போர்க்குற்றவாளியாக ராஜபக்செவை விசாரணை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்!






போர்க்குற்றவாளியாக ராஜபக்செவை விசாரணை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்!

சர்வதேச போர்க்குற்றவாளியாக ராஜபக்செவை அறிவிக்கவேண்டும் என்று வலியுறுத்தி விடுதலைச்சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது. சென்னை மெமோரியல்ஹால் முன்பு  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் தொல்.திருமாவளவன் தலைமைவகித்தார்.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் பேசிய தொல். திருமாவளவன்,

"நாங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் வலியுறுத்தும் கோரிக்கைகளே எங்கள் கட்சியின் நிலைப்பாடு. இதற்கும் சமீபத்திய இலங்கைக்கு பயணம் செய்த இந்திய நாடாளுமன்ற குழு சமர்பித்த அறிக்கைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.

நாடாளுமன்ற அறிக்கையில் கூறுப்பட்டது அனைத்தும் உண்மையே. நாடாளுமன்ற குழுவின் பயணத்தைத் தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கையாக இந்த கோரிக்கைகளை விடுதலை சிறுததைகள் கட்சி முன்வைக்கிறது. அதே தருணத்தில் நான் இலங்கைக்குச் சென்று, எம்முடைய தொப்புள் கொடி உறவுகளைச் சந்தித்து, ஆறுதல் கூறியபோது, அங்குள்ளவர்கள் ஒருமித்த குரலில் தெரிவித்த கருத்து என்னவெனில், தம்மைத் தமது சொந்த இடத்திலேயே மீள குடியமர்த்தவேண்டும் என்பதே.

அதே தருணத்தில் இந்திய அரசுக்கு ஒரு கோரிக்கையை முன் வைக்கிறோம். எக்காரணத்தை முன்னிட்டும், ஈழத்தமிழர்களின் மறுவாழ்வுக்கென்று கூறி, இலங்கை அரசுக்கு நிதி உதவி அளிக்கக்கூடாது. காரணம் அவை யாவும் முறையாக ஈழத்தமிழர்களுக்குச் சென்றடைவதில்லை என்பதை கண்கூடாக நான் கண்டிருக்கிறேன். எனவே நேரடியாகத் தமிழ் மக்களுக்கு உதவுவதே நல்லது. தற்போது அறிவித்துள்ள 500 கோடி ரூபா நிதி உதவியை விடுதலை சிறுத்தை கட்சி வரவேற்கவில்லை" என்றார்

இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார், பொதுச்செயலாளர் கா.கலைக் கோட்டுதயம், பொருளாளர் முகமது யூசுப், மாவட்டச் செயலாளர் கபிலன், தலைமை நிலையச் செயலாளர்கள் வன்னியரசு, பாவரசு, பாவலன், வீரமுத்து, இளஞ்செழியன், கிள்ளிவளவன், வழக்கறிஞர் பிரிவு  எழில்கரோலின், செய்தித் தொடர்பாளர் ஆர்வலன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்

இந்த ஆர்ப்பாட்டத்தில் 5000 க்கும் மேற்பட்ட விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் கலந்துகொண்டனர்.

ஆர்பாட்ட படங்கள் 
.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக