ஜெர்மனி தமிழர் வாழ்வுரிமை மாநாடு - திருமாவின் எழுச்சி உரை (பகுதி 1)
ஈழத்தமிழர்களின் விடுதலைக்காக, ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காக, ஈழத்தமிழர்களின் வாழ்வுக்காக இந்த இயக்கத்தை முழுமையாக நான் ஈடுபடுத்தியவன்.
..........ஈழத்தமிழர்களால் நடத்தப்படுகின்ற ஈழத்தமிழர் ஆதரவு இணையத்தளங்களில் அல்லது ஏடுகளில் விடுதலைச்சிறுத்தைகளின் அறிக்கைளையோ போராட்டங்களையே முழுமையாகப் பதிவுசெய்வதில்லை. உலகம் முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் ஏராளமான நாடுகளுக்கு சென்றிருக்கிறேன், அமெரிக்காவில் பேசியிருக்கிறேன், கனடாவில் பேசியிருக்கிறேன், ஆஸ்திரேலியாவில் பேசியிருக்கிறேன், ஐரோப்பிய நாடுகளில் பேசியிருக்கிறேன். மணிக்கணக்கில் உரையாற்றியிருக்கிறேன், எத்தனையோ மாநாடுகளை தமிழகத்திலே நடத்திக் காட்டியிருக்கிறோம். ஈழத்தமிழர்களால் நடத்தப்படுகின்ற இணையத்தளங்களில்கூட இந்தச் செய்திகள் 50 விழுக்காடுகள்கூடப் பதிவானதில்லை. இதை நான் ஒரு குற்றச்சாட்டாகச் சொல்லவில்லை. ஊடகங்களில் வரும் செய்திகளை மட்டுமே வைத்து நாம் ஒரு முடிவுக்கு வரக்கூடாது. ஊடகங்களைத் தாண்டி இருட்டடிப்பு செய்யப்படுகின்ற செய்திகள் ஏராளம். இன்றைக்கு இராஜபக்சே சொல்லுகின்ற செய்திகள் மட்டும்தான் உலக அளவிலே பதிவாகிக் கொண்டிருக்கிறது. நம்முடைய தரப்புச் செய்திகளை பதிவு செய்ய ஊடகங்கள் தயாராக இல்லை.
ஆக, இராஜபக்சே சொல்லுகின்ற செய்திகளை மட்டுமே நாம் நம்பினால் நம்மால் எழுந்திருக்க முடியாது. நம்மால் தொடர்ந்து போராடமுடியாது, நம்முடைய எதிர்காலம் இருண்டுபோகும். மறுபடியும் அடிமைத்தனத்தில்தான் உழன்றுபோகவேண்டியிருக்கும். எனவே, கூடியிருக்கின்ற புலம்பெயர்ந்த தமிழ்ச்சொந்தங்களுக்கு, உங்களில் ஒருவன், உங்கள் உணர்வுகளைப் பிரதிபலிக்கிறவன், உங்கள் குடும்பத்தைச் சார்ந்த ஒருவன் என்கிற உணர்வோடு சில செய்திகளைச் சொல்லவிரும்புகிறேன், பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ஏராளமான தோழர்கள் என்னிடம் கேட்கின்ற கேள்விகளுக்கெல்லாம் மொத்தமாக பதில்சொல்ல நான் கடமைப்பட்டிருக்கிறேன். அண்ணன் கணேசலிங்கன் அவர்கள் தொடர்ச்சியாக என்னைத் தொடர்புக்கொண்டு தமிழக நிலவரங்களை கேட்டுக்கொண்டிருந்தார். அதனடிப்படையில் விடுதலைச் சிறுத்தைகள் எடுத்த முடிவுகளையும், திருமாவளவன் மேற்கொண்ட முயற்சிகளையும் அவ்வப்போது தொலைபேசி வழியாகப் பாராட்டி வந்திருக்கிறார். அப்படி எல்லோரையும் தொடர்புகொள்வதற்கான வாய்ப்பில்லை, நாங்கள் நடத்துகின்ற ‘விசிகே.இன்’ என்கிற இணையத்தளத்தைக்கூட பலர் பார்ப்பதற்கு வாய்ப்பில்லை.
ஆகவே தமிழக அரசியல் சூழல், இந்திய அரசியல் சூழல் எந்தளவிற்குப் புலம்பெயர்ந்த தமிழர்களிடையே போய்ச்சேர்ந்திருக்கிறது என்பது எனக்குத் தெரியாது.
நான், ஈழத்தை நேசிக்கிறவன், ஈழத்திற்காக ஆயுதம் ஏந்தாத ஒரு விடுதலைப் புலியைப்போல் செயல்படுகிறவன் என்கிற உணர்வு எனக்கு உண்டு என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
சென்னையில் அண்ணன் மேதகு பிரபாகரன் அவர்கள் தங்கியிருந்தபோது நேரில் சந்தித்தவன். நான் சட்டக்கல்லூரி மாணவனாக இருந்த காலத்தில் என்னுடைய பொது வாழ்வு ஈழத்தமிழர்களுக்கான ஆதரவுக் குரல் என்கிற அடிப்படையில்தான் தொடங்கியது. நான் பல்கலைக்கழக மாணவனாக இருந்த காலத்தில் மாணவர்களைத் திரட்டி 1983ஆம் ஆண்டு நடந்த இனப்படுகொலையைக் கண்டித்து பேரணிகளை, ஆர்ப்பாட்டங்களை நடத்தினேன். ‘விடுதலைப்புலி’ என்கிற பெயரிலே கையெழுத்து ஏடுகளை நடத்தியவன். அப்படிப்பட்ட அந்தக்காலத்தில் பெரியார் திடலில் மாணவர்களைத் திரட்டி ஈழ விடுதலை ஆதரவு மாநாட்டை என்னுடைய தலைமையிலே நடத்தியவன். அப்படித்தான் என்னுடைய பொதுவாழ்க்கை தொடங்கியது. நான் சட்டக்கல்லூரி மாணவனாக இருந்தபோது அண்ணன் பிரபாகரன் அவர்கள் அடையாறில் தங்கியிருந்தபோது, எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்த காலத்தில் அவர் உதகையிலே மலர் கண்காட்சி திறந்துவைக்கச் சென்றிருந்தபோது, அன்றைக்கு ஐ.ஜி.யாக இருந்த மோகன்தாசு, அண்ணன் பிரபாகரனிடம் இருந்த வயர்லஸ் போன்ற கருவிகளையெல்லாம் திடீரென்று கையகப்படுத்திகொண்டார். அதை எதிர்த்து அண்ணன் பிரபாகரன் அவர்கள் உண்ணாநிலை அறப்போரை நடத்தினார்.
அப்படிப்பட்ட நேரத்தில் மாணவர்களாய் இருந்த நாங்கள் 20 பேர் திரண்டுபோய் அந்த வீட்டு வாசலிலே நின்று உண்ணாவிரதத்தைக் கைவிடவேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினோம். அப்போது எங்களிடையே அண்ணன் அவர்கள் ஆற்றிய உரை இப்போதும் என் காதுகளில் ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கிறது. நாங்கள் ஆயுதங்களை “ஏந்தியிருப்பது சிங்கள இனவெறிக்கு எதிராகத்தானே தவிர இந்தியாவுக்கு எதிராக இல்லை. இந்திய அரசை நாங்கள் நேசிக்கிறோம், இந்தியாவை நாங்கள் நேசிக்கிறோம். ஆனால், கைகளிலே இருக்கின்ற ஆயுதங்களை வயர்லஸ் போன்ற கருவிகளை இன்றைக்கு தமிழகக் காவல்துறை பறிமுதல் செய்திருக்கிறது. அவற்றை ஒப்படைக்கும்வரை நான் இந்த அறப்போரைக் கைவிடமாட்டேன்” என்று எங்களிடத்தில் பேசிக்கொண்டிருக்கும்போதே எம்.ஜி.ஆரிடத்திலிருந்து தொலைபேசி அழைப்பு வருகிறது. வீட்டின் உள்ளே சென்றுவிட்டு மறுபடியும் வெளியே வருகிறார். முதல்வர் அவர்கள் ஆயுதங்களை ஒப்படைக்கச்சொல்லி ஆணையிட்டுவிட்டார். எனவே, உண்ணாவிரதத்தைக் கைவிடுகிறேன் என்று அவர் அங்கே அறிவிப்புச்செய்கிறார். திராவிடர் கழகத்தின் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உடனிருக்கிறார். அவர்தான் அன்றைக்குப் பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்துவைத்தார். அப்படி அண்ணன் பிரபாகரன் அவர்களோடு எனக்கு அறிமுகம் ஏற்பட்டது. அண்ணன் கிட்டு அவர்கள் அங்கே தங்கியிருந்த காலத்தில் அவரை சந்தித்திருக்கிறேன். அப்படி எனக்கு இந்த இயக்கத்தோடு அறிமுகம் ஏற்பட்டது. அதன் பின்னர், விடுதலைச்சிறுத்தைகள் என்கிற இந்த இயக்கத்தின் தலைவர் பொறுப்பை நான் ஏற்றபிறகு, ஒடுக்கப்பட்டுக்கிடக்கின்ற ஏழை-எளிய மக்களின் தலைநிமிர்வுக்காக இந்த இயக்கத்தை நான் உருவாக்கினாலும், கடந்த காலத்தில் அம்பேத்கர் இயக்கம் என்பது தலித்துகளுக்கான இயக்கமாக மட்டுமே இருந்தது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இயக்கமாக மட்டுமே இருந்தது. ஆனால், முதல் முதலாக இந்திய வரலாற்றில் ஒரு தமிழ்த்தேசிய இயக்கமாக தலித் இயக்கத்தை மாற்றியவன் திருமாவளவன்.
ஈழத்தமிழர்களின் விடுதலைக்காக, ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காக, ஈழத்தமிழர்களின் வாழ்வுக்காக இந்த இயக்கத்தை முழுமையாக நான் ஈடுபடுத்தியவன்.
அப்படிப்பட்ட அந்தக் காலகட்டத்தில்தான் சமாதான ஒப்பந்தம் ஏற்படுகிறது. அந்தச் சமாதான ஒப்பந்தக்காலத்தில் 2002ஆண்டு ‘மானுடத்தின் தமிழ்க்கூடல்’ நிகழ்ச்சி யாழ்ப்பாணத்தில் நடக்கிறது. அதில் கலந்துகொள்கின்ற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அண்ணன் அவர்கள் திருமாவளவனை அழையுங்கள் என்று ஆணையிட்டதின் பேரில் எனக்கு அழைப்பு வந்தது. நான் வளர்ந்த பெரிய தலைவர் அல்ல, இந்தியாவிலே புகழ்பெற்ற தலைவர் அல்ல, வளர்ந்துவருகின்ற ஒரு சின்னஞ்சிறிய கட்சியின் தலைவரான என்னை அடையாளம் கண்டு அழைத்தவர் மேதகு அண்ணன் பிரபாகரன் அவர்கள். ஆக, மானுடத்தில் தமிழ்க்கூடல் மாநாட்டிலே பங்கேற்ற பிறகு தனியே என்னை வரவழைத்து ஒரு மணி நேரம் என்னுடன் உரையாடினார். அவரோடு நெருங்கியிருந்து நான் ஒரு மணிநேரம் பேசக்கூடிய வாய்ப்பைப்பெற்றேன். முதல் நாள் எல்லோருடனும் சேர்ந்து அமர்ந்து உணவு அருந்தக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அடுத்த நாள் என்னை மட்டும் தனியாக வரவழைத்து ஒருமணிநேரம் என்னோடு உரையாடினார். என் வாழ்நாளில் மறக்கமுடியாத ஒரு நிகழ்வு அது.
தமிழ்நாட்டு அரசியல் சூழல், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்நிலை இவற்றையெல்லாம் மிகக்கூர்மையாக அவர் தமிழ்நாட்டு ஏடுகளைப் படித்துத் தெரிந்துவைத்திருந்தார். அந்த நிகழ்ச்சிகளையெல்லாம் கலந்துரையாடியபோது நான் மகிழ்ச்சியடைந்தேன். என் தாய் எப்போதோ கொடுத்த பேட்டியைப் படித்துவிட்டு, அதை நினைவிலே வைத்திருந்து என்னை கேட்டார். அப்படியெல்லாம் அண்ணன் அவர்களோடு ஏற்பட்ட நெருக்கம் எனக்குள் ஒரு உண்மையான தமிழீழ விடுதலைப்போராளி என்கிற உணர்வை ஏற்படுத்தியது. ஈழத்திலே இருந்து ஈழத்து மண்ணிலே ஆயுதம் ஏந்தி என்னால் போராடமுடியவில்லையே தவிர தமிழகத்திலே இலட்சக்கான இளைஞர்களை ஈழவிடுதலை ஆதரவாளராக அணிதிரட்டுகின்ற பொறுப்பை ஏற்றுக்கொண்டேன்.
இன்றைக்கு தமிழகத்திலே இளைஞர்களை அணிதிரட்டுகின்ற வலிமை உங்களிடம்தான் இருக்கிறது. இதை நீங்கள் சரியாக முன்னெடுத்துச்செல்லவேண்டும். உங்களுக்காக ஒரு அண்ணன் இருக்கிறான் என்ற நம்பிக்கையோடு நீங்கள் போராடுங்கள் என்று மார்போடு என்னைக் கட்டியணைத்து விடைகொடுத்தவர் அண்ணன் பிரபாகரன் அவர்கள். இட்டுக்கட்டி எதையும் நான் சொல்லவில்லை, அந்தத் தேவை எனக்கில்லை. இதுவரை எங்கும் சொல்லாத செய்திகளை நான் இந்த மேடையில் சொல்லுகிறேன். யாரிடத்திலே சொல்லாத செய்திகளை இந்த மேடையில் நான் சொல்லுகிறேன். அவரோடு நான் எடுத்துக்கொண்டு புகைப்படங்களையெல்லாம் இங்கேயே வைத்துவிட்டுச் செல்லுங்கள், தம்பிகள் அதனைப் பத்திரமாக பார்த்துக்கொள்வார்கள், ஈழம் விடுதலை பெற்ற பின்னர் நீங்கள் இங்கே வரத்தான் போகிறீர்கள், அப்போது அந்தப் புகைப்படங்களை உங்களிடம் ஒப்படைக்கச் சொல்கிறேன் என்று சொன்னவர் அண்ணன் பிரபாகரன் அவர்கள்.
மறுபடியும் 2004ஆம் ஆண்டு சந்திக்கின்ற வாய்ப்பு கிடைத்தது, 11 நாள் அங்கே தங்கியிருந்தேன். அண்ணன் தமிழ்ச்செல்வன் அவர்களோடு சேர்ந்து தமிழ் ஊடக அறிவியல் கல்லூரி அடிக்கல்நாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றேன். மாவீரர் நாளில் விசுவமடு மாவீரர்கள் துயிலும் இல்லங்களில் கலந்துக்கொண்டேன். அப்படிப்பட்ட இந்த உறவுகளெல்லாம் எனக்குள் உரமேற்றியது, என் உணர்வுகளைக் கூர்மைப்படுத்தியது. என்னை ஈழவிடுதலைப்போராளியாகவே வளர்த்தெடுத்தது. இந்த உணர்வுகள்தான் என்னுடைய செயல்திட்டங்களுக்கெல்லாம் அடிப்படையாக அமைந்தது.
தமிழ்நாட்டு அரசியலில் கடந்த 10 ஆண்டுகளில் தொடர்ச்சியாக ஈழ விடுதலை குறித்த சிந்தனையை வளர்த்தெடுத்ததில் பெரும்பங்கு விடுதலைச்சிறுத்தைகளுக்கு உண்டு என்பதை நான் மார்தட்டிச் சொல்லுகிறேன். விடுதலைச்சிறுத்தைகள்தான் பெரும்பாலான நிகழ்ச்சிகளுக்கு முன்னெடுப்பு ஆற்றலாக இருந்தது. பொடா வந்தபோது, நான் ஈழத்திலே இருந்தேன். பொடா எதிர்ப்பு முன்னணியை உருவாக்கி விட்டுதான் நான் ஈழத்திற்கே போனேன். அந்த சட்டத்தை எதிர்த்து போராட வேண்டும் என்கிற உணர்வை இளைஞர்களிடத்தில் வளர்த்தேன்.
அக்கலாக்கட்டத்தில் ஈழம் என்பதைப் பற்றிப் பேச முடியாது அப்போது ஜெயலலிதா அம்மையார் ஆட்சியில் இருந்தார். ஈழம் என்கிற சொல்லோ விடுதலைப்புலிகளைப்புலிகள் என்ற சொல்லோ பயன்படுத்தப்பட்டால் அவர்களின் மீது வழக்குப் போட்டு உள்ளேத் தள்ளுகிற கொடுமை தலைவிரித்தாடிய நேரம். மேடைகளில் ஏறி விடுதலைப் புலி என்று நான் பேசினேன். ‘புலிகள் என்றால் ஈழம் ஈழம் என்றால் புலிகள்’ இரண்டையும் பிரிக்கமுடியாது என்று மேடைகளில் முழங்கியவன் திருமாவளவன். பொடா நடைமுறையில் இருந்த நேரம். நாங்கள் புலிகளை ஆதரிக்க மாட்டோம். நாங்கள் ஈழத்தை ஆதரிக்கிறோம் என்று சொல்லிக் கொண்டிருந்த போது, நாங்கள் ஈழத்தமிழர்களை ஆதரிக்கிறோம் விடுதலைப்புலிகளை ஆதரிக்கவில்லை என்று விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தபோது நான் சொன்னேன், ஈழம் என்றால் புலிகள்; புலிகள் என்றால் ஈழம் என்ற அந்தத் தலைப்பிலேயே ஒரு நூலை என்னுடைய உரையைத் தொகுத்து வெளியிட்டுள்ளோம். அந்தக் காலத்திலிருந்து தொடர்ச்சியாக ஈழத்தைப் பற்றியும் புலிகளைப் பற்றியும் வெளிப்படையாகப் பேசி அங்கே இருந்த இறுக்கத்தை உடைத்தெறிந்த இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் என்பதைச் சொல்ல நான் கடமைப்பட்டுள்ளேன். இப்படி பேசவே கூடாது என்ற போதுதான் பேசுவதற்கு எங்களுக்கு கருத்துரிமை இருக்கிறது என்று புல்லாரெட்டி அவென்யூ அமைந்தகரையில் கருத்துரிமை மாநாடு நடத்தினோம். அந்த மாநாட்டிற்குத் தடை விதிக்கச் சொல்லி காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் சட்ட மன்றத்திலேயே பேசினார்கள். திருமாவளவனை கைது செய்யுங்கள் என்று சட்டமன்றத்திலேயே பேசினார்கள். காங்கிரசுக் கட்சிக்காரர்கள் மட்டுமல்ல ஜெயலலிதா அம்மையார்கூட பேசினார். புலிகளைத் தீவிரமாக ஆதரிக்கிறான். ஈழத்தை தீவிரமாக ஆதரிக்கிறான். ஏன் திருமாவளவனை கைது செய்யவில்லை, கைது செய்யுங்கள் என்று திரும்பத் திரும்ப அறிக்கை வெளியிட்டவர் ஜெயலலிதா அம்மையார். அதன் பிறகு 2007லே சமாதான ஒப்பந்தம் முடிவடைகிறது. அதற்கு முன்பே ஒப்பந்தத்தை மீறி பல்வேறு அத்துமீறல்களைச் செய்கிறான். இவற்றையெல்லாம் அவ்வப்போது அம்பலப்படுத்துகிற நடவடிக்கைகளிலே விடுதலைச் சிறுத்தைகள் தமிழகத்திலே மேற்கொண்டது. ஆழிவாய் தொடங்கி முள்ளிவாய்க்கால் வரையில் நமக்குப் பின்னடைவு ஏற்படுகிறது. ஒப்பந்தகாலம் முடிந்த பிறகு ஆழிவாயிலே தொடங்கிய யுத்தம் அதிலே நாம் பின் வாங்கினோம். அதற்கடுத்து முள்ளிவாய்க்கால் வரையில் நாம் பின்வாங்க வேண்டிய நிலையேற்பட்டது.
இந்தக்காலகட்டத்தில் அடுத்தடுத்து தொடர்ச்சியாகப் போராட்டங்களையும் மாநாடுகளையும் நடத்திய ஒரே கட்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. எந்த ஏட்டிலும் பதிவாகவில்லை. இணைய தளங்களில் பதிவாகவில்லை. ஈழத் தமிழர்கள் நடத்துகிற இணையதங்களில்கூட அவை பதிவாகவில்லை. 1965க்குப் பிறகு தமிழகத்தில் எழுச்சிமிக்க ஒரு போராட்டம் நடந்ததென்று சொன்னால் அது ஈழத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற கொடுமைகளை தடுத்து நிறுத்துங்கள் என்று சொல்லி விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய இரயில் மறியல் போராட்டம். அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய போராட்டங்கள்தான் வெப்பத்தை உருவாக்கியது. அரசியல் காரணங்களுக்காக சில பேர் இந்த முடிவை நோக்கி நகர்ந்து வந்தார்கள். குற்றச்சாட்டுக்காகவோ, அல்லது வாய்புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று அவதூறு பேசவோ நான் இதைச் சொல்லவில்லை. உண்மையை புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக நான் சொல்கிறேன்.
ஜெர்மனி தமிழர் வாழ்வுரிமை மாநாடு - திருமா எழுச்சி உரை (பகுதி 2)
ஜெர்மனி தமிழர் வாழ்வுரிமை மாநாடு - திருமா எழுச்சி உரை (பகுதி 3)
ஜெர்மனி - மாநாட்டில் திருமாவின் எழுச்சிமிகு உரை MP3(தரவிறக்கம்)
நன்றி:
தட்டச்சு செய்துகொடுத்த : ஆதிரை, கவினி
0 கருத்துகள்:
கருத்துரையிடுக