இலங்கை மீது இந்தியா போர் தொடுக்கவேண்டும்!
ஈழத்தமிழர்களை பாதுகாக்க இலங்கை மீது
இந்தியா போர் தொடுக்கவேண்டும்!
தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்
இந்தியா போர் தொடுக்கவேண்டும்!
தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்
ஈழத்தில் போரை நிறுத்தும்படி உலகமெங்கும் புலம்பெயர்ந்த தமிழர்கள் தொடர்ந்து போராடிவரும் நிலையில் அமெரிக்கா இங்கிலாந்து உள்ளிட்ட ஒருசில நாடுகள் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டுமென வெளிப்படையாக அறிவித்ததையும் சிங்கள இனவெறி அரசு பொருட்படுத்தவில்லை. போர் முனையில் சிக்கியுள்ள பொது மக்களையும் புலிகளையும் ஒட்டுமொத்தமாக அழித்தே தீருவது என்னும் வெறித்தனத்தோடு சிங்கள காடையர்கள் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஈழத்தில் உடனடி போர் நிறுத்தம் தேவை என்பதை வலியுறுத்தி திமுக தலைவர் கலைஞர் அவர்கள் நேற்று (23.4.2009) அழைப்பு விடுத்தார். பொது மக்களும் தொழிலாளர்களும், வணிகர்களும், பள்ளி, கல்லூரி மாணவர்களும் தாமாகவே முன்வந்து பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்று தமது சிங்கள எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த அறப்போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றியை காணிக்கையாக்குகிறோம்.
அதேவேளையில், “பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்க மாட்டோம் என்றும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவோம்” என்று அதிமுக பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா வெளிப்படையாக அறிவித்ததோடு அவ்வாறு பிரச்சாரத்திலும் ஈடுபட்டார் என்பது வரலாற்றில் மன்னிக்கமுடியாத இனத்துரோகமாகும். அவருக்கு உறுதுணையாக பாமக. மதிமுக மற்றும் இடதுசாரிகள் செயல்பட்டிருப்பதும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிப்பதாக உள்ளது. இதிலிருந்து அதிமுக அணியினரின் உண்மை முகமும் உள்நோக்கமும் என்னவென்பது அம்பலப்பட்டிருக்கிறது. ஈழத்தமிழ் மக்களை பாதுகாப்பதில் உண்மையான அக்கறை இருந்திருக்குமேயானால், பொது வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தவர் யார் என்று பாராமல் அதிமுக அணியினரும் அதில் பங்கேற்றிருக்கவேண்டும். ஆனால், அவர்களுக்கு ஈழத்தில் போரை நிறுத்தவேண்டும் என்பதைவிட திமுகவையும் அதன் கூட்டணிடக் கட்சியையும் வீழ்த்தவேண்டும் என்பதில்தான் தீவிரமாக உள்ளனர் என்பது வெளிப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால், அங்கே போர் நிறுத்தம்ஏற்பட்டுவிடக்கூடாது என்பதுதான் அதிமுக அணியினரின் உண்மையான நோக்கமாக உள்ளது என்பதை அறியமுடிகிறது. ஏனென்றால், அங்கே போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டால் தேர்தல் ஆதாயம் தேடமுடியாது என்று அதிமுக அணியினர் பதறுவதை உணரமுடிகிறது. ஈழத்தமிழினம் அழிவதையும் புலிகள் கொல்லப்படுவதையும் அரசியலாக்கி திமுக மீது பழிசுமத்தி தேர்தலில் அறுவடை செய்துவிடலாம் என்று செல்வி ஜெயலலிதாவும் அவரது கூட்டணிக் கட்சித் தலைவர்களும் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர். இந்த பொது வேலை நிறுத்தத்தை அவர்கள் புறக்கணித்தலிருந்து இந்த உண்மைகளை உணர்ந்துக்கொள்ள முடிகிறது.
செல்வி ஜெயலலிதா மற்றும் அவரது கூட்டணிக் கட்சித் தலைவர்கள் நேரடியாக இந்திய அரசையோ அல்லது காங்கிரசு கட்சியையோ விமர்சிக்காமல் வெளியுறவுத்துறையில் எந்த வகையிலும் அதிகாரமே இல்லாத ஒரு மாநில அரசை குறிவைத்து விமர்சிப்பதும் பழிசுமத்துவதும் தேர்தல் ஆதாயத்திற்காக மட்டும்தான் என்பது உறுதியாகிறது. ஒரு மாநில அரசு தம்முடைய அதிகாரத்தை பயன்படுத்தி என்ன செய்ய முடியுமோ அந்த அளவில் திமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொள்வதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். ஆனால், வெளியுறவுத்துறையில் முடிவெடுக்கும் அதிகாரத்தில் உள்ள இந்திய அரசு ஈழத்தில் போரை நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்கிறபோது இந்திய அரசுக்கு எதிராக, இந்திய அரசை பணியவைக்கக்கூடிய வகையில் போராட்டங்களை நடத்தவேண்டிய முனைப்பில் ஈடுபடாமல் எந்த அதிகாரமும் இல்லாத ஒரு மாநில அரசை திரும்பத் திரும்ப விமர்சிப்பது அதிமுக அணியினரின் கையாளாகாத தனத்தையும் அரசியல் ஆதாயம் தேடும் தன்நலப்போக்கையுமே வெளிப்படுத்துகிறது. இன்றைய நிலையில் எந்த நொடியிலும் போர் முனையில் சிக்கியுள்ள பல்லாயிரக்கணக்கான தமிழர்களும், தமிழ் மக்களின் பாதுகாவலர்களான விடுதலைப்புலிகளும் அழித்தொழிக்கப்படலாம் என்கிற பேராபத்தான சூழல் நிலவிவருகிறது.
இந்நிலையில், அ.நா. பேரவையின் பாதுகாப்பு அவையானது கடந்த 22ம் நாள் ஈழத்தமிழர்கள் தொடர்பாக விவாதிக்க முயன்றபோது சீனா அரசும் ரஷியா அரசும் தமது ‘வீட்டோ’ அதிகாரத்தை பயன்படுத்தி அம்முயற்சியை முறியடித்துள்ளனர். மாறாக, ஈழத்தமிழர்களையும் புலிகளையும் ஒட்டுமொத்தமாக அழித்தொழிப்பதில் சிங்கள அரசுக்கு துணைநிற்போம் என்பதையும் புலிகள் சரணடையவேண்டும் என்பதையும் அந்நாடுகள் வெளிப்படுத்தியுள்ளன. இங்கே அதிமுகவோடு சேர்ந்துகொண்டு அதிகாரமில்லாத மாநில அரசை விமர்ச்சிக்கும் இடதுசாரிகள் சீனா, ரஷியா அரசுகளின் இத்ததைய தமிழின விரோதப்போக்கை விமர்ச்சிக்காததும், கண்டிக்காததும்ஏன்? அமெரிக்க வெளியுறவுச்செயலளர் ஹிலாரி கிளிண்டன் போர் நிறுத்தம் வேண்டும் என்பதை திரும்பத்திரும்ப வலியுறுத்திவருகிறார். ஆனால், சீனா, ரஷியா அரசுகள் போர் நிறுத்தத்தை வலியுறுத்தக்கூடாது என்று இரண்டாவது முறையாக அய்.நா. பாதுகாப்பு அவையில் வலியுறுத்தியுள்ளனர். சர்வதேச அளவில் புலிகளுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் எதிரான நடவடிக்கைகளில் இவ்விரு நாடுகளும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. இவர்களை கண்டிக்க வக்கில்லாத இடது சாரிகள் வெறும் அரசியல் ஆதாயத்திற்காக திமுக அரசை விமர்சித்து நாடகம் ஆடுவதை உலகத் தமிழர்கள் உணர்ந்துக்கொள்ளவேண்டும. தேர்தல் நடைபெறும் இந்தச் சூழலில் முல்லைத்தீவில் நடைபெறும் மனித பேரவலத்தை தடுத்துநிறுத்த இந்திய அரசு உடண்மையாகவும், முழுமையாகவும் முயற்சிகளை மேற்கொள்ளாவிட்டால் கடுமையான எதிர்விளைவுகளை காங்கிரசு கட்சி சந்திக்க நேரிடும் என்பதை விடுதலைச்சிறுத்தைகள் தோழமையாகவும் எச்சரிக்கையாகவும் சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறது. மக்களை அழிக்கக்கூடாது என்பது மட்டுமல்லாமல் மக்களின் பிரதிநிதித்துவ சக்தியாகவும் பாதுகாப்பு அரணாகவும் விளங்குகின்ற விடுதலைப்புலிகளையும் கொல்லக்கூடாது என்பதுதான் போர் நிறுத்தக்கோரிக்கையின் உண்மையான நோக்கமாகும்.
தமிழ் மக்களின் பிரதிநிதிகளை அழித்துவிட்டபிறகே சிங்கள இனவெறி அரசு வேறு யாரோடு பேச்சுவார்த்தை நடத்தமுடியும்? ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் ஆயுட்கால அடிமைகளாக்கி தொடர்ந்து நசுக்கப்போகிறது. போர் முனையிலிருந்து மீட்கப்படுவதாக சொல்லப்படும் பொது மக்களை முழுமையாக நிர்வாணப்படுத்தி கொடுமைச்செய்யும் சிங்கள காடையர்களால் அவர்களின் மறுவாழ்விற்கு என்ன உத்தரவாதம் தரமுடியும்? இந்நிலையில், பொதுமக்களை அழிக்கவேண்டாம், புலிகளை அழியுங்கள் என்ற குரல் எங்கிருந்து வந்தாலும் ஏற்புடையதல்ல. எனவே, இந்திய அரசு ஈழச்சிக்கலுக்கு நிலையான அரசியல் தீர்வுக்காண வேண்டும் என்பதில் உண்மையான அக்கறை கொண்டிருக்குமோனால், எமது வேண்டுகோளை சிங்கள ஆட்சியாளர்கள் புறக்கணித்தது உண்மையானால் சிங்கள அரசுக்கு எதிராக உடனடியாக படையெடுப்பு நடத்தியாவது அங்கே போர் நிறுத்தம் செய்யவேண்டும்.
ஈழத்தமிழர்களை பாதுகாக்கமட்டுமல்ல, ஈழச்சிக்கலை தீர்ப்பதற்காக மட்டுமல்ல சிங்களவனோடு கைகோர்த்துக்கொண்டு இந்தியாவுக்கு கடும் அச்சுறுத்தலை செய்து வருகின்ற சீனா, ரஷியா அரசுகளின் சதி நடவடிக்கைகளிலிருந்து இந்தியாவை பாதுகாக்கவேண்டும் என்பதற்காகவும் இந்த படையெடுப்பை நடத்தவேண்டியது இன்றியமையாத தேவையாக உள்ளது. எனவே, காங்கிரசு தலைமையிலான இந்திய அரசு தேர்தல் பாதிப்பை கருதியும் இந்திய பாதுகாப்பை கருதியும் சிங்கள இனவெறியாட்டத்தை உடனடியாக தடுத்து நிறுத்தவேண்டும் என்று விடுதலைச்சிறுத்தைகள் வற்புறுத்துகிறது.
இவண்
தொல். திருமாவளவன்
2 கருத்துகள்:
sathiyamana vaarththaikal. coi mmunist and maanila katshikalai kandippom
இப்போதே இலங்கையில் இந்தியப்படை தான் இருக்கின்றது என்று கூறப்படுகின்றது.
இலக்கு தான் வேறு!
கருத்துரையிடுக