''எனக்கு எதிர்ப்பு பிடிக்கும்!'' - திருமா

ளும் அணியில் அங்கம் வகித்தாலும், எதிர்க்கட்சிகளுடன் இணைந்திருந்தாலும் எதிர்நீச்சல்காரர் திருமாவளவன். அடங்க மறுப்பார். அத்துமீறுவார். எப்போதும் சீறிக்கொண்டே இருக்கும் சிறுத்தை இவர்!

-

''அடங்க மறு... அத்து மீறு...
திமிறி எழு... திருப்பி அடி!

நான் எழுப்பிய இந்த நான்கு முழக்கங்கள்தான் போராட்டக்காரனாக அடையாளப்படுத்தி உங்கள் முன்னால் உட்காரவைத்திருக்கிறது. அடக்கப்பட்ட சமூக மக்கள், தங்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய உரிமைகளைச் சலுகைகளாக யாசித்துப் பெற்ற காலம் ஒன்று இருந்தது. அது ஏதோ பிச்சைப் பொருளாக வழங்கப்பட்டது. ஆனால், தங்கள் உரிமைகளை அடித்துப் பறித்தால் மட்டும்தான் முழுமையானதாகப் பெற முடியும் என்பதுதான் இன்றைய யதார்த்தம். எனவேதான், எதிர்ப்பு என்னுடைய ரத்தம் கலந்த குணமானது.

ஆடுகள் எல்லாவற்றுக்கும் தலையாட்டும். சிங்கம் சீறும். இதை உன்னிப்பாகக் கவனித்த அம்பேத்கர் சொன்னார், 'ஆடுகளைத்தான் பலியிடுகிறார்கள்... சிங்கங்களை அல்ல'. தலையாட்டிப் பொம்மைகளுக்கு இந்தச் சமூகத்தில் எந்த மரியாதையும் கிடையாது என்பதை நன்கு உணர்ந்தவன் நான். 'நன்றி கொன்றவர்களால் நீ ஒதுக்கப்பட்டாலும், உனக்கு உரிய சிறப்பு மறுக்கப்பட்டாலும் திருப்பித் தாக்கிடும் உன் போர்க் குணத்தை நழுவவிடாதே' என்று எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால் அம்பேத்கர் சொன்னதுதான் என் ஆதியும் அந்தமும்.

18 ஆண்டுகளுக்கு முன்னால் சிறு இயக்கமாகத் தொடங்கப்பட்ட விடுதலைச் சிறுத்தைகள், இன்று தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்திருக்கிறது. இதற்கு வேரும் விழுதுமாக அமைந்தவை அதன் எதிர்ப்பு உணர்வுதான். மகாராஷ்டிரா மரத்வாடா பல்கலைக்கழகத்துக்கு அம்பேத்கர் பெயர் வைக்கக் கூடாது என்று பால்தாக்கரே மிரட்டிக்கொண்டு இருந்தார். அதைக் கண்டித்து மதுரை ரயில் நிலையத்தில் மறியல் தொடங்கினேன். திடீரென்று அவசியமே இல்லாமல் போலீஸ் எங்களது தோழர்கள் மீது தடியடி நடத்தியது. ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாக 50 பேர் ரத்தம் ஒழுக உதைக்கப்பட்டார்கள். இதைப் பார்த்த எங்களது தொண்டர்கள் உணர்ச்சியால் போலீஸின் சட்டையைப் பிடித்து அடிக்க ஆரம்பித்தார்கள். அநியாய அக்கிரமத்தை கலர் சட்டை செய்தால் என்ன... காக்கிச் சட்டை செய்தால் என்ன? அடித்தால் திருப்பி அடிக்கலாம் என்பதை மதுரை வீதியில் நிரூபித்தோம். அதுவரை போலீஸைப் பார்த்தால் பயந்து நடுங்கிய சமூகத்தில், சாமி என்று அழைத்த மக்கள் முன்னால் பதிலடிதான் நம்முடைய மொழி என்று நிரூபித்தோம்.

விடுதலைச் சிறுத்தைகளின் எதிர்ப்பலை ஆதிக்கச் சாதிகளுக்கு எதிராகவும் அரச வன்முறைக்கு எதிராகவும் கிளர்ந்தெழ ஆரம்பித்த பிறகுதான் அடக்குமுறைகள் கொஞ்சம் அடங்க ஆரம்பித்தன. நீ உன்னுடைய கோபத்தை ஓர் இடத்தில் காண்பித்தால், அது அங்கு மட்டுமல்ல, அதைப் போலவே அநியாயம் நடக்கும் மற்ற இடங்களையும் சேர்த்தே மாற்றுகிறது. மதுரை கரும்பாளையில் தலித் சமூகத்துக்குச் சேர வேண்டிய நிலத்தை 25 ஆண்டுகளாக தனியார் ஒருவர் தன்வசப்படுத்தி வைத்திருந்தார். அதைப் போராடிப் பறித்த பிறகு, இது போல் வைத்திருந்த ஏழெட்டு மனிதர்கள் தங்களது ஆக்கிரமிப்புகளை அமைதியாக விட்டு விலகினார்கள். பொது இடத்தில் நடக்கக் கூடாது, பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுக்கக் கூடாது, கோயிலுக்குள் நுழையக் கூடாது, ஒரே குவளையில் டீ குடிக்கக் கூடாது என்பன போன்ற கட்டுப்பாடுகளைக் கெஞ்சிக் கெஞ்சி ஒழிக்க முடியாது. பலவந்த எதிர்ப்பால் மட்டும்தான் உடைக்க முடியும்.

இது சில நேரங்களில் வன்முறையாக மாறும். அதைத் தவிர்க்க முடியாது. எதிர்ப்பு என்பதே வன்முறை கலந்த வார்த்தைதான். ஆனால், வன்முறை என்ற வார்த்தையை வித்தியாசப்படுத்திப் பார்க்க வேண்டும். ரவுடித்தனத்தையும் நான் சொல்வதையும் போட்டுக் குழப்பிக்கொள்ளக் கூடாது. எந்தப் பொது நோக்கமும் இல்லாமல் சுயநலத்துடன், உள்நோக்கத்துடன் சில போக் கிரிகள் செய்யும் வன்முறை வேறு. பொது நோக்கத்துடன் ஒரு சமூகம் தன் னுடைய அடக்குமுறையை எதிர்த்துப் போராடும் போது வெடிக்கும் வன்முறை வேறு. இந்தியாவின் விடுதலை வேள்வியின்போது கிளர்ந்தெழுந்த மக்கள் நடத்திய தாக்குதல்களை யாரும் வன்முறை என்று கொச்சைப்படுத்த முடியுமா? அது நாட்டு விடுதலை என்றால், நாங்கள் நடத்துபவை சமூக விடுதலை.

எதிர்ப்பில் பிறந்து, எதிர்ப்பில் வளர்ந்து, எதிர்ப்பில் வாழ்ந்த மூன்று தலைவர்களை இந்த இடத்தில் நினைத்துப் பார்க்கிறேன். முதலாவது மனிதர், அம்பேத்கர். சாதியின் காரணமாக அடக்கப்பட்ட தன்னுடைய தனி வாழ்க்கையை எதிர்த்துக் கிளம்பி, அதுவே தலித் மக்களின் தலைவிதியாக இருப்பதை உணர்ந்து எதிர்க் குரலை எழுப்பியவர். ஆதிக்கச் சக்திகளின் அத்தனை முகங்களையும் ஒருசேர எதிர்த்தவர் அவர். ஏக இந்தியாவும் மகாத்மா என்று கொண்டாடிய காந்தியால்கூட தனது சாதி இழிவுகளைத் துடைக்க முடியாது என்று தெரிந்ததும் அவரையே எதிர்த்தார். ''விரைவில் மறைந்துபோகும் மாய உருவங்களைப் போல மகாத்மாக்கள் என்பவர்கள் பெரும் பரபரப்பைக் கிளப்பிக்கொண்டு வருகிறார்கள். ஆனால், அவர்களால் எந்த உயர்வும் ஏற்படவில்லை என்பதை வரலாறு கூறுகிறது'' என்று காந்திக்கு முன்னால் உட்கார்ந்துகொண்டு முகத்துக்கு நேராகவே தன் எதிர்ப்பைப் பதிவு செய்தவர் அம்பேத்கர். எல்லாப் பீடங்களையும் தகர்த்தது அம்பேத்கரின் எதிர்ப்பு.

அடுத்து நான் சொல்வது, பெரியாரை. யாரைத்தான் நான் எதிர்க்கவில்லை என்று கேட்டவர் அவர். 'இந்தச் செயல் செய்ய எனக்கு யோக்கியதை இருக்கிறதோ இல்லையோ, யாரும் அதைச் செய்ய முன்வராததால் செய்தேன்' என்று துணிச்சலாகக் களம் இறங்கியவர் பெரியார். அவர் நடத்திய போராட்டங்கள், முதுமையிலும் அவர் காட்டிய துணிச்சலான எதிர்ப்புகள் இன்றைய இளைஞர்கள் படிக்க வேண்டிய பாடப் புத்தகங்கள்.

மூன்றாவதாக என் கண் முன்னால் வருகிறார் மாவீரர் பிரபாகரன். இரண்டு முறை அவரைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஆன்ம பலம் மட்டும் இருந்தால் ஒரு நாட்டை மட்டுமல்ல, 20 நாடுகளையும் ஒரே நேரத்தில் எதிர்க்க முடியும் என்று காட்டிய தலைவர் அவர். 'திண்ணியத்தில் நடந்த சாதிக் கொடுமையைத் தாங்கிக்கொண்டு எப்படி இருக்கிறீர்கள்?' என்று கேட்டார் பிரபாகரன். 'இல்லை, திருப்பி அடித்துக்கொண்டு இருக்கிறோம்' என்றேன். 'உங்களுக்கு இங்கே ஒரு அண்ணன் இருக்கிறான் என்ற தைரியத்தில் எதிர்த்துப் போராடுங்கள்' என்று அவர்தான் என்னை முன்னிலும் வேகமாக முடுக்கிவிட்டார்.

எந்த அடக்குமுறை மிரட்டல்கள் வந்தாலும் ஏற்றுக்கொண்ட கொள்கையை விட்டுத்தர மாட்டேன். ஆளும் கூட்டணியில் அங்கம் வகித்தாலும் இந்திய அரசாங்கத்தின் தமிழர் விரோதப் போக்கைக் கண்டிப்பதில் முதல் ஆளாக இருக்கிறேன். நடுத்தெருவில் அல்ல... நாடாளுமன்றக் கட்டடத்திலேயே என்னுடைய எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறேன். பட்டப் பகலில்... வெட்டவெளியில் ஓர் இனத்தை அழித்தொழித்த காட்டுமிராண்டிச் சிங்களவனுக்குத் துணை போன துரோகம் மன்னிக்க முடியாது என்பதை எல்லா மேடைகளிலும் சொல்லி வருகிறேன். இடம், பொருள், அரசியல் சூழல், தொகுதிப் பங்கீடு பார்த்து நான் பேசுவதில்லை. எதிர்ப்பு என்பது இது எதையும் பார்க்காமல் கொடுமை நடந்தவுடன் பீறிட்டுக் கிளம்ப வேண்டும். நிர்பந்தங்கள் எல்லாக் காலங்களிலும் இருக்கும். அதைப் பார்த்தால் எதையும் எதிர்க்க முடியாது.


மீண்டும் சொல்கிறேன், ஆடுகளைத்தான் பலியிடுகிறார்கள். சிங்கங்களை அல்ல!''


நன்றி : ஆனந்த விகடன் (21-10-2009)

0 கருத்துகள்:

கருத்துரையிடுக