இனப் படுகொலையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கண்டன ஆர்ப்பாட்டம்
இலங்கையில் நடந்து வரும் இனப் படுகொலையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை மெமோரியல் ஹால் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழர் நீதிகட்சி தலைவர் சுப.தமிழரசன், கவிஞர் அறிவுமதி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பேசுகையில், இலங்கையில் விடுதலைப்புலிகள் மீதும் அப்பாவி தமிழர்கள் மீதும் சிங்கள படை கொடூரத் தாக்குதல் நடத்தி வருகிறது. புலிகள் சரணடையாவிட்டால் ஒட்டுமொத்தமாக தமிழ் இனத்தை அழிப்பேன் என அந்நாட்டு அதிபர் ராஜபக்சே கொக்கரித்துள்ளார். இதுபோன்று பேசுவதற்கு அவன் யாருக்கும் அஞ்சவில்லை.
இலங்கையில் முல்லைத்தீவில் உள்ள பாதுகாப்பு வளையத்திற்கு உட்பட்ட பகுதியில் 24 கி.மீ சதுர அடி சுற்றளவில் பதுங்கி உள்ள அப்பாவி தமிழர்களை சிங்கள அரசு விஷவாயு குண்டுகளை வீசி அழித்து வருகிறது. சமீபத்தில் கூட 450 தமிழர்கள் மொத்தமாக பலியாகியுள்ளனர்.
இது போன்ற கொடூரம் 2ஆம் உலகப்போரின் போது கூட நடந்திராத கொடூரம். எனவே இந்த பிரச்சனையில் மனித நேய அடிப்படையில் மத்திய அரசு தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி விடுதலை சிறுத்தைகள் வலியுறுத்துகிறது.
ஹீரோசிமா, நாகசாகிப் ஆகிய இடங்களில் விஷவாயு குண்டுகளை வீசி தாக்கிய சம்பவத்தை உலகம் இன்றும் கண்டித்து வருகிறது. அதன் பின்னர்தான் அணு ஆயுத தயாரிப்பு, அணுசக்தி ஒப்பந்தம் போன்றவற்றில் முறையான வரையறைகள் தேவை என விதிமுறைகள் வகுக்கப்பட்டன. ஆனால் அதுபோன்ற ஒரு தாக்குதல் நடத்த ராஜபக்சே தயாராகி வருகிறார்.
சர்வதேச நாடுகள் தடை செய்துள்ள கிளஸ்டர் பாம் (கொத்துக் குண்டுகள்) வீசி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளார். இதுபோன்ற தாக்குதல் நடத்தினால் உடலில் காயம் ஏற்படாது, நச்சு வாயு பரவி உடலில் படர்ந்து தோல் உரிந்து ரத்த வாந்தி எடுத்து சாக நேரிடும். இதுபோன்று சமீபத்தில் நடத்திய தாக்குதலில் விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்த ஏராளமான போராளிகள் கரிக்கட்டையாகி உயிர் இழந்துள்ளனர். ஆனாலும் செத்தாலும் மக்களோடு மக்களாகத்தான் சாவேன், நான் செத்தாலும் ஒருபிடி சாம்பல் கூட எதிரிகளின் கையில் கிடைக்க கூடாது என்று சபதம் செய்து வாழ்ந்து கொண்டிருக்கிறார் பிரபாகரன்.
இலங்கையில் சிங்களப் படையினரின் விஷவாயு குண்டுகள் தாக்குதல் காரணமாக விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுக்கு ஆபத்து ஏற்படலாம் என்று, நேற்று அதிகாலையில் செய்தி கேட்டு கலங்கினேன். பிரபாகரனுக்கு பாதிப்பு என்றால், அதன் பின்னர் திருமாவளவன் வெற்றிப் பெற்றால் என்ன, வெற்றி பெறாவிட்டால் என்ன? தேர்தலில் வெற்றிப்பெற்று டெல்லி சென்றால் என்ன, செல்லாவிட்டால் என்ன? எந்த இனத்தை காப்பதற்காக நாடாளுமன்றம் செல்வதற்காக தேர்தலில் போட்டியிடுகிறோமோ, அந்த இனமே அழிந்துவிட்டால் அதன் பின்னர் டெல்லி சென்று என்ன பயன்?. இதனால், மக்களவை தேர்தலில் போட்டியிடுவதையே தவிர்த்துவிடலாம் என்ற முடிவுக்கு வந்தேன். இதுதொடர்பான நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பையும் ரத்து செய்ய நினைத்தேன்.
ஆனால் "அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம்" என்று ரவிக்குமார் எம்எல்ஏ, கெஞ்சினார். அதன் பின்னரே, எனது முடிவை மாற்றினேன். பின்னர், நேற்று மாலை முதல்வர் கருணாநிதியை சந்தித்து பேசினோம். அப்போதும், 'இலங்கைத் தமிழரின் கடைசி நம்பிக்கை நீங்கள் தான்' என்று முதல்வரிடம் சொன்னேன். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் ஓர் மாவீரன் என்று முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியே பாராட்டியுள்ளார். அப்படிப்பட்ட இலங்கை தமிழருக்காகத்தான் விடுதலைச் சிறுத்தைகள் தொடர்ந்து போராடி வருகிறது.
ஆனால், தா.பாண்டியன் போன்றவர்கள், தாசில்தாராக மாறி எனக்கு சாதி சான்றிதழ் தரவேண்டிய அவசியமில்லை. எனக்கு சான்றிதழ் தரும் தகுதி மக்களை தவிர, யாருக்கும் கிடையாது. சர்க்கஸில் நடிப்பவர் அவர் தான்; நான் அல்ல. என்னைப் பற்றி பிரபாகரன் நன்கு அறிவார். தா. பாண்டியன் மீது நாங்கள் மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளோம். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வளர்ச்சி பிடிக்காமல் அல்லது யாரோயோ திருப்திப்படுத்துவதற்காக தா.பாண்டியன் இவ்வாறு பேசியுள்ளார்.
இலங்கை தமிழர் பிரச்சனையை மையமாக வைத்து ஓர் தனி அணி அமைத்து, அதில் சேரும்படி என்னை அழைத்து நான் மறுத்திருந்தால் என் மீது குற்றம் சொல்லுங்கள். ஆனால் இப்போது அந்த அருகதை யாருக்கும் இல்லை.
இலங்கை தமிழர் பாதுக்காப்பு இயக்கத்தில் விடுதலைச் சிறுத்தைகள் சேர்ந்த பின்னர் தான் அந்த இயக்கத்துக்கே ஓர் மரியாதை கிடைத்தது, இல்லையெனில், அது ஓர் அதிமுகவின் பினாமி அமைப்பாகத்தான் இருந்திருக்கும்.
திமுக கூட்டணியில் இருந்தபோதும், இலங்கை தமிழர் பிரச்சனைக்காக, திமுகவுக்கு எதிரான இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் சேர்ந்து செயல்பட்டேன், அதனால், முதல்வர் கருணாநிதிக்கு சங்கடம் நேர்ந்தபோது, நான் கூட்டணியில் இருக்கிறேனா, இல்லையா என்பதே நீங்களே முடிவு செய்யுங்கள் என்று முதல்வரிடம் கூறினேன். என்றாலும், 'விடுதலைச் சிறுத்தைகளுடனான கூட்டணி, தேர்தல் கூட்டணி அல்ல; அது ஓர் கொள்கை கூட்டணி' என்று அவர் அறிவித்த பின்னர் தான் தொடர்ந்து அதிலேயே நீடிப்பது என நாங்கள் முடிவு செய்து பணியாற்றி வருகிறோம். இல்லையெனில், இந்த தேர்தலை தனித்தே சந்தித்திருப்போம்.
எந்த அணியில் இருந்தாலும் இலங்கை தமிழருக்காக உண்மையாகவும், உறுதியாகவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து போராடும். இலங்கை தமிழர்களை பாதுகாக்க, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மனிதாபிமானத்துடனும், தாயுள்ளத்துடனும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
எந்த அணியில் இருந்தாலும் ஈழத் தமிழருக்காக உண்மையாகவும், உறுதியாகவும் விடுதலைச் சிறுத்தைகள் தொடர்ந்து போராடும் என்று அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
****
0 கருத்துகள்:
கருத்துரையிடுக