ஈழத்திலிருந்து வருகிற செய்திகள் என் நெஞ்சை சுக்குநூறாக்கிக் கொண்டிருக்கின்றன


.தி.மு.க. கூட்டணியில் ஈழத்துக்கு ஆதரவாக முழங்கிய வைகோ, தா.பாண்டியன் உள்ளிட்ட தலைவர்கள் மண்ணைக் கவ்விய நிலையில், தி.மு.க. அணியில் நின்ற புலிகளின் ஆதரவாளர் தொல்.திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் வென்று முதல்முறையாக நாடாளுமன்றம் செல்கிறார். 'மத்திய அரசின் உதவியோடு ஈழத் தமிழர்களுக்கான விடியலை உண்டாக்க முனைவேன்' என வெற்றிக் களிப்போடு திருமாவளவன் சபதமேற்ற அதேவேளையில்... விடுதலைப்புலிகளின் தலைவரான பிரபாகரனும், முக்கியப் போராளிகளும் மடிந்து விட்டதாக ஈழத்திலிருந்து துயரச் செய்திகள் வெளிவந்துகொண்டிருக்க... இந்த நிலையில் திருமாவளவனோடு நாம் பேசினோம்.

''ஈழத்திலிருந்து வருகிற செய்திகள் என் நெஞ்சை சுக்குநூறாக்கிக் கொண்டிருக்கின்றன. புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளரான நடேசனும், பெருமைமிக்க புலித்தேவனும் சகல திறமைகளையும் கொண்ட முக்கியத் தளபதிகளும் சிங்கள அரசின் வஞ்சகத்தால் கொல்லப்பட்ட செய்தி கேட்டு நிலைகுலைந்து போயிருக்கிறேன். சமாதானக் கொடி ஏந்தியவர்களை கொன்றழித்த கொடுமையை இந்த உலகமே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. நம் கண் முன்னாலேயே நம் இனத்தை நசுக்கிப் போட்டு விட்டார்களே... தத்தளித்துக் கிடக்கும் நம் தமிழ் சொந்தங்களுக்கு இனி யார் நம்பிக்கையூட்ட முடியும்?'' என கண்ணீர் முட்டச் சொன்னவரை அமைதிப்படுத்தி கேள்விகளை வைத்தோம்.


''நீங்கள் தி.மு.க. கூட்டணி பக்கம் போனதால்தான் ஈழ விவகாரம் இந்தத் தேர்தலில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாமல் பிசுபிசுத்துப் போய்விட்டதாக ஈழ ஆர்வலர்கள் மத்தியில் வருத்தம் நிலவுகிறதே?''


''தந்தை செல்வா காலம் தொட்டே ஈழ விவகாரத்துக்கு பெரிதும் துணை நின்றது தி.மு.க-தான். இது ஈழத்தில் இருக்கும் மக்களுக்கே தெளிவாகத் தெரியும். காங்கிரஸ் தலைமை வகிக்கும் கூட்டணியில் நான் அங்கம் வகித்தது தவறு என்பதுதான் என் மீதான குற்றச்சாட்டு. காங்கிரஸோடு நெருக்கம் பாராட்டும் தி.மு.க-வுடன் சேர வேண்டிய கட்டாயம் உருவானதை நினைத்து, இப்போதும் நான் கவலைப்படுகிறேன். ஈழ ஆர்வலர்களின் வருத்தத்தை நான் முழுமையாக உணர்கிறேன். ஆனால், ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்லிக் கொள்கிறேன்...

அ.தி.மு.க. பெரிதாக வென்றிருந்தால், அதில் சந்தோஷப் படும் முதல் ஆள் ராஜபக்ஷேதான். அ.தி.மு.க. தலைமை ஈழத்துக்கு எதிரானது. பிரபாகரனை ஒழித்துக் கட்டும் வேலையை ஜெயலலிதாவே செய்யத் துடிக்கிறார். அதனால்தான் அவரை ஒதுக்கித் தள்ளிவிட்டு, ஈழத்தின் பேரில் தனி அணி கட்டுவோம் என ராமதாஸ், வைகோ, தா.பாண்டியன் உள்ளிட்ட எல்லோரிடமும் கெஞ் சினேன். 'அத்தனை தொகுதிகளிலும் தோற்றாலும் பரவாயில்லை... ஈழத்துக்காக தனி அணி அமைத்து நாம் ஆதரவு காட்டியதை வரலாறு பதிவு செய்யட்டும்' என மன்றாடினேன். ஆனால், என் உணர்வுமிக்க குரல் எவரிடத்திலும் எடுபடவில்லை. காங்கிரஸ் கூட்டணியில் நான் அங்கம் வகிக்க வேண்டிய கட்டாயம் உருவாக்கப்பட்டு விட்டது என்பதுதான்உண்மை!''


''நீங்கள் வெற்றி பெற்றிருக்கும் வேளையில், புலிகள் பெரிதாகத் தோற்றுப் போயிருக்கிறார்கள். இப்போது உங்களின் மனநிலை எப்படி இருக்கிறது?''

''வெற்றி பெற்ற மகிழ்விலோ, முதன்முறையாக நாடாளுமன்றத்துக்குள் அடிஎடுத்து வைக்கும் நெகிழ் விலோ நான் இல்லை. நான் பெற்ற வெற்றிக்கு அர்த்த மில்லாமல் போய் விட்டது. நாடாளுமன்றத்தில் நான் நுழைய ஆசைப்பட்டதே ஈழத்தின் விடிவுக்கான வாதங்களை எடுத்து வைக்கத்தான். ஆனால், அதற்குள் சிங்கள வெறிபிடித்தவர்கள் வென்று விட்டார்கள். இந்தியா உள்ளிட்ட நாடுகளின் துணையோடு தமிழினம் ஈழத்தில் நசுக்கப்பட்டு விட்டது. புலிகளை பயங்கரவாதிகளாகப் பார்க்கும் பாரதப் பெரியவர்களுக்கு, புலிகளின் போராட்ட நியாயத்தைப் புரிய வைக்க வேண்டும் என்பதுதான் என் மனதில் நான் கட்டி வைத்திருந்த வைராக்கியம். ஆனால் அதற்குள் ஈழத்தையே பொசுக்கிப் போட்டு விட்டது ராஜபக்ஷே அரசு.

புலிகளின் முக்கியத் தளபதிகளையும் போராளிகளையும் உலக நாடுகளின் ஆயுத உதவியைப் பயன்படுத்தி அழித்து விட்ட சிங்கள ராணுவம், தலைவர் பிரபாகரனைப் பற்றியும் தவறான செய்திகளைப் பரப்பி வருகிறது. இன அழிப்புக்கு ஊதுகுழலாக இருக்கும் சில ஊடகங்கள் இந்த தவறான பரப்புரையை தீவிரமாக்கி, தமிழர்களின் நம்பிக்கையை தகர்த்துக் கொண்டிருக்கின்றன. பதிலுக்கு ஏதும் செய்ய முடியாமல் கையறு நிலையில் நாம் கதியற்றுக் கிடக்கிறோம். இந்தக் கணத்தில் சிறுத்தைகள் பெற்ற வெற்றி, புண்ணியமற்றுப் போய் விட்டது என்பதை பகிரங்கமாக ஒப்புக் கொள்கிறேன். இந்த வேதனையான தருணத்தில் களப்பலியான ஈழ சொந்தங்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாய் சென்னையில் வருகிற 28-ந்தேதி அமைதிப்பேரணி நடத்த விருக்கிறோம்.''


''ஈழத்தில் மிச்சமிருக்கும் தமிழ் மக்களைக் காப்பாற்ற முயற்சி எடுப்பீர்களா?''

''புலிகளின் போராட்ட நியாயத்தையும், தமிழீழமக்களின் உணர்வுகளையும் உலக நாடுகள் உணரத் தவறி விட்டன. ஒடுக்கப் பட்ட சமூகத்தவரான அமெரிக்க அதிபர் ஒபாமா கூட ஒப்புக்கு சப்பாகத்தான் ஈழ விவகாரத்தை கையாண்டார். ராஜபக்ஷேயின் இன அழிப்பு கோரத்துக்கு உலக நாடுகள் அனைத்துமே கை கொடுத்து உதவிய கொடுமையை நாளைய வரலாறு கண்டிப்பாகக் காறித் துப்பும்.புலிகள் இல்லாத ஈழத்தில் தமிழ் மக்களின் விடிவுக்காக ராஜபக்ஷே அரசு எதையும் செய்யாது. இனி காலாகாலத்துக்கும் ஈழத்தில் இருக்கும் தமிழ் மக்கள் அடிமை வம்சங்களாக மாற்றப்பட்டு விடுவார்கள். சிங்களவனின் செருப்புக்கு பாலிஷ் போடும் வேலைக்குக்கூட தமிழன் கட்டாயப் படுத்திப் பணிக்கப்படலாம். ராஜபக்ஷே சகோதரர்களின் வெறித் தாண்டவம் தமிழினத்தை சித்ரவதை செய்யப் போகும் கொடூரங்கள்கூட இனி நமக்குத் தெரியப் போவதில்லை. புகைப் படங்களாகவும் வீடியோ பதிவுகளாகவும் இன அழிப்பு துயரத்தை புலிகள் இந்த உலகத்துக்கு வெளிச்சமிட்டுக் காட்டிய போதே, அதை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த இந்த உலகம், இனி வேறு வேலைகளில் மூழ்கி விடும். அதனால் இனி ஆயுட்கால அடிமைச் சமூகமாகத்தான் ஈழத்தில் தமிழினம் வாழும்!''


''அப்படியானால், இனி ஈழ விடிவுக்கு வாய்ப்பே இல்லையா?''

''பிரபாகரனும் முக்கிய தளபதிகளும் பத்திரமாக இருப்பதுதான் தாங்க முடியா துயரத்திலும் நமக்கு இருக்கும் ஒரே ஆறுதல்... பிரபாகரன் தலைமையில் மறுபடியும் போராட்டம் தொடங்க சில காலம் பிடிக்கும். அதற்குள் உலக நாடுகளிடத்தில் இரக்கமும் மனசாட் சியும் உருவானால், எப்படியும் பிரபாகரன் தலைமையில் தனி ஈழம் அமையும். அதுவரை இலங்கையில் இருக்கும் தமிழர்கள், கண்ணியில் சிக்கிய காடைக் குருவியாகத்தான் கதறிக் கொண்டி ருப்பார்கள்!''

- இரா.சரவணன்

நன்றி : ஜீனியர் விகடன்
27-05-09

0 கருத்துகள்:

கருத்துரையிடுக