'இந்தியாவை நம்பி இனி பிரயோஜனமில்லை...

ஈழத் தமிழர் மாநாடு... ஆவேச திருமாவளவன்

'இந்தியாவை நம்பி இனி பிரயோஜனமில்லை...

புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் ஜெர்மனியில் ஒன்று கூடி, கடந்த வாரம் ஒரு மாநாட்டை நடத்தி முடித்திருக்கிறார்கள். அதாவது, 'புலிகளை முற்றாக ஒழித்து விட்டோம்' என்று இலங்கை அரசு அறிவித்த மே 17-க்குப் பிறகு!

ஜெர்மனியின் ரைய்ன் நகரில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் ஏற்பாடு செய்திருந்த 'ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாடு' ஈழ ஆர்வலர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வு. காரணம், புலி களின் வீழ்ச்சி(?)க்குப் பிறகு குமரன் பத்மநாபனும், ருத்ரகுமாரனும் 'நாடு கடந்த தமிழ் ஈழ அரசு' அமைப் பதில் தீவிரம் காட்டத் தொடங்கியிருக்க, அதன் முன்னோட்டமாக நடப்பதுதான் இந்த மாநாடு.

ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாடு முடிந்த மறுநாள், சுவிட்சர்லாந்தில் நாடு கடந்த தமிழ் ஈழ அரசு தொடர்பான செயற்குழுக் கூட்டம் நடை பெற்றிருக் கிறது.

வாழ்வுரிமை மாநாட்டின் சிறப்பு அழைப்பாளராக தொல்.திருமாவள வனுக்கு அழைப்பு விடுக்கப்பட... அதில் கலந்துகொண்டு புலிகள் புகழ் பாடியிருக்கிறார் திருமாவளவன்!

ரைய்ன் நகரில் இருந்த திருமாவளவனிடம் தொடர்புகொண்டோம்.

''மாநாட்டில் பேசிய நீங்கள், இந்தியாவை கடுமையாகத் தாக்கிப் பேசியதாக உளவுத் தகவல்கள் சொல் கின்றனவே...''

''இலங்கையில் வதை முகாம்களுக்குள் சுருக்கப்பட்டிருக்கும் தமிழினத்துக்கு என்ன தீர்வு? யார் வந்து ஆதரவு தருவார்கள்? இந்தியாவை இன்னமும் நம்ப வேண்டுமா? இந்த ஐயங்கள் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களை ஆட்டிப் படைக்கின்றன. இதற்கெல்லாம், இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக நான் என்ன

பதில் சொல்லப் போகிறேன் என்ற எதிர்பார்ப்பு, புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் மத்தியில் இருந்தது. மாநாட்டில் ருத்ரகுமாரனும் இலங்கையின் தமிழ் எம்.பி-க்களும் கலந்து கொண்டார்கள். என் மனதில் இருந்ததை, யதார்த்தத்தை சுமார் ஒன்றரை மணிநேரம் அங்கே எடுத்து வைத்தேன்.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை, ஈழத்துக்கும் தமிழர்களுக்கும் எதிரானதாக இருக்கிறது என்பதை அப்பட்டமாக எடுத்து வைத்துப் பேசினேன். சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையில் நடக்கும் 'வல்லரசு பனிப்போரி'ல் ஈழத் தமிழினம் அழிந்து கொண்டிருக்கிறது என்பதை வெளிப்படையாகப் போட்டு உடைத்தேன். தெற்காசியப் பிராந்தியத்தில் யார் வல்லரசு என்பதை உலகுக்குக் காட்ட இரண்டு நாடுகள் போட்டிப் போட்டுக் கொண்டிருக்கின்றன. இந்தப் போட்டியில்தான் இலங்கைத் தமிழனின் தலை யெழுத்து சிக்கிக் கொண்டது. அந்த வகையில்தான் இந்தியாவைச் சுற்றியிருக்கும் நாடுகளை சீனா தன் வசப்படுத்திக் கொண்டிருக்கிறது.

இலங்கைக்கு ஆதரவு நிலை எடுத்து இன விடு தலைக்காகப் போராடிய புலிகளை தீவிரவாதிகள் என்று முத்திரை குத்திவிட்டது இந்தியா! சீனாவோ தேவையான ஆயுதங்களைக் கொடுத்து, திரிகோணமலையில் தன்னுடைய ராணுவ தளத்தை இலங் கையின் சம்மதத்தோடு நிர்மாணித்து, இந்தியாவுக்கு தக்க பாடம் புகட்ட முயற்சித்துக் கொண்டிருக்கிறது. இலங்கை, இந்தியாவையும் சீனாவையும் ஒருசேர ஏமாற்றிப் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறது. இதெல்லாம் ஒருபுறமிருக்க, இந்தியா... அமெரிக் காவின் கரங்களுக்குள் சிக்குண்டுவிட்டது. அல்கொய்தாவையும், விடுதலைப்புலிகளையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கும் அமெரிக்காவின் கண்மூடித்தனத்துக்கு இந்தியா தலையாட்டுகிறது. இந்த சூழ்நிலையைத்தான் எடுத்து வைத்துப் பேசினேன். 'இந்தியாவை நம்பிப் பயனில்லை' என்பதை வலியுறுத்தினேன். அது இந்தியாவுக்கு எதிரானதா... சாதகமானதா என்பதைப் பற்றியெல்லாம் நான் சிந்திக்கவில்லை!''

''இப்படி ஒரு மாநாட்டில் கலந்துகொள்ளச் செல்லும்முன், எம்.பி-யாகிய நீங்கள் உரிய முன்அனுமதியை பெற்றீர்களா?''

''ஐரோப்பா கண்டம் முழுமைக்கும் எம்.பி. என்ற வகையில் விசா பெறாமலேயே நான் பயணம் செய்யலாம். ஜெர்மனியும் அப்படித்தான். நான் இந்தப் பயணத் துக்காக யாரிடமும் அனுமதி கேட்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், முதல்வர் கலைஞரை சந்தித்து மாநாட்டுக்குச் சென்று வருவதாக அனுமதி வாங்கினேன். வாழ்த்துச் சொல்லி அனுப்பி வைத்தார்!''


''விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது பற்றியும் மாநாட்டில் பிரதானமாகஅலசப்பட்டதாமே?''

''மாநாட்டுக்கு வந்திருந்த ருத்ரகுமாரன், தலைவர் பிரபாகரன் மறைந்து விட்டார் என்ற நிலைப்பாட்டில் இருப்பவர். இன்னும் பலரும் அதே நிலைப்பாட்டில்தான் மாநாட்டில் கலந்து கொண்டார்கள். ஆனால், அந்த நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ளும் நிலையில் புலம் பெயர்ந்த தமிழர்கள் இல்லை. தலைவர் பத்திரமாக இருக்கிறார் என்ற நம்பிக்கை எனக்கும்கூடஇருக்கிறது. தலைவர் பிரபாகரன் தலைமையில் ஈழத்தில் ஐந்தாம் கட்டப் போர் வெடிக்கும். அதுவும் விரைவில் நடக்கும். அமெரிக்காவும் இந்தியாவும் செய்த சதியின் விளைவு தான் தலைவர் மறைந்தார் என்று வரும் வதந்திகள்! இதை நான் ஆணித்தரமாகப் பேசினேன். 'உங்கள் பேச்சை நம்புகிறோம். தலைவர் இருக்கிறார்' என்று கூட்டத்திலிருந்து எழுந்த ஒருமித்த குரல் அடங்குவதற்கு வெகு நேரம் ஆனது!''


''பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று சொன்னதை ருத்ரகுமாரன் ஏற்றுக் கொண்டாரா? அதைப் பற்றி அவர் பேசும்போது ஏதும் விளக்கம் கொடுத்தாரா?''

''நான் தனியாக ருத்ரகுமாரனிடம் வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது தலைவர் உயிரு டன் இருக்கிறாரா என்ற வாதமும் வந்தது. 'நான் எந்த இடத்திலும் தலைவர் மறைந்து விட்டார் என்று சொல்ல வில்லை. நேதாஜியைப் போலத்தான் தலைவரை நாம் பார்க்க வேண்டும். தலைவர் கண்டிப்பாக இருக்கிறார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது' என்று என்னிடம் சொன்னார் ருத்ரகுமாரன்...''


''சரி, ஒரு உள்ளூர்க் கேள்வி.. இடைத்தேர்தலில் அ.தி.மு.க. அணி போட்டியிடப் போவதில்லை என்று சொல்லியிருப்பது பற்றி?''

''ஜெயலலிதாவை விடுங்கள். அண்ணன் வைகோவும், மருத்துவரய்யாவும் அந்தம்மா முடிவுக்கு தலையாட்டியதுதான் எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. உலகம் முழுவதுமே தேர்தல் என்றால் அத்துமீறலும், ஊழலும்தான் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. நேர்மை தவறி பிரசாரம் செய்து தி.மு.க. வெற்றி பெறும் என்று நீங்கள் வீட்டைப் பூட்டி ஒளிந்து கொண்டால், அது ஜனநாயகத்துக்கு அழகல்ல. அ.தி.மு.க. எதையும் சளைக்காமல் எதிர்கொள்ள வேண்டும் என்பதுதான் அவர்களுக்கு நான் வைக்கும் வேண்டுகோள்!''

- எஸ்.சரவணகுமார்

நன்றி : ஜீனியர் விகடன் 09.0809

0 கருத்துகள்:

கருத்துரையிடுக