கச்சத்தீவு மீட்கப்படவேண்டும் - நாடாளுமன்றத்தில் திருமா

  • மும்பை தாக்குதல் உள்நாட்டு காரணங்களால் மட்டுமே உருவானது அல்ல. அது வெளி விவகார கொள்கையோடு தொடர்புடையது.
  • கச்சத்தீவு மீட்கப்படவேண்டும் - நாடாளுமன்றத்தில் திருமா வலியுறுத்தல்
மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே, மான்புமிகு உள்துறை அமைச்சர் அவர்களே, மான்புமிகு உறுப்பினர்களே உங்கள் அனைவருக்கும் எனது பணிவான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். உள்துறை அமைச்சகத்தின் செயல் திட்டங்களுக்கான நிதி ஓதுக்கும் கோரிக்கையின் மீது விடுதலைச்சிறுத்தைகளின் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்வதற்கு வாய்பளித்தமைக்காக முதலில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.






உள்துறை அமைச்சகத்தின் முன்னால் ஏராளமான சவால்கள் குவிந்துக் கிடக்கின்றன என்றாலும் முதன்மையான சவாலாக இருப்பது தேசிய பாதுகாப்பே ஆகும். தேசிய பாதுகாப்பு என்பது அகநிலை பாதுகாப்பையும், புற நிலை பாதுகாப்பையும் உள்ளடக்கியது ஆகும். உள்நாட்டு பாதுகாப்பு வெறும் சட்டம் ஓழுங்கை பாதுகாப்பதில் மட்டுமே இல்லை. மாறாக புறநிலை பாதுகாப்போடு உள்ளடக்கிய ஒன்றுதான் அகநிலை பாதுகாப்பு ஆகும். இங்கே பேசிய அனைவரும் வன்முறை, தீவிரவாதம், பயங்கரவாதம், இவற்றைப்பற்றி விரிவாகப் பேசினார்கள். வன்முறை என்பது இருவகைப்படும். ஒன்று ஆதிக்கத்திற்கான வன்முறை இன்னொன்று விடுதலைக்கான வன்முறை. தெருவிலே மேயும் கோழி குஞ்சை கொத்தி தின்பதற்காக பாய்ந்து வருகிற பருந்து செய்வது வன்முறைதான். தாய்க்கோழி தன் குஞ்சை பாதுகாப்பதற்காக தாவி பாய்ந்து கொத்துவதும் வன்முறைதான். ஆனால் பருந்து செய்வது ஆதிக்கத்திற்கான வன்முறை. தாய்கோழி செய்வது விடுதலைக்கான வன்முறை. எனவே வன்முறையை ஒழிப்போம் என்று பொத்தாம் பொதுவிலே நாம் ஓரு அடக்குமுறையை ஏவக்கூடாது என்பது என்னுடைய பணிவான வேண்டுகோள். உள்நாட்டு பாதுகாப்பு என்பது உள்நாட்டிலுள்ள ஒவ்வொரு பிரிவினரையும் பாதுகாப்பதில் அடங்கியிருக்கிறது.

தேசிய பாதுகாப்பு என்பது மக்களின் வாழவுருமைகளை பாதுகாக்கவும் மக்களின் அனைத்து வகையான உரிமைகளை பாதுகாப்பதிலேயும் அடங்கியிருக்கிறது. இந்தியாவின் பாதுகாப்பு துறைகள் காவல் துறை, ராணுவத்துறை, மற்றும் உளவு-கண்காணிப்புதுறை ஆகும். ஆனால் இந்த காவல்துறையிலும் ராணுவத் துறையிலும், உளவு-கண்காணிப்பு துறையிலும் தலீத்துகள் இசுலாமியர்கள் வெகுவாகப் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்ற உண்மையை நான் அரசின் கவனத்திற்கு பதிவு செய்ய விரும்புகிறேன். இசுலாமியர்களின் மக்கள் தொகையானது தேசிய அளவில் 13.04 சதவீதமாக இருக்கிறது. National crime record bureau என்கிற தேசிய குற்றப்பதிவு ஆணையம் அண்மையிலே 2007 ஆம் ஆண்டு புள்ளி விவரங்களை வெளியிட்டு வெளியிருக்கிறது. இசுலாமியர்களின் மக்கள் தொகை 13.04 சதவீதமாக இருந்தாலும் எல்லா காவல் துறையிலும் தேசிய அளவிலே 7.6 சதவீதம்தான் அவர்கள் உள்வாங்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறான புறக்கணிப்புதான் பெரும்பான்னையான வன்முறைகளுக்கு அடிப்படை காரணமாக இருக்கிறது. ஒரு தனி நபரோ, தனிச்சமூகமோ, அல்லது ஒரு மாநிலமோ, புறக்கணிக்கப்பட்டால் இழிவுப் படுத்தப்பட்டால் அவர்கள் வன்முறையை நோக்கி நகருவார்கள் என்பதை நம்மால் தடுக்க முடியாது. என்பதை அனைவரும் நன்கறிவோம்.

அந்த வகையிலே பார்க்கும் போது RAW, IB, CBI, Military Intelligence என்கிற அந்த உளவு-கண்காணிப்பு துறையில் சுத்தமாக தலீத்துகளும் இசுலாமியர்களும் இடம் பெறுவதே இல்லை என்கிற மிகப்பெரிய புறக்கணிப்பு இருக்கிறது. ஆகவே இவற்றிலெல்லாம் இந்திய அரசு கவனம் செலுத்தி அவர்களை அங்கே உள்வாங்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இன்றைக்கு இந்தியாவின் அனைத்து மத்திய சிறைசாலைகளிலும் கணக்கெடுத்து பார்த்தால் ஏராளமான ஏராளமான தலீத்துகளும், இசுலாமியர்களும்தான் குற்றவாளிகளாக அடைக்கப்பட்டிருக்கிறார்கள். தலீத்துகளும் இசுலாமியர்களும் மட்டுமே தேச விரோதிகளாக சித்தரிக்கப்படுவதற்கு காரணம் இப்படிபட்ட அதிகார மையங்களிலே தலீத்துகளும் இசுலாமியர்களும் புறக்கணிக்கப்படுவதே அடிப்படை காரணமாகும். எனவே அப்படிப்பட்ட நிலைமைகளை கண்டறிய வேண்டும். கேடி, ரவுடி மற்றும் பல்வேறு வகையான குற்றவாளிப் பட்டியல்களை தயாரிக்கிறபோது அதிலே தலீத்துகளும் இசுலாமியர்களும்தான் அதிகளவிலே இடம் பெறுகிறார்கள். எனவே ஒரு தேசிய விசாரணை ஆணையத்தை நிறுவி இவற்றை கண்டறிய வேண்டும். என்று மான்புமிகு உள்துறை அமைச்சருக்கு வேண்டுகோளாக விடுக்க கடமைப்பட்டிருக்கிறேன்.

மும்பை தாக்குதல்கள் பற்றி இங்கே பேசப்பட்டது. மும்பை தாக்குதல் உள்நாட்டு காரணங்களால் மட்டுமே உருவானது அல்ல. அது வெளி விவகார கொள்கையோடு தொடர்புடையது . நாம் நம்முடைய மனத்தை அமைதியாக வைத்திருக்க வேண்டுமானால் நாம் மட்டுமே நல்லவர்களாக இருந்தால் போதாது. நம்மை சுற்றி உள்ளவர்களும் நல்லவர்களாக இருக்க வேண்டும்.

நம் தேசம் அமைதியாக இருக்க வேண்டுமானால், நம் தேசத்தில் மட்டுமே அமைதியை நிலைநாட்டும் முயற்ச்சியில் ஈடுபட்டால் போதாது வெறிவிவகாரத் துறையிலும் நாம் ஒரு நல்ல உறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ஜவகர்லால் நேரு காலத்தில் அணி சேராக் கொள்கை நடைமுறையில் இருந்தது. ஆனால் இன்றைக்கு இந்திய அரசின் நிலை என்பது அமெரிக்காவை சார்ந்தே அனைத்தும் திட்டமிடப்படுகிறது, வரையறுக்கப்படுகிறது. ஆகவே அணி சேராக் கொள்கையிலிருந்து விலகி அமெரிக்காவைச் சார்ந்து எடுக்கிற முடிவுகள்தான் நம்முடைய பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை உருவாக்குகிறது. ஒரு பேட்டை ரவுடிக்கு ஆயிரம் பகை இருக்கலாம் அந்த பேட்டை ரவுடியோடு நாம் நட்புறவு கொண்டால் அத்தனைப் பகையும் நம் மீது திரும்பும். அமெரிக்காவுக்கு உலகம் முழுக்கப் பகை இருக்கிறது. இன்றைக்கு அமெரிக்காவோடு நாம் நட்புறவு கொண்டிருக்கிற காரணத்தினால் சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் நமக்கு எதிராக திரும்பி இருகின்றன.

கச்சத்தீவு நம்முடைய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக தமிழக அரசின் விருப்பத்திற்கு மாறாக 1976-லேயே சிங்கள ஆட்சியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அந்தக் கச்சத்தீவை மீட்காவிட்டால் ஜம்மு காசுமீரின் பாதுகாப்புக்கு எப்படி ஆபத்து நிலவுகிறதோ அப்படி தமிழ்நாட்டுக்கு ஓரு மிகப்பெரிய ஆபத்து காத்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப் பட வேண்டுமானால் தமிழக கடலோரத்தை பாதுகாக்க வேண்டுமானால் கச்சத்தீவை மீட்டே தீர வேண்டும். இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கெதிராக நாடாளுமன்ற அனுமதி இல்லாமல் அவசர நிலை காலத்தில் கச்சத் தீவு சிங்கள ஆட்சியாளர்களிட்ம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அந்த கச்சத்தீவை மீட்காத காரணத்தினால்தான் 1983-லிருந்து இதுவரையில் 300 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்களை பாதுகாக்க இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மீனவர்களை குற்றவாளிகளாக பார்க்கும் போக்கு நீடிக்கிறது. மான்புமிகு உள்துறை அமைச்சர் அவர்கள் மீனவர்களுக்கு தனி அடையாள அட்டை வழங்கப்போவதாக அண்மையிலே அறிவித்திருக்கிறார்.

ஏற்கனவே தேசிய அடையாள அட்டை வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிற போது மீனவர்களுக்கு தனியாக வழங்கினால் அவர்களை குற்றவாளிகளாக பார்க்கும் போக்கு அதிகரிக்கும். எனவே இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டு கச்சத்தீவை மீட்பதில்தான் இந்தியாவின் பாதுகாப்பு தென்னக பாதுகாப்பு அடங்கியிருக்கிறது என்பதை சுட்டிக்காட்டி வாய்ப்புக்கு நன்றி கூறி அமர்கிறேன் நன்றி, வணக்கம்

(22.07.2009 நாடாளுமன்றத்தில்)

0 கருத்துகள்:

கருத்துரையிடுக