ஈழத்தமிழர்களை பாதுகாக்க தமிழர்களின் கடைசி நம்பிக்கை காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திதான் என்று கூறியுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், சோனியாகாந்தி நினைத்தால் அடுத்த 24 மணி நேரத்திற்குள் இலங்கை அதிபர் ராஜபக்சேவை டெல்லிக்கு வரவழைத்து, போர் நிறுத்த நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றார்.
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கை ஆகியவற்றை வெளியிட்டு, அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
முல்லைத்தீவில் நச்சு புகைக்குண்டுகளை வீசி அப்பாவித் தமிழர்களை சிங்கள இனவெறி அரசு கொன்று குவித்து வருகிறது. சிங்களப் படையின் 58 மற்றும் 59வது படைப்பிரிவு புலிகளால் அழிக்கப்பட்டுள்ளது. அந்த படை பிரிவில் இந்திய படையினரும் களமிறங்கி மக்களை அழித்தொழிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.
ஈழத்தமிழர்கள் மீது நச்சு புகைக்குண்டுகளை வீசி அழித்தொழிக்கும் கொடுமை, 2வது உலகப்போரில் கூட நடக்காத ஓர் கொடூரம் ஆகும். இதை சர்வதேச சமூகம் வேடிக்கை பார்த்துகொண்டிருப்பதை சகிக்க முடியாது.
இந்த பிரச்சனையை மனிதாபிமான அடிப்படையிலும் தாயுள்ளத்தோடும் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி அணுகவேண்டும். அவர் நினைத்தால் சிங்கள அரசை கட்டுப்படுத்த முடியும். அவரது தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள முறையில் தோழமை உணர்வுடன் அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். ஈழத் தமிழர்களை பாதுகாக்க தமிழர்களின் கடைசி நம்பிக்கை சோனியாகாந்திதான் என வெளிப்படையாக அறிவிக்கிறோம்.
முதல்வர் கருணாநிதியும் போர் நிறுத்தம் செய்வதற்காக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது.
சோனியா காந்தி நினைத்தால் அடுத்த 24 மணி நேரத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை டெல்லிக்கு வரவழைத்து, போர் நிறுத்த பேச்சு வார்த்தைகள் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யமுடியும். எனவே எங்கள் இனத்தை காப்பாற்றுவதற்காக சோனியாவிடம் மடிப்பிச்சை கேட்கிறோம். இவ்வாறு அவர் பேசினார். |
0 கருத்துகள்:
கருத்துரையிடுக