தமிழ் ஈழம் கோரிக்கை தோற்றுவிடவில்லை: திருமா




விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி.யின் 48 வது பிறந்த நாளையொட்டி நேற்று தமிழர் எழுச்சி நாள், எழும் தமிழ் ஈழம்' இன விடுதலை அரசியல் மாநாடு சென்னையில் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் பேசிய திருமா,

'எழும் தமிழ் ஈழம்' என்ற பெயரில் இன விடுதலை அரசியல் மாநாடு நடத்துகிறோம். விளம்பர தட்டிகளைத் தான் காவல்துறையினர் கிழிக்க முடியும். எங்கள் எழுச்சியை அழிக்க முடியாது. நாம் இந்த இயக்கத்தை கட்டுப்பாடாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும். நம்மை சீண்டுகிறார்கள். அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது.

அடக்கி ஒடுக்கப்பட்ட சமூகம் இன்று அதிகாரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. மத்திய உளவுத் துறையினர் மாநாட்டை நடத்த விடாமல் சீர்குலைத்துவிட வேண்டும் என்று கருதி பேனர்களை கிழித்து எறிந்தார்கள். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. எழும் தமிழ் ஈழம் என்பதில் என்ன தவறு இருக்கிறது.

இந்திய அரசு தமிழினத்திற்கு துரோகம் செய்துவிட்டது என்று பாராளுமன்றத்தில் பேசினேன். நாம் எடுத்துக் கொண்ட நிலையில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டோம். தமிழ் ஈழம் கோரிக்கை நின்றுவிடவில்லை, தோற்றுவிடவில்லை. அந்த கோரிக்கை இருந்து கொண்டே இருக்கும் என்பதற்கு தான் இந்த மாநாடு.

ஓராண்டுகளாக ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்காக போராடிய கட்சி விடுதலை சிறுத்தைகள். உலகத் தமிழர்களுக்கு தீங்கு நேர்ந்தால் உயிரை விடவும் தயாராக இருப்போம். பிரபாகரன் இல்லை என்று ராஜபக்சே சொல்கிறார். ஒரு இயக்கத்தை அழித்து விட்டதாக சொல்கிறார். பிரபாகரன் இல்லை என்றால் இலங்கை பாராளுமன்றத்திலே சொல்ல வேண்டியது தானே? இறப்பு சான்றிதழ் இந்தியா கேட்கிறதே, தர வேண்டியது தானே? அவர் இருக்கிறார், மீண்டும் வருவார், மீண்டும் ஈழ விடுதலை போர் நடக்கும். இந்த உணர்வை தமிழகத்திலே அடைகாப்பது தான் திருமாவளவனின் கடமை.

இறையாண்மைக்கு கட்டுப்படுவோம், அதற்காக ஈழத் தமிழர்களை அழிக்கிற துரோகத்தை தோலுரிக்காமல் இருக்க முடியாது. அந்த துரோக செயலை நாம் இருக்கிற இந்தியா செய்திருக்கிறது. ஈழ விடுதலைக்காக குரல் கொடுப்பதும், சாதி ஒழிப்புக்காக போராடுவதும் தான் நமது முக்கிய நோக்கமும், இந்த மாநாட்டின் முக்கிய செய்தியுமாகும்.

தனித் தமிழ் ஈழத்தை சர்வதேச நாடுகள் அங்கீகரிக்க வேண்டும்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

இலங்கையில் முள்கம்பி வேலிக்குள் அடைத்து வைத்திருக்கும் 3 லட்சம் தமிழர்களை அவரவர் வாழ்விடங்களில் குடியமரச் செய்ய விடுதலை செய்ய வேண்டும் என்று இலங்கை அரசை அனைத்து நாடுகளும், ஐ.நா.வும் வலியுறுத்த வேண்டும்.

தமிழர் பகுதிகளில் சிங்களர்களை குடியமர்த்துவதை தடுத்து நிறுத்த வேண்டும். தனித் தமிழ் ஈழத்தை சர்வதேச நாடுகள் அங்கீகரிக்க வேண்டும். அமெரிக்க, இந்திய அரசுகள் விடுதலை புலிகளை பயங்கரவாத பட்டியலில் இருந்து விலக்கி அங்கீகரிக்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

(சுருக்கிய வடிவம் மட்டுமே - முழு உரை & காணொளி விரைவில்)


****

0 கருத்துகள்:

கருத்துரையிடுக