தமிழீழமே தீர்வு: தமிழகத்திலும் பொதுவாக்கெடுப்பு!

தமிழீழமே தீர்வு:
தமிழகத்திலும் பொதுவாக்கெடுப்பு!


உலகெங்கும் பரந்துவாழுகிற புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள், தங்களுக்கான ‘நாடுகடந்த தமிழீழ அரசு’ தொடர்பாக ஆங்காங்கே பொதுமக்கள் வாக்கெடுப்பு நடத்திவருகின்றனர். அத்துடன், ஈழத்தந்தை செல்வா, காலத்தில் நிறைவேற்றப்பட்ட ‘வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை’ ஆதரிக்கும் வகையில் இன்றைய புலம்பெயர்ந்த தமிழர்களின் மனநிலையை அறியும்பொருட்டும் ‘பொதுவாக்கெடுப்பு’ நடந்து வருகிறது.

அண்மையில் நார்வே மற்றும் ஃபிரான்சு ஆகிய நாடுகளில் நடைபெற்ற வாக்கெடுப்பில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று வாக்களித்துள்ளனர். நார்வேயில் 98 விழுக்காடு மற்றும் ஃபிரான்சில் 99 விழுக்காடுஅளவிலும் பொதுமக்கள் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்துள்ளனர். அதாவது, ஈழத்தமிழர்களுக்கு நிலையான பாதுகாப்பு தமிழீழ விடுதலை மட்டுமே என்பதை மீண்டும் மக்கள் இத்தகைய வாக்கெடுப்பின் மூலம் மறுஉறுதி செய்துள்ளனர். ஈழச்சிக்கலுக்கு ஒரே தீர்வு - இறுதித் தீர்வு தமிழர்களின் இறையாண்மையினைப் பாதுகாப்பதற்கான தமிழீழ விடுதலை மட்டுமே!

இத்தனை இழப்பிலும் ஈழமக்கள் சோர்வடையாமல், சலிப்படையாமல், தமிழீழத்தை வென்றெடுக்க வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாகவுள்ளனர்.

சிங்கள அதிபருக்கான தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் தங்களுக்குள் வாக்கெடுப்பு நடத்தி தமது ஒற்றுமையை வெளிப்படுத்தியிருப்பது மிகுந்த ஆறுதலையளிக்கிறது. ஈழத்தமிழினத்தின் இந்த உறுதிமிக்க உணர்வுகளை- விடுதலைவேட்கையை, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் யாவும் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். தமிழீழத் தேவையை இந்திய அரசு புரிந்து கொள்வதோடு அதனை அங்கீகரிக்கவும் முன்வரவேண்டும்.

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை - நாடுகடந்த தமிழீழ அரசை விடுதலைச்சிறுத்தைகள் முழுமையாக வரவேற்று ஆதரிக்கிறது. அத்துடன், தமிழகத்திலும் அத்தகைய பொதுவாக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக விடுதலைச்சிறுத்தைகள் முன்முயற்சிகளை மேற்கொள்ளும்!


இவண்
தொல்.திருமாவளவன்

1 கருத்துகள்:

வரவேற்கிறேன்,தமிழகத்தில் வாக்கெடுப்பு நடத்துவதே மிக சரி.

15 டிசம்பர், 2009 அன்று 4:02 AM comment-delete

கருத்துரையிடுக