புது தில்லியில் விடுதலைச் சிறுத்தைகள் கண்டன ஆர்ப்பாட்டம்

மீனவர்களுக்கு எதிரான சட்டம்:


புது தில்லியில் விடுதலைச் சிறுத்தைகள் கண்டன ஆர்ப்பாட்டம்
தொல். திருமாவளவன் அறிவிப்பு

மீனவப் பெருகுடி மக்களின் வாழ்வாதார உரிமைகள் கடுமையாகப் பாதிக்கும் வகையில் இந்திய அரசு மீன் பிடிக்கும் தொழில் தொடர்பாக புதிய சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளது. "கடல் மீன்பிடி தொழில் மற்றும் ஒழுங்குமுறைச் சட்டம்' என்கிற இந்திய அரசின் இச்சட்டம் இந்திய மீனவர்களின் கடல் உரிமைகளை வெகுவாகப் பாதிக்கச் செய்கிற அச்சத்தை உருவாக்கியுள்ளது. குறிப்பாக இந்திய மீனவர்கள் 12 கடல் மைல்களுக்கு அப்பால் மீன்பிடிக்கக் கூடாது என்றும் மீறினால் கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்றும், ரூபாய் பத்தாயிரம் மதிப்பு அளவிலான மீன்களைப் பிடிக்கும் படகுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் பல்வேறு கெடுபிடிகள் இச்சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இத்தகைய சட்டப் பிரிவுகள் ஆழ்கடல் மீன்பிடிப்பைத் தடை செய்வதோடு மீனவச் சமூகத்தின் பாரம்பரிய உரிமைகளைப் பறிக்கும் வகையில் அமைந்துள்ளன. எனவே இச்சட்டம் அறிமுகப்படுத்தப்படுவதை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாக எதிர்க்கிறது. அத்துடன் இச்சட்டத்தை இந்திய அரசு திரும்பப் பெற வேண்டுமெனவும் வற்புறுத்துகிறது. எமது கோரிக்கையை பொருட்படுத்தாமல் இந்திய அரசு இச்சட்டதை நிறைவேற்றுமேயானால் அதனைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தில்லியில் நடத்தப்படும். தமிழக மீனவ அமைப்புகளையும் ஒருங்கிணைத்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துவோம் என விடுதலைச் சிறுத்தைகள் எச்சரிக்கிறது.

இவண்

- தொல். திருமாவளவன்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக