிறது, தி.மு.க. மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்கிறது, விடுதலைச்சிறுத்தைகள் தி.மு.க. அணியில் இருக்கிறது என்பதனால் நாங்கள் நடத்தும் போராட்டங்கள் சரியில்லை என்று சொல்லுகிற அ.தி.மு.க. கடந்த 22 ஆண்டுகளாக ஈழத்தமிழர்களுக்காக ஏதாவது ஒரு போராட்டத்தையாவது நடத்தியதுண்டா? நெடுமாறன், வைகோ, ஆகியயோர் ஈழத்தை ஆதரித்து பேசியதற்காக பொடா சட்டத்தின் கீழ் 19 மாதங்களுக்கு மேலாக சிறையில் அடைத்தவர் தான் ஜெயலலிதா. அவரை ஈழத்தமிழர்கள் பாதுகாப்பில் அக்கரை உள்ளவர் என்று சொல்லுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? இதிலிருந்து வைகோ, ராமதாஸ், நெடுமாறன் போன்றவர்களுக்கு ஈழத்தமிழர் நலனில் உள்ள அக்கரையை விட இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வை தோல்வி அடையச் செய்ய வேண்டும் என்பதுதான் முக்கியமாக உள்ளது. எனவே நாடாளுமன்றத்திற்கு யார் சென்றால் மக்களுடைய பிரச்சனையைத் தீர்க்க உண்மையாக குரல் கொடுப்பார்கள் என்பதை வாக்காளர்கள் உணர்ந்து கொண்டு என்னை வெற்றிபெற செய்ய வேண்டும். 1999-ஆம் ஆண்டு அரசியல் அரங்கத்தில் விடுதலைச்சிறுத்தைகளை அரவணைத்த மக்கள் தலைவர் மூப்பனார் அவர்கள் கண்ட கனவை நனைவாக்கும் வகையிலும் இப்போது தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் கனவை நனைவாக்கும் வகையிலும் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என குறிப்பிட்டார்.
மாலையில் அரியலூரில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் திராவிடஇயக்க தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சு.ப. வீரபாண்டியன் பேசிய போது “திருமாவளவன் நாடறிந்த வேட்பாளர் மட்டுமல்ல, உலகமே அறிந்த வேட்பாளர். உலகமெங்கும் வாழும் ஒட்டுமொத்த தமிழர்களின் உரிமைகளுக்காக குரல்கொடுக்கும் வேட்பாளர். இந்த குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் அதற்கு வாக்காளர்கள் அனைவரும் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
பொதுக்கூட்டத்தில் திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொருளாளர் அன்புத்தென்னரசு, கோவேந்தன், கௌதமசித்தன், இளஞ்சேகுவேரா, பாவரசு உள்ளிட்ட ஏராளமான விடுதலைச்சிறுத்தைகள் மற்றும் கூட்டணிக்கட்சியினர் கலந்து கொண்டனர்.
இன்று (29.04.2009) சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி – குன்னம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள ஆலத்தூர் மற்றும் வேப்பூர் ஒன்றியங்களில் தொல். திருமாவளவன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.
மாலையில் லால்போட்டையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில், தேசிய லீக் கட்சியின் மாநிலத் தலைவர் பசீர்அகமது, பேராசிரியர் அப்துல்காதர் ஆகியோர் கலந்து கொண்டு தொல். திருமாவளவனுக்கு வாக்குகள் கேட்டு பேசுகின்றனர் இக்கூட்டத்தில் சிதம்பரம் தொகுதியின் சனநாயக முற்போக்குக் கூட்டணியின் வேட்பளர் தொல்.திருமாவளவனும் கலந்து கொண்டு வாக்குகள் கேட்டு சிறப்புரையாற்றுகிறார்.
இவண்,
ஆர்வலன்
மாநிலச் செய்திதொடர்பாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
1 கருத்துகள்:
திருமா அண்ணை நான் உங்கள் மீது ரொம்ப மரியாதை வைத்திருக்கிறேன் தயவுசெய்து காங்கிரஸ் காரர்களுக்கு பிரச்சாரம் செய்யாதீர்கள்.
கருத்துரையிடுக