தேர்தலுக்குபின் அதிமுக, பாமக, மதிமுக மவுனம் ஏன் திருமாவளவன் கேள்வி?
மக்களவை தேர்தலுக்கு பின்னர் அதிமுக, பாமக, மதிமுக ஆகிய கட்சிகள் இலங்கை தமிழர்கள் குறித்து பேசாதது ஏன் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திரு.தொல் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பல்வேறு கட்சிகளை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்து 500 பேர் வடபழனி பெ.ஜெயபால் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணையும் விழா சென்னையில் இன்று நடைபெற்றது. சென்னை அசோக் நகரில் உள்ள அண்ணா சமூகநலக்கூடத்தில் நடைபெற்ற விழாவில் கட்சியின் தலைவர் திரு.தொல்.திருமாவளவன் முன்னிலையில் அவர்கள் தங்களை விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைத்துக் கொண்டனர். கட்சியில் இணைந்தவர்களை வாழ்த்தி வரவேற்ற திரு.தொல்.திருமாவளவன் பின்னர் விழாவில் பேசும் போது, மக்களவை தேர்தலுக்கு பிறகு அதிமுக, பாமக, மதிமுக ஆகிய கட்சிகள் இலங்கை தமிழர்கள் குறித்து பேசியதுண்டா என்று கேள்வி எழுப்பினார். தேர்தலுக்கு முன்பு ஒரு முறை போராட்டம் நடத்திய செல்வி ஜெயலலிதா, தேர்தலுக்கு பிறகு ஒரு முறையாவது பேசியதுண்டா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இலங்கை தமிழர்களுக்கு மத்திய அரசு துரோகம் இழைத்து விட்டது என்று மக்களவையில் தாம் பேசியதாக குறிப்பிட்ட அவர், இலங்கை தமிழர்கள் குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என்று தாம் கேட்டுக்கொண்டதையும் சுட்டிக்காட்டினார். இலங்கை பயணத்தின்போது முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் தங்களை சொந்த இடங்களில் குடியமர்த்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டதாக அவர் தெரிவித்தார். இலங்கை பயணத்தின்போது டக்ளஸ் தேவானந்தா தமது அருகில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டதை தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சிகள் கொச்சைப்படுத்தியதாக அவர் கூறினார். திருமாவளவன் யார் என்பது எதிரியான ராஜபக்சேவுக்கு தெரிகிறது என்றும் ஆனால் தமிழக அரசியல் கட்சிகளுக்கு தெரியவில்லையே என்றும் அவர் தெரிவித்தார். ஆளும் கூட்டணியில் இருந்து கொண்டே இலங்கை தமிழர்களுக்கு தாம் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாகவும், ஆனால் எதிர்க்கட்சியினர் வாய் மூடி மவுனியாக இருப்பதாகவும் அவர் கூறினார். அதிமுகவைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் இலங்கை தமிழர்களுக்காக மக்களவையில் ஒரு முறையாவது பேசியதுண்டா என்று அவர் கேள்வி எழுப்பினார். தாம் இலங்கை சென்றிருந்த போது அவை நாகரிகம் கருதியே தம்முடைய முழு உணர்ச்சிகளையும் வெளிகாட்ட முடியவில்லை என்று அவர் கூறினார். இலங்கையில் தமிழர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாமை தாம் படம்பிடித்துள்ளதாகவும் திரு. திருமாவளவன் தெரிவித்தார்.
.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக