"ராமதாஸ் செய்த பிழை!"

சிறுத்தையின் சீற்றம், இப்போது தலைநகரில்!

"டெல்லி மண் எனக்கு முற்றிலும் புதிது. கண்ணைக்கட்டி காட்டில் விட்டதைப் போல் இருக்கிறது. ஆனாலும் ஒடுக்கப்பட்டு, வஞ்சிக்கப்படும் தமிழினத்தின் அவலக் குரலை நாடாளுமன்றத்தில் ஒலிக்கச் செய்ய வேண்டிய அரசியல் வரலாற்றுக் கடமை, சிறுத்தைகளுக்கு இருக்கிறது!'' - நரைமுடிகள் எட்டிப்பார்க்கும் தாடியுடன் பேசுகிறார் திருமாவளவன். நாடாளுமன்றத் தேர்தலில் கருணாநிதியுடன் கைகோத்து வெற்றியை எட்டிப் பிடித்தவர். அந்தக் காரணத்துக்காகவே எதிர் அணியினரால் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டவர். ஈழப் பிரச்னையில் காங்கிரஸ் அரசை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்த அவரே, 'அன்னை சோனியா!' என்ற வார்த்தைகளை உச்சரிக்கும் நிலையை வந்தடைந்தார் என்பதால், ஈழ ஆதரவாளர்கள் மத்தியில் திருமா மீதான வருத்தங்கள் இன்னமும் மிச்சம் இருக்கின்றன. இது குறித்தெல்லாம் ஓர் இரவு நேரத்தில் அவருடன் உரையாடியதில்...
-
"தேர்தல் அரசியலை வெறுத்து ஒதுக்கிய ஓர் இடத்திலிருந்து வந்தவர் நீங்கள். இன்று அதே நாடாளுமன்றத்தின் உறுப்பினராக இருக்கும் நிலையில் உங்கள் மனநிலை என்ன?''

"ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களுக்கான நியாயத்தைத் தேர்தல் அரசியல் பெற்றுத் தராது என்று ஆரம்பத்தில் நினைத்தேன். ஆனால், எனது இந்த அரசியல் நிலைப்பாட்டால் மக்களை ஒருங்கிணைக்க முடியவில்லை. மாறாக, காவல் துறையும் வருவாய்த் துறையும் எங்களைப் பயங்கரவாதிகளாகச் சித்திரித்தன. எவ்வளவு உயர்ந்த தத்துவமாக இருந்தாலும், மக்களிடம் அந்நியப்பட்டால் எதையும் சாதிக்க முடியாது என்பதைக் காலம் எங்களுக்குக் கற்றுத்தந்தது. புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் வழியாக அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிப் புதிய சோஷலிசத்தைக் கட்டமைக்க முடியும் என்று நம்பினார். அவரது நம்பிக்கையைப் பின்பற்றி எங்களது அரசி யல் பயணம் தொடர்கிறது. இன்று பயங்கரவாதம் என்ற பெயரில் புரட்சிகர சக்திகளையும், விடுதலை இயக்கங்களையும் உலக நாடுகள் ஈவு இரக்கம் இல்லாமல் நசுக்குகின்றன. இந்தியாவில் மாவோயிஸ்ட்டுகளுக்கு விதிக்கப்பட்டு இருக்கும் தடையும், ஈழத்தில் விடுதலைப்புலிகளை அழித்துவிட்டோம் எனக் கொக்கரிக்கும் சிங்கள அரசின் போக்கும் இதனை உறுதிப்படுத்துகின்றன. ஆகவே, நாடாளுமன்ற ஜனநாயகப் பாதையை நாங்கள் தேர்ந்தெடுத்தது மக்களிடம் இருந்து அந்நியப்பட்டுவிடவில்லை என்ற ஆறுதலைத் தருகிறது!''
-
"ஒரே ஒரு உறுப்பினராக உங்களால் என்ன செய்ய முடியும்? உங்கள் நாடாளுமன்ற கன்னிப் பேச்சின்போதுகூட பிரதமர், சோனியா காந்தி உள்ளிட்ட யாருமே அவையில் இல்லையே..?''

"உண்மைதான். 'கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம், எளிய மக்களுக்கும் அதிகாரம்' என்பதுதான் எங்கள் கட்சியின் கொள்கை. ஆனால், நாடாளுமன்றத்தில் அந்த அவையின் உறுப்பினருக்குக்கூட அதிகாரமும் ஜனநாயகமும் இல்லை. ஐந்து உறுப்பினர்கள் இருந்தால் ஒரு குழுவாகவும், ஏழு உறுப்பினர்கள் இருந்தால் ஒரு கட்சியாகவும் அங்கீகரிக்கிறார் கள். நானோ ஒற்றை உறுப்பினர். அத னால், என்னால் ஆகப் பெரிய சலனங்களை உண்டுபண்ண முடியும் என்ற நம்பிக்கை எனக்கே இல்லை. உண்மை யில் நாடாளுமன்ற அவையில் பேசுவதற் கான அனுமதி பெறுவதற்கே மனு கொடுத்து, மன்றாட வேண்டியிருக்கிறது. பிரதமர் இல்லாத அவையில் என்னைப் பேசச் சொன்னபோது, நான் மறுத்தேன். 'நாளை பேசுகிறேன்' என்றேன். ஆனால், 'இன்று நீங்கள் பேசவில்லை என்றால், இந்த அமர்வில் பேசவே முடியாது' என்றார்கள். அதிலும் எனக்கு ஒதுக்கப்பட்டது வெறும் ஐந்து நிமிடங்கள். என்னைப் போல் 'கடமைக்கு'ப் பேசக் காத்திருந்த 20 உறுப்பினர்கள் இருந்த அவையில் முடிந்த அளவுக்கு என் கருத்துக்களைப் பதிவு செய்தேன். ஈழத்துத் தமிழர்களுக்கு இந்திய அரசு துரோகம் இழைத்தது என்பதையும், சிங்கள அரசுக்கு இந்திய அரசு செய்த போர் உதவிகள் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் பேசினேன்!''
-
"ஈழப் பிரச்னையில் உங்கள் மனச்சாட்சிக்கு நேர்மையாகப் போராட முடிந்ததா?''

"ஈழ ஆதரவுப் போராட்டங்களுக்காக எங்கள் கட்சியின் 26 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்திலும், தேசியப் பாது காப்புச் சட்டத்திலும் கைது செய்யப்பட்டார்கள். அதில் 10 பேர் இன்னமும் உள்ளேதான் இருக்கிறார்கள். மருத்துவர் ராமதாஸின் வேண்டுகோளை ஏற்று, எனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்ட பிறகு, மிகப் பெரிய மன உளைச்சலுக்கு ஆளா னேன். முத்துக்குமார் என்னும் ஈடு இணையற்ற தியாகி தன்னை எரித்துக்கொண்டார். அதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் பரவிய உணர்வெழுச்சியால் 13 உயிர்கள் ஈழ மக்களுக்காகத் தமிழக மண்ணில் மடிந்தன. அதில் மூன்று பேர் எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள். 'இந்த உயிர்த் தியாகங்களை மதிக்க வேண்டும் என்றால், நாம் குறுகிய கால அரசியல் நோக்கங் களை மறந்து, தனி அணியில் ஒன்றி ணைய வேண்டும்' என மருத்துவர் ராமதாஸிடம் வலியுறுத்தினேன். தி.மு.க., அ.தி.மு.க. அல்லாத மாற்று அணிக்குத் தலைமை ஏற்கும் வரலாற்று வாய்ப்பை அவர் தவறவிட்டதுடன், ஜெயலலிதா என்னும் தமிழர் விரோதத் தலைமையுடன் தன்னை இணைத்துக்கொண்டார். மருத் துவர் ராமதாஸின் இந்தப் பிழை, வரலாற்றின் மிகப் பெரும் தமிழர் எழுச்சியை நீர்த்துப்போகச் செய்யக் காரணமாக அமைந்துவிட்டது!''

"அப்படியானால், தி.மு.க. ஈழப் பிரச்னையில் இதய சுத்தியுடனும், உண்மையான அக்கறையுடனும்தான் செயல் பட்டது என்கிறீர்களா?''

"காங்கிரஸ் கூட்டணியோடு தி.மு.க. தேர்தலைச் சந்தித்ததால் இப்படிக் கேட்கிறீர்கள். உங்கள் கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்வதானால், ஓர் ஆளும்கட்சியாக ஈழப் பிரச்னையில் என்ன செய்ய வேண்டுமோ, அதன் உச்சம் வரைக்கும் தி.மு.க. செய்திருக்கிறது. பேரணி, மனிதச் சங்கிலி, டெல்லி சந்திப்புகள், அனைத்துக் கட்சிக் கூட்டங்கள் என தி.மு.க-வின் செயல்பாடுகளைக் குறைத்து மதிப்பிடக் கூடாது. அதே நேரம் விமர்சனங்களை வைக்கும் முன்பு ஒரு மாநில அரசின் வரம் புக்கு உட்பட்ட அதிகாரங்களையும் புரிந்துகொள்ள வேண்டும்!''

"பிரபாகரன் இருக்கிறார்... இறந்துவிட்டார் என்பதில் ஆளும் பேருமாகக் குழப்பு கிறார்கள். நீங்களாவது நேரடி பதில் சொல்வீர்களா?''

"உலகத் தமிழினம் கலங்க வேண்டாம். பிரபாகரன் உயிருடன்தான் இருக்கிறார். அவர் இறந்தது உண்மையானால், இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்ஷே அதை முறைப்படி அறிவித்திருக்க வேண்டும். இதுவரைக்கும் அப்படிச் செய்யவில்லை. அதே போல ராஜீவ் காந்தி கொலை வழக்கின் முதல் குற்றவாளியான பிரபாகரன் இறந்தது உண்மை என்றால், இந்நேரம் இந்திய அரசு அந்த வழக்கை முடித்துக்கொள்வதாக அறிவித்திருக்கும். இந்திய, சிங்கள அரசுகளின் மௌனங்களேபிரபாகரன் உயிருடன் இருப்பதற்கான சான்று!''

நன்றி ஆனந்த விகடன் 08-07-09




0 கருத்துகள்:

கருத்துரையிடுக